முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ச் சமூகத்தின் விருப்பங்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

May be an image of text that says 'f M என்டிடிவி தமிழ்நாட்டை வெல்லப்போவது யார்? தமிழ்நாடு திமுக+ அதிமுக+ தவெக பீப்பிள்ஸ் பல்ஸ் 125-145 மேட்ரிஸ் 65-80 மற்றவை ரிபப்ளிக் 18-24 பி மார்க் 2-6 87-110 10-12 0-6 65-85 122-132 125-145 சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் 145-160 145 160 ஜேவிசி-ன டைம்ஸ் நவ் 16-26 1-6 50-65 13-18 75-95 5-8 128-147 8-15 0 POLL PSLLS' 

நான் அடுத்துச் சொல்லப் போவதெல்லாம் வெளியாகியுள்ள கணிப்புகளின் அடிப்படையிலே.

அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் சராசரியை எடுத்தால் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 120 இடங்களும், அதிமுக 80 இடங்களும் த.வெ.க 8-12 இடங்களும் பெறுகிறார்கள். அதாவது திமுகவினர் 2021 தேர்தலில் இருந்து ஒரு பின்னடைவைச் சந்தித்தாலும் ஆட்சியைத் தக்க வைக்கிறார்கள். வலுவான எதிர்க்கட்சி ஒன்று அமைகிறது. அதிமுக திமுகவுக்கு நெருங்கி வருகிறது. மற்றபடி அதிமுகவை த.வெ.க காலி பண்ணிவிட்டு இரண்டாவது இடத்தைப் பெறும் என்பது வெறுங்கனவாகிறது. அடுத்து 5-15 ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒன்று அதிமுக முன்னேறி வந்து திமுகவைத் தாண்டிச் செல்லும் அல்லது த.வெ.க தன்னைத் தக்க வைத்து 25-30 இடங்களைப் பெறும் மூன்றாவது அணித் தலைமைக் கட்சியாகும்.
பொதுவாக சமூகத்தில் வரும் மாற்றங்கள் ஊடகங்களில் பெருக்கிச் சொல்லப்படுவதைப் போல ஊழிப்பேரலையாக வருவதில்லை. 1930களில் நீதிக்கட்சி தேர்தலில் நின்று வென்ற போது அது 17 வருடங்களாக ஆதிக்கம் பண்ணிய கட்சியாக இருந்தது. பின்னர் வந்த தேர்தல்களில் நீதிக்கட்சி தோற்று காங்கிரஸ் ஆட்சியமைத்து தி.க உருவாகி வளர்ந்து திமுக தோன்றி மெல்ல மெல்ல ஆட்சியைக் கவர 40 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. அலைகள் ஏற்கனவே உள்ள அலைகள் மீது தோன்றி மேலேறி வருமே அன்றி தனியாக சூன்யத்தில் இருந்து தோன்றுவதில்லை. புதிய மாற்றங்கள் (emergent) வரும்போது பழைய போக்குகளும் சமூகத்தில் வண்டலாக (residue) இருக்கும், படிவங்களாக போக்குகள் ஒன்றன் மீது ஒன்று படிந்து பிரித்தறிய முடியாதபடி கலவையாக இருக்கும் என்று பண்பாட்டு ஆய்வாளர் ரெய்மெண்ட் வில்லியம்ஸ் கூறுகிறார். இப்போக்குகளில் சில ஆதிக்கப் போக்குகளாகவும், சில புதிதாக எழுகிறவையாகவும், மீதமுள்ளவை ஏற்கனவே இருந்தவற்றின் எச்சப் போக்குகளாகவும் இருக்கும் என்கிறார். அதனாலே பின்நவீனம் தோன்றும்போது நவீனப் போக்குகளும் இருந்தன, மரபான எண்ணஙக்ளும் கூடவே செயல்பட்டன. இன்று நாம் குறிப்பிடுகிற பின்னைக் கருத்தியல் போக்குகள் (post-ideology) த.வெ.கவை விசையுற வைக்கின்றன என நாம் கூறினாலும் கருத்தியல் போக்குகளும் (திராவிட கட்சிகள்) பழமையான சிந்தனைகளும் (சாதி, தமிழ்த் தேசியம், தமிழ் மரபு, மதம் - நா.த.க மற்றும் சாதிக் கட்சிகள்) கூடவே சேர்ந்தே சமூக அசைவுகளைத் தீர்மானிக்கின்றன. அதாவது, கருத்தியலுக்குப் பிந்தைய வெற்றுக் கவர்ச்சி அரசியல், வெற்றுக் குறிப்பான்கள், இன்னும் ஆதிக்கப் போக்காகவில்லை.
இன்னொரு விசயம் இப்போக்குகளிலும் எவை ஆதிக்கப் போக்குகள் என்று இத்தேர்தலை வைத்துக் கூட யாராலும் நிச்சயமாகச் சொல்ல இயலாது என நினைக்கிறேன். வெல்லக் கூடிய கட்சியின் வாக்குகளை ஒரு புதிய அலை சிதறடிக்கிறது எனில் அந்த அளவில் இரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என்று மட்டுமே சொல்ல இயலும். பாலினம், வயது, வெவ்வேறு பகுதிகள் சார்ந்து இந்த ஆதிக்கமும், புதுமையும், பழமையும் மாறுபடுகின்றன. த.வெ.க ஆதரவாளர் திமுக, அதிமுகவை பழமையென்று கருதலாம். பொதுப் பார்வையாளர் சீமானையும் மதவாதிகளையும் பழமையான மரபின் அடையாளம் எனக் கருதலாம். வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு வர இயலாது.
முக்கியமான படிப்பினை: மாற்றங்களும் ஏற்கனவே உள்ள போக்குகளும் ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய முயன்று கீழ்மட்டத்தில் புரண்டு புரண்டு ஏறி விழுந்து கொண்டிருக்கும்; மேலே ஏதோ ஒன்று ஆரவாரித்து விழும். இவை கலந்ததே சமூக விசை தோன்றுகிறது. மேலும், எந்தப் போக்கும் உடனடியாகத் தோன்றி ஆதிக்கம் செய்யாது. ஆதிக்கம் செய்பவை தொடரப் போவதில்லை. பின்னடைவு கொள்பவைக் காணாமல் போவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...