முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் - 17

 

ஒரு நாவல் நம் விரல் நுனியில் இருந்து தோன்றவில்லை. அது நம் அனுபவச் சேகரிப்பில் இருந்து மட்டும் வரவில்லை. ஒரு நாவல் நம் மொழிக்குள் இருந்து அசலாக எழுந்து வருகிறது.
நம் மொழியே நம் மனம். ஆக, நாம் நாவலை எழுதுகையில் நம் மனத்தையே எழுதுகிறோம். மனத்தின் ஒரு பகுதியை நாவலாகக் கட்டமைக்கிறோம். அது தன்னையே படைக்கும் ஒரு படைப்பு. நாவலை அவ்விதத்தில் கனவுடன் ஒப்பிடலாம். நாம் ஒரு கனவைக் ‘காண்கிறோம்’.
ஆனால் கனவு எழும்போது அது தன்னையே படைக்க ஆரம்பிக்கிறது. அது ‘தான்’ அதுவரைக்கும் எப்படியெல்லாம் இருந்தோமோ எனக் கருத்திற்கொண்டு அப்படியெல்லாம் இருக்க முடியுமோ, இருக்கக் கூடாதோ அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து தன்னையே கற்பனை செய்து படைக்கிறது. அதனால்தான் நாம் ஒரு கனவில் சிக்கியிருக்கையில் அவ்வளவு திகைப்பாக அதை உணர்ந்தபடியே கவனிக்கவும் செய்கிறோம். நாம் கனவிலும் இருக்கிறோம், கனவு நம்மில் இருந்து வளர்வதையும் கண்டு திகைக்கிறோம். கனவு நம்மில் இருந்து தோன்றவும் செய்கிறது, அது நமக்குள் இருந்து நம்மையே படைக்கவும் செய்கிறது.
எனக்குள் இருந்து நாவலை எழுதுகிறவர் ஒரு படைப்பாளியா அல்லது என் நாவலே ஒரு ‘படைப்பாளிதானா’? என் நாவலே ஒரு படைப்பாளி எனில் நான் அங்கு என்ன செய்கிறேன்? நான் அவருக்காக என் உடலால் ஒரு பலிச்சடங்கைச் செய்கிறேனா? நான் என்னையே அதற்கு வார்க்கிறேனா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னதான் நாவலைத் தொடர்ந்து எழுதுவது என்னை ஒரு மிதமிஞ்சிய நிறைவுணர்வில் வைக்குமென்றாலும், அதில் ஒரு ஒப்பற்ற இன்பமும், உலகத்துப் பிரச்சினைகளும், அன்றாடத்தின் அழுத்தமும் என்னை அண்ட விடாத ஒரு அனுபூதி எப்போதும் இருக்குமென்றாலும் மொத்தமாக புத்தகத்தை நிறைவு செய்ததும் நான் என் மனத்தின் ஒரு பகுதியையும் என் உடல் நிலையின் ஒரு பகுதியையும் அதற்காக நேர்ச்சை வைத்துவிட்ட ஒரு குறைவான உணர்வே எனக்கு இறுதியில் இருக்கும். கடைசி அத்தியாயத்தை நான் எழுதி முடித்ததும் நான் நோயில் விழுவதில்லை. ஆனாலும் எதுவோ ஒன்றை இழந்திருக்கிறேன் - தூலமாக இதுதான் என்று சொல்ல முடியாத ஒன்றை, எனக்கு மட்டும் புலப்படுகிற, என்னால் பிறரிடம் விளக்க முடியாத ஒன்றை.
நாவலை நாமே படைக்கிறோம் என்றால் அதை எழுதி முடித்ததும் அதை இழப்பதாக உணர மாட்டோம். நாம் நம் நாவலை இழக்கவில்லை. அது நம் கணக்கில்தான் வருகிறது. புத்தகமாக வெளியானதென்றால் அது நம்முடைய சாதனைகளில் ஒன்றாகிறது. ஆனாலும் எதை இழந்ததாக உணர்கிறோம்? நாவலை எழுதுகையில் கிடைத்த ஒரு பெரும் போதையையா, அதன் மிதப்பையா? எனில் அந்த தக்கையான உணர்வு ஏன் வரவேண்டும்? அந்த தடுமாற்றம், எதிலும் பொருந்திப் போக முடியாத தத்தளிப்பு? நம் மனம் குறித்து நாம் உருவாக்குகிற கோட்பாடுதான் நாவல் எனில் நாம் அக்கோட்பாட்டையே இழக்கிறோம். மீண்டும் நம் மனத்தை எதையோ கொண்டு தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும். அதனாலே நாவலைத் தீவிரமாக எழுதி முடித்தவர்கள் சட்டென மன அழுத்தத்திற்குள் விழுகிறார்கள்.
நாவலை நாம் எழுதினால் இப்பிரச்சினை வராது. நாவல் நம்மை எழுதுவதாலே அது கழன்று சென்றதும் இவ்வளவு நம்மை அலைகழித்து ஒரு வெறுமையில் கொண்டு தள்ளுகிறது.
நாவல் நம்மையே எழுதுவதால்தான் அதில் நிகழும் பல மேஜிக்குகள் எப்படி வந்தன என்று நம்மால் சொல்ல முடியாமல் போகிறதா? அதனால்தான் அது ஏன் சரியாக அமைந்து வரவில்லை என்று தெரியவில்லையா?
நாவலாசிரியரும் நாவலும் ஒன்று எனில் வாசிப்பவர்? வாசிக்கையில் அவரிடத்து இருந்தும் வாசிப்பின் சமகாலத்தில் உருவாகும் ஒரு நாவல்தான் நாவலை வாசிக்கிறதா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...