முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ருத்துராஜின் தலைமை

 


நேற்றைய சி.எஸ்.கே போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சன் ரைசர்ஸ்ஸ் அணி ஒரு சிரமமான ஆடுதளத்தில் கொஞ்சம் நெருக்கடியான நிலையில் இருந்தார்கள். கிளாஸன் வந்தது ஒரு முக்கியமான தருணம். அவர் அவுட் ஆகியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருக்கும். அவர் கிட்டத்தட்ட ரன் அவுட் ஆக வேண்டியது. தட்டுத்தடுமாறி தப்பித்தார். அவரை அது எரிச்சலூட்டியது. "என்ன இது! நம்ம ரேஞ்சுக்கு இப்படி டொக் டொக் என்று டொக்கு வைத்து ஒற்றை ஓட்டம் எடுக்கவே சிரமப்படவா?" என்று நினைத்து அவர் நூர் அஹமதை குச்சிகளை விட்டு இடத்தை உருவாக்கி மட்டையை நேராக வீசி பவுண்டரி அடித்தார். அப்போதுதான் அவர் அந்த ஆடுதளத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை உணர்ந்து கொண்டார். டைமிங் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் இப்படித்தான் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுக்க முடியாதபடி களத்தடுப்பு அமைய அவர் பந்தைத் தூக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த அதிரடி ஓட்டங்களே சன் ரைசர்ஸுக்கு ஒரு செலுத்துவிசையை அளித்தது. ஒருவேளை களத்தடுப்பாளர்கள் ஒற்றை ஓட்டத்தை அவருக்குக் கொடுத்திருந்தால் அந்த அடியைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்றும் கூட நினைத்தேன். கிளாஸனின் ஈகோ சீண்டப்பட்டது சன் ரைசர்ஸுக்கு மறைமுகமாக உதவியது. ஆனால் சி.எஸ்.கேயின் முக்கியமான தவறு அதுவல்ல - பந்து வீச்சுத் தேர்வுதான்.

கிளாஸன் சுழல் பந்தை செமையாக அடிக்கக் கூடியவர். சர்வதேச போட்டிகளிலே பலமுறை அவர் இந்திய சுழல் பந்தாளர்களைத் துவம்சம் பண்ணிப் பார்த்திருக்கிறேன். அவர் வந்ததும் பந்து என்னதான் நின்று வந்தாலும் ருத்துராஜ் அவர் சுழலர்களை விளாசுவதைக் கண்டதும் உடனே வேக வீச்சாளர் ஒருவரைக் கொண்டு வந்து பவுன்சர்கள், வைடான பந்துகள் என வீச வைத்திருக்க வேண்டும். முகேஷ், ஜான்ஸன் என யார் வேண்டுமானாலும் அந்த நேரத்தில் ரன் ரேட்டை இறக்கி அழுத்தத்தைப் போட்டிருப்பார்கள். ஆம், நூர் அஹமதின் பந்தில் மிட் விக்கெட்டில் கிளாசனின் ஒரு கேட்சை விட்டார்கள். அதேநேரம் அந்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை கிளாசன் அடிக்கச் சிரமப்படவில்லை. சரியாக மட்டையில் படவில்லை. அவ்வளவுதான். ருத்துராஜ் அப்போது பார்த்து கிளாஸனுக்கு சுழல் பந்தைக் கொடுப்பது சேட்டன்களுக்கு பரோட்டா பீப் கொடுப்பதைப் போன்றது என உணர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து புதிய வியூகத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரோ மேட்ச் அப் என்று சொல்வார்களே அதில் மோசமாகச் சொதப்பி விட்டார். சுழல் பந்து பரோட்டாவைக் கிளாஸன் கறியில் போட்டுத் தொய்த்து எடுத்து சாப்பிட்டு முடித்துவிட்ட பின் வேக வீச்சாளர்கள் வந்தபோது தட்டு காலியாகி விட்டிருந்தது. விளைவாக சி.எஸ்.கே ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வி. குவாலிபையருக்குப் போகும் வாய்ப்பு கிட்டத்த பூஜ்யம்.

ருத்துராஜின் பிரச்சினை அவரால் சரளமாக ரன் அடிக்க முடியாதது. இதனால் அவரது தன்னம்பிக்கை குலைந்து விட்டது. நெருக்கடியான் நேரத்தில் புத்திசாலித்தனமாக புது விசயங்களை முயல்வதற்கு மூளை இயங்க மாட்டேன் என்கிறது. பயத்தில் உறைந்து போகிறார். ரிஸ்க் எடுக்காமல் ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தின் படி கள அமைப்பு, பந்து வீச்சுத் தேர்வு எல்லாம் செய்கிறார்.
அணிக்குள் சாம்சனின் தேர்வும் அவரைத் தொந்தரவு செய்கிறது என நினைக்கிறேன். கண்முன்னால் ஒரு போட்டியாளர் இருக்க அவரால் எப்படி தன்னம்பிக்கையுடன் தலைமை தாங்க முடியும்?

கிளாஸன் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார்தான். எங்குமே இல்லாத இடத்தில் இருந்து எப்படி தன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்!

ருத்துராஜ் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் தலைமை தாங்குவதற்கு மின்னணு எந்திரத்தில் மோசடிதான் செய்ய வேண்டும். ஆனால் இருங்கள் கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக மின்னணு எந்திரம் இல்லையே!

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
CSK ல தோனியை விடுவிப்பதற்கே இன்னும் 2 வருடம் ஆகும். ருத்ராஜ் - அய் நீக்குவதற்கு இன்னும் 5 வருடம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...