நேற்று இரண்டாவது முறையாக ரவி மோகனின் பத்திரிகையாளர் சந்திப்புக் குமுறலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன்னால் மனதைக் குவித்து நடிக்க முடியாததால் விவாகரத்து முடியும்வரை புதிய படத்தில் நடிக்கப் போவதில்லை எனக் கூறுவதையும் அதை அடுத்து ஒரு பத்திரிகையாளர் அவரிடம் அவர் தன் மனதை இயல்பாக்கி தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருவதையும் "சத்தியமா என்னால முடியலீங்க" என்று சொல்வதையும் கவனித்தேன். இது ஒரு முக்கியமான பிரச்சினை. நான் என் விவாகரத்தை எதிர்கொண்ட காலத்தில் வேலைக்குச் செல்வது ஒரு நல்ல கவனச்சிதறலக இருந்தது என்றாலும் சில நாட்களில் நான் ஒரு தீவிர கொதி நிலையில் இருப்பேன். யாரைப் பார்த்தாலும் மூக்கில் ஒரு குத்து விடலாமோ என்றிருக்கும். கோபம் ஒரு வியாதியாகவே எனக்குள் தோன்றியிருந்தது. கட்டுப்படுத்த முடியாத சினம். எவ்வளவு வெளியே கொட்டினாலும் உள்ளுக்குள் கடலைப் போல ஆர்ப்பரிக்கும் சினம். இன்னொரு பக்கம் எந்தக் கணமும் அழக் கூடிய நிலையில் இருப்பேன். சில நேரங்களில் வகுப்பை முடித்து அழுதுகொண்டே வருவேன். வகுப்பில் அழக் கூடியதாக ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் வகுப்பு முடிந்து களைப்பு மேலிடும்போது எதாவது ஒரு நினைவு வந்து மனதை ஆக்கிரமிக்கும். உடைந்து அழுவேன். வேலையிடத்தில் அழுவது அவமானகரமாக இருக்கும். வேலையிடத்தில் நெருக்கடி கடுமையாக இருந்தால் இத்தகையோர் எதாவது தவறு செய்து வேலையை இழக்கும் வாய்ப்பதிகம். ஒரே சமயம் வேலையையும் விவகாரத்தையும் சமாளிக்க முடியாமல் திணறுகிற ஆண்களை நான் அச்சமயம் சந்தித்தேன். அவர்களுடன் உரையாடினேன். நேரமின்மை, பணப் பற்றாக்குறை, மனதில் வலுவின்மை, ஆதரிக்க யாரும் இல்லாத தனிமை. சிலர் மன அழுத்தத்திற்குள் சென்று விடுவார்கள். சிலர் போதை அடிமை ஆவார்கள். ரவி மோகன் தன் மணிக்கட்டைத் தான் அறுத்து தற்கொலைக்கு முயன்ற தடயத்தைக் காட்டினார். நானும் தற்கொலைக்கு அப்போது முயன்றிருக்கிறேன். இப்போது நினைத்தால் அபத்தமாக இருக்கிறது என்றாலும் தனிமனிதர் மீது இறையாண்மை செலுத்தும் மறைமுக வன்முறை இது எனும் கோணத்தில் பார்க்கையில் பெரிய வியப்பு ஏற்படுவதில்லை. இந்த இடத்துக்கு ஒருவரை நகர்த்துவதே அரசாங்க அமைப்புகளின் உத்தேசம். தற்கொலை ஒரு தனிமனிதரின் பலவீனம் அல்ல. அது இறையாண்மை உங்களைத் திட்டமிட்டு வன்முறை செலுத்தி அச்சுறுத்தி கொண்டு சேர்க்கிற இடம். அங்கு நீங்கள் சென்றுவிட்டால் எத்தகைய பேரத்துக்கும் பணிந்து விடுவீர்கள். அரசின் கொடுங்கோன்மைக் கரங்களில் ஆகக்கொடூரமானது நீதிமன்றம்தான். விவாகரத்து நடைமுறையானது அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியென்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும்.
பலரும் விவாகரத்தை ஒரு உறவு முறிதலாக, உறவுப் பிரச்சினையாக, தனிப்பட்ட விவகாரமாகவே பார்க்க விரும்புகிறார்கள். அது அறியாமை மட்டுமே. பிரிவுக்கும் விவாகரத்துக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு - பிரிவு அந்தரங்கமானது. விவாகரத்து ஒரு அரசியல் நிகழ்வு. இவ்வித்தியாசம் உடலுறவுக்கும் பலாத்காரத்துக்குமான வித்தியாசமும்தான் அதாவது பிரிதல் இயல்பாக சுலபமாக துன்பங்கள் இன்றி நடந்தேற முடியும். அது ஒரு நிம்மதியாகக் கூட இருக்கும். ஆனால் விவாகரத்து ஒரு வன்முறை. அது பணத்துடனும் பழிவாங்குதலுடனும் சம்மந்தப்பட்டது. விவாகரத்தை சட்டத்தின் உதவியுடன் ஒரு தேசமே முன்னின்று நிகழ்த்துகிறது. போலீஸ், வக்கீல், நீதிபதி என உள்ளே வர அது ஒரு தண்டனையாகவே மாறுகிறது. இதற்கென ஒரு வதை நடைமுறையையே வக்கீல்கள் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் முதலில் ஒரு டெம்பிளேட் விவாகரத்து கோரும் மனுவை எடுத்து தூசு தட்டுவார்கள். அதில் மனைவியின் சொத்தைக் களவாண்டார், அவரை மனரீதியாகத் துன்புறுத்தினார், அவரை வேலைக்குப் போக விடாமல் தடுத்தார், வரதட்சிணை கேட்டுத் துன்புறுத்தினார், அவருடன் பாலுறவு கொள்ளும் ஆண்மை இல்லாதவராக இருந்தார், அடிக்கடி சண்டை போட்டு அடித்தார், சொந்த வீட்டை விட்டு வெளியேற்றினார், பிற பெண்களிடன் கள்ள உறவு கொண்டிருந்தார், சொந்தக் குழந்தையைப் பலாத்காரம் செய்தார் … இப்படி இருக்கும் நீண்ட பட்டியலில் தேவையான பாக்ஸ்களை டிக் செய்து பெயர், முகவரி, தேதியைச் சேர்த்து நிமிடத்தில் மனுவைத் தயார் செய்து விடுவார் (செய்யறிவில் போட்டால் நொடிகளில் வந்துவிடும்). மனைவி முழு சைக்கோவாக இல்லாவிட்டால் அப்படியே அந்த டெம்பிளேட் மனுவை ஒப்பமிட்டுக் கொடுத்துவிடுவார். அல்லாவிடில் வக்கீல்கள் கொடுக்கும் இந்த டெம்பிளேட்டில் அவர் சில கதைகளைக் கூடுதலாகச் சேர்ப்பார். மனைவி தன் மீது கொடுத்திருக்கும் இந்த வக்கிரமான மிகுகற்பனை மனுவைப் படித்து கணவர் அதிர்ச்சி அடைய வேண்டும் என்பதே வக்கீலின் உத்தேசம். எதிரியை முதலில் தாக்கி அதிர்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதுதானே யுத்த தந்திரம். இந்த மனுவைப் படிக்கவே ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” / பாலாவின் “நான் கடவுள்” போல பயங்கர வக்கிரமாக இருக்கும். இவ்வளவு கொடூரமா, இன்னும் கொடூரமா, இதைவிடக் கொடூரமா என்று போகும். கணவருக்கு ரோஷம் ஏற்பட்டு கோபம் தலைக்கு மேல் ஏறினால் அவர் பதில் மனுவில் இதைவிடக் கொடூரமான சில கற்பனைகளைச் சேர்ப்பார் (என் மனைவி நூறு ஆண்களுடன் உறவு வைத்திருந்தாள், அவள் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் கழுத்தை ஆக்ஸா பிளேடால் அறுக்க முயன்றாள் … இப்படி). கடைசியில் வழக்கு நீதிமன்றம் போகும்போது நீதிபதி சலிப்பில் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு இருவரையும் கவுன்சிலிங் அனுப்பி விடுவார். உருட்டுக் கட்டையால் அடித்தான், கட்டிப் போட்டு பலாத்காரம் செய்தான், பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினான், சொந்த மகளை பலாத்காரம் செய்தான், பட்டினி போட்டான், நள்ளிரவில் தெருவில் துரத்தினான் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவரையும் சாட்டியவரையும் “போங்க கவுன்சிலிங்” என்று ஒரு அறைக்குள் அனுப்புவதே பயங்கர அபத்தமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். கிரிமினல் நீதிமன்றம் என்றால் இம்மாதிரி புகார்களுக்கு எல்லாம் விசாரணை, பயங்கரமான பிரிவுகளில் வழக்குப் பதிவு என்று நடவடிக்கை இருக்கும். ஆனால் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆரம்பத்தில் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் நீதிபதியே இதே டெம்பிளேட்டில் பல லட்சம் வழக்குகளைப் பார்த்திருப்பார். அங்கு குவியும் மனுக்களை மொத்தமாக எடுத்து மலையாகக் குவித்தால் கூட எல்லாமே ஒரே போலத்தான் இருக்கும். குற்றச்சாட்டுகளில் 1% தான் உண்மையிருக்கும். ஒரு பக்கம் அதிர்ச்சிக்குள்ளாக்கி பயமுறுத்துவது (கெட்ட போலீஸ்) இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தைக்குத் தூண்டுவது (நல்ல போலீஸ்) என்பதே குடும்ப நீதிமன்ற நடைமுறை.
குழந்தையைப் பிரிப்பது, சொந்த வீட்டில் இருந்து ஆணைத் துரத்துவது எல்லாம் அடுத்தடுத்த கட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள். யோசித்துப் பார்த்தால் இவை உளவியல் வதை உத்திகள் என்பது தெளிவு. ஆனால் நீதிமன்றம் இப்படித்தான் திட்டமிட்டு இவ்வழக்குகளை நடத்துகிறது. இவை யுத்த தந்திரங்கள் என்று யாரும் விவாகரத்தைச் சந்திக்கும் ஆணுக்கு ஆலோசனை வழங்குவதில்லை. ஆகையால் அவர்கள் இதை ஆரம்பத்தில் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். தன் மீது எப்படிப் பொய்க் குற்றச்சாட்டு சொல்லலாம் என்பதே அவர்களை மிக அதிகமாகத் துன்புறுத்தும். எப்படிப் பொய் சொல்லலாம், நான் என்ன தவறு செய்தேன் என்றே ரவி மோகன் திரும்பத் திரும்பக் கேட்கிறார். அண்மையில் நடந்த இந்தியா பாக் யுத்த நரேட்டிவ்களுடன் ஒப்பிடிருந்தால் அவருக்கு சற்று நிம்மதி கிடைக்கும். ரெண்டிலும் ஒரே நரேட்டிவ் தான் - பாகஸ்தானை தூள்தூளாக்கி விட்ட்டோம் என்று இந்திய ஊடகங்களும் இந்தியா வரைபடத்திலே இல்லாதபடி அழிக்கப்பட்டுவிட்டது என்று பாகிஸ்தான் ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருந்தன அல்லவா, இன்னொரு பக்கம், பாகிஸ்தான் நம் மக்களைக் கொன்றழித்து விட்டது என்று இந்தியாவும் இந்தியா எங்கள் மக்களை லட்சக்கணக்கில் குண்டு வீசிக் கொல்கிறது என்று பாகிஸ்தானும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும். யார் யாரை அடித்தார்கள், உண்மையிலே சண்டை நடக்கிறதா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. விவாகரத்திலும் இப்படி பொய்களில் புரண்டு கொண்டிருப்பார்கள். அவரைப் போன்றே வழக்காடிக் கொண்டிருக்கும் பத்து பேர்களிடம் பேசினாலே எல்லா மனுக்களும் ஒன்றுதான், இது ஒரு மோசடி என விளங்கும். என்னுடைய நாயின் பெயர் புத்தா. நீங்கள் ஒரு வக்கீலைப் பார்த்து உங்கள் கணவர் பெயர் புத்தா, அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கேட்டால் பெயர், முகவரி ஆகியவற்றையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு புத்தா உங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தினார், வேலைக்குப் போக விடாமல் தடுத்தார், பண மோசடி செய்தார், பல பெண்களுடன் உறவில் இருந்தார் என்று ஒரு மனுவைக் கொடுத்து விடுவார். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் எண்ணைப் பதிவு செய்து என்னுடைய நாய்க்கு சம்மன்ஸ் அனுப்பி விடுவார்கள். ஆனால் என்னுடைய நாய்க்கு தன் மீது இப்படி பகிங்கர குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள் என்பது கடைசி வரைப் புரியாது. நான் சொல்வது பொய் அல்ல, இது சாத்தியமே. நீதிமன்றத்திற்கு உண்மை முக்கியமல்ல. நடைமுறையே முக்கியம்.
ரவி மோகன் விசயத்தில், அவருக்கு எதிராகப் பணம் கொடுத்து சில யுடியூப் வாயர்களைப் பேச வைத்ததுடன் டுரோல்களையும் ஆயிரக்கணக்கில் எழுத வைத்திருக்கிறார்கள். இதை ஏதோ ஒரு நிறுவனம் பெரிய தொகையொன்றை வாங்கிக் கொண்டு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் அவரை இன்னும் அதிகமாக மனமுடைய வைத்திருக்கிறது. எப்படியும் இந்த விவாகரத்தின் முடிவில் கோடிக்கணக்கான செட்டில்மெண்ட் ஆகப் போகிறது. பணத்தை வைக்காமல் அவரை விட மாட்டார்கள். அவரும் எத்தனை வருடங்கள்தாம் படம் பண்ணாமல் இருப்பார். ஒரு கட்டத்தில் மசிந்து விடுவார். அதனால் முன்கூட்டியே டுரோல்களுக்கும் யுடியூபர்களுக்கும் முதலீடு செய்கிறார்கள். (ஒருவேளை வக்கீல்களே இந்த ஏற்பாடுகளைச் செய்யக் கூடும். அவர்களுக்கும் செட்டில்மெண்டில் 10% கட்டிங் உண்டே.)
ரவி மோகன் ஒரு விசயத்தை சரியாகச் சொல்கிறார் - “பணம், பணம், பணத்துக்காகத்தானே இதெல்லாம் செய்கிறார்கள். பணமென்று வந்ததும் ஆளாளுக்கு பெமினிஸ்ட் ஆகி விடுகிறார்கள். நானே ஒரு பெமினிஸ்ட்தான். ஆனால் என்னை பெமினிஸத்தை வைத்துத் துன்புறுத்துகிறார்கள்." பிரச்சினை பெண்ணியம் அல்ல, பெண்ணியத்தை இந்த பேரத்திற்காகப் பயன்படுத்துவது. சட்டத்தை, நீதிமன்றத்தை பேரத்திற்காகப் பயன்படுத்துவது. முதன்முதலாக இந்நடைமுறைக்குள் செல்பவர்களுக்கு அதுவரை தான் உயர்வாக, மதிப்பாகக் கருதிய ஒன்றை (சட்டம், நீதி, அறம், சமத்துவம் போன்ற விழுமியங்கள்) வெறும் பணத்துக்காகப் பயன்படுத்தி தன்னை மலினப்படுத்தி அவமதிக்கிறார்களே என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கும். ஒரு மோசடியைச் சட்டப்படி பண்ண முடியுமா என்பதுதான் தாங்க முடியாததாக இருக்கும். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் - ரியல் எஸ்டேட் துறையில் சில பெரும்புள்ளிகள் இப்படியான சட்டரீதியான மோசடிகள், துன்புறுத்தலைச் செய்து கொண்டே எதிர்க்கட்சியினர் பயந்து தடுமாறுகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நிலையிழந்ததும் பேசி சொத்தை எழுதி வாங்கிக் கொள்வார்கள். ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பிய பின்னர் அவர் அழுகிறாரா என்று அப்போதைய முதல்வர் சிறை அதிகாரியிடம் விசாரித்ததாகச் சொல்வார்கள். அந்த சிறை அறை அசுத்தமாக, எலிகள் ஓடுவதாக கேவலமாக இருந்தது. ஆனால் ஜெயலலிதா அழவில்லை. அவர் வெறியேற்றிக் கொண்டு அடுத்த தேர்தலில் வென்று இவர்களைச் சிறைக்கு அனுப்பி இவர்கள் அழுகிறார்களா என்று சோதித்தார். விவாகரத்திலும் அழுகிறார்களா என்றே கவனித்துக் கொண்டிருப்பார்கள். அழுதால் அடுக்க கட்டத்திற்கு நகரத் தயாராவார்கள். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரவி மோகன் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் கடுஞ்சினத்தில் இருந்தார். அதாவது அவர் தடுமாறி விட்டார். கையை அறுத்துக் கொண்டதாகச் சொன்னார். அதாவது விளிம்பு நிலைக்குச் சென்றுவிட்டார் (அவரது மாமியார் எப்படி கூலாக பேட்டியளித்தார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்). இந்தக் காணொளியைக் கண்டால் அவரது எதிர்க்கட்சி வக்கீல் கைத்தட்டுவார். அவர் அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பார். அவர் யாரைத் திட்டுகிறார், என்ன சொல்கிறார் என்பதெல்லாம் பொருட்டே அல்ல.
ஆனால் சில ஆண்டுகளில் ரவி மோகனுக்கு இது பழகிவிடும். அடுத்தடுத்த உறவுகளை இன்னும் எதார்த்தமாகக் கையாளும் முதிர்ச்சி அவருக்கு வந்துவிடும். ஒரு தேச இறையாண்மையின் அதிகாரம் ஒரு தனிமனிதரின் வாழ்க்கையில் கைவிட்டு மென்னியைப் பிடித்து நெருக்கினால் எப்படி இருக்கும் எனப் புரிந்து போகும். திரும்ப வேலை, வெற்றி என பிஸியாகி விடுவார்.
அப்போது அவருக்கு ஒரு மோசடி கும்பல் நம்மை ஏமாற்றிப் பணம் பிடுங்கி விட்டார்கள் என்கிற ஒரு உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கும். ஒரு உறவு என்பது சாராம்சத்தில் அதுதானே!
கருத்துகள்