முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாராலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டுக் காளை



வி.சி.க தவெக அமைச்சரவையில் இணைந்ததை வரவேற்று எழுதியுள்ள டி. தர்மராஜ் வெற்றுக் குறிப்பானை நிரப்புவதற்கான சிறந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது விஜய் ஒரு காலிக் குறிப்பான் என்று டி. தர்மராஜ் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இப்போது அதை தலித் அரசியலால், அல்லது அயோத்திதாசரியத்தால், நிரப்ப வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான தகுதி விசிகவிடம் மட்டுமே உண்டு என்று அவர் கூறுகிறார். இங்குதான் ஒரு பிரச்சினை வருகிறது - ஒரு வெற்றுக் குறிப்பானை அவ்வாறு நிரந்தரமாக, சாராம்சமாக நிரப்ப இயலாது என்று பின்னை மார்க்ஸிய கோட்பாட்டாளர் எர்னெஸ்டோ லேக்ளோவ் (Laclau) சொல்கிறார். அவரது Hegemony and Socialist Strategy எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"மூலகங்களில் இருந்து தருணங்கள் நோக்கிய நிலைமாற்றமானது எப்போதுமே நிறைவடைவது இல்லை."
“The transition from the ‘elements’ to the ‘moments’ is never complete.”
மூலகம் என்று அவர் சொல்வது வெற்றுக் குறிப்பானை. இந்த வெற்றுக் குறிப்பானை நேரடியாக நாம் ஒரு காலிக் கோப்பையாகப் புரிந்து கொள்ளலாகாது. இது ஒரு பொருள் அல்ல, ஒன்றை நாம் நம் இருப்பாக உணர்கிற நிலை. நான் ஒரு அரசியல் குறியீட்டைப் பார்க்கிறேன். அல்லது ஒரு கவிதையில் ஒரு வரியைப் படிக்கிறேன். அது இன்னதுதான் எனும் பொருளைக் கொண்டிருக்கும். ஆனால் அதையும் கடந்து அதற்குள் நுண்விபரங்கள் பொதிந்திருக்கும். ஒவ்வொன்றாக என் அனுபவத்தில் வெளிவரும். நான் அதை எதிர்கொள்ளும்போது அதை அல்ல, அதன் வெற்றுத்தன்மையைத் தான் அறிகிறேன். அதுவே என்னை மிகுந்த கிளர்ச்சியும் பரவசமும் (லக்கானிய பொருளில் jouissance) கொள்ள வைக்கிறது. இதனாலே டி. தர்மராஜ் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு வெற்றுக் குறிப்பான் உதாரணமாகக் காட்ட விரும்புகிறார். ஏனென்றால் காளை திமிறி ஓடிக் கொண்டே இருக்கும். வெற்றுக் குறிப்பானும் அப்படியே. ஆனால் அடுத்து தர்மராஜ் அவர்கள் ஒரு பிழையைச் செய்கிறார். இதை அவரது வேறு பல கட்டுரைகளிலும் நான் கண்டுள்ளேன். அவர் இக்காளையை ஒருவர் துணிந்து ஏறிக் கட்டுப்படுத்து முடிவதாகவும், 'அக்கணத்தை' இட்டு நிரப்புவதாகவும் கூறுகிறார். சரியான கருத்தியலைக் கொண்டு ஒருவரால் குறிப்பானை நிரப்பி சமூக விடுதலையைச் சாத்தியப்படுத்த இயலும் என அவர் நம்புகிறார். ஆனால் இது உண்மையல்ல. ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காமல் திமிறி ஓடிக் கொண்டே இருக்குமே அக்காளைதான் வெற்றுக் குறிப்பான். அதில் நீங்கள் எதை நிரப்பினாலும் அது சில நொடிகளில் உதறிவிட்டு ஓடிவிடும். அடுத்தடுத்து நிரப்பிக் கொண்டே இருக்க மட்டுமே உங்களால் முடியும். குறிப்பான் இதனால் ஒரேசமயம் நிரப்பப்பட்டதாகவும் வெற்றாகவும் நீடிக்கும். அதாவது நிபந்தனைக்குட்பட்டு மட்டுமே அதை 'நிரப்ப' இயலும். சாராம்சமாக அல்ல.
யோசித்துப் பாருங்கள் - விஜய்யின் மீது தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்தியல்கள் நிரப்ப்படும். அதனால் விஜய்யின் மீது பொருளியல் முதலீட்டை செய்வோருக்கு மட்டுமே லாபமிருக்கும். சமூக மாற்றம் விளைய முடியாது. ஏனென்றால் அதன் இயல்பே நீர்மைதான். அதனாலே லேக்ளோவ் நிலைமாற்றம் முடிவற்றது என்கிறார். அதாவது பத்தாண்டுகள் இப்படி, அதன்பின் அப்படி எனும் காலமாற்றத்தை அவர் சொல்லவில்லை. கணப்பொழுதின் மாற்றங்களை அவர் குறிப்பிடுகிறார்.
சொல்லப் போனால், இது ஒரு அசல் பின்நவீனத்துவ நிலை. இதனாலே பின்நவீனத்துவ எதிர்ப்பாளர்கள் இது நவ-பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்கிறார்கள். அதை விடுவோம். டி. தர்மராஜ் முன்வைப்பது ஒரு கற்பனை மட்டுமே என நான் நினைக்கிறேன். அவர் சொல்வதில் பாதி மட்டுமே சரி. நிரப்பலாம், ஆனால் நிரப்பி முடித்ததும் அது அங்கிருக்காது, மற்றொன்று வந்துவிடும்.
லேக்ளோவ் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் - பல்வேறு தரப்புகளின் மாறுபட்ட கோரிக்கைகளை (இஸ்லாமியர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தலித்துகள், தமிழ்ச் சூழலில் என்றால் 'திராவிடத்தால் கைவிடப்பட்டதாக உணரும் பிராமணர்கள்', மூடுண்ட கோபத்தில் தவிக்கும் ஜென் ஸி தலைமுறை, இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆதரவு அதிமுகவினர்) ஒன்றாக இணைக்கும் பாலமாக வெற்றுக் குறிப்பான் இருக்கும். இவர்கள் இடையே பொருத்தப்பாடின்மை இருக்கலாம். கொள்கை அளவில் அவர்கள் பரஸ்பரம் எதிர்க்கலாம். ஆனால் குறிப்பான் வெற்றாக உள்ளதாலே (அது எதையும் அறுதியாக ஏற்காததால்) இந்த முரண்களை அதனால் ஏற்றுக் கொள்ள முடியும். வடநாட்டில் இப்போது கரப்பான்பூச்சி கட்சி என ஒரு பகடிக் கட்சி தோன்றியுள்ளது. அதுவும் ஒரு வெற்றுக் குறிப்பானே.
இது நாம் வழக்கமாகப் புரிந்துகொள்ளும் 'கூட்டணி' அல்ல - ஒரு கணத்தில் விஜய் அயோத்திதாசர் ஆவார், அடுத்து பெரியார், அடுத்து மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர், உடனே புதிய கல்விக் கொள்கை ஆதரவாளர், அடுத்து ரௌடியை அமைச்சராக்கியவர், அதற்கு அடுத்து போலிச் செய்திகளைப் பரப்புபவர், அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒழிப்பவர், அதற்கு அடுத்து தமிழ்நாட்டின் ஒரே காவலர், மொழிக் காதலர், தமிழ் மண்ணின் கார்ல் மார்க்ஸ், இஸ்லாமிய சகோதரர், இந்துத்துவ ஆதரவாளர் இப்படியே போய்க் கொண்டிருப்பார். பத்து தலைகளுடன் நிற்கும் ராவணனாக இருப்பார். இத்தலைகளும் அடுத்தடுத்து கழற்றி வைக்கப்பட்டு புதிதாக தலைகள் வைக்கப்படும். மக்களாட்சி அரசியல் இனி இப்படியே இருக்கும் என்கிறார் லேக்ளோவ்.
இதன் சிக்கல் ஒரு நீடித்த வலுவான மாற்றம் இதன் இயல்பிலேயே சாத்தியமில்லை. ஏனென்றால் இதில் சாராம்சமான தலித் அடையாளமே இருக்க முடியாது (எந்த அடையாளமுமே இருக்க இயலாது). அயோத்திதாசர் ஒரு "வாம்மா மின்னல்" ஆகிவிடுவார். அந்த வந்து போகும் கணத்தில் சில விசயங்கள் சாத்தியமாகும். மறுக்கவில்லை. ஆனால் கூடவே "இடி மழையும்" தாம் வரும். சகோதரத்துவ சக்திகள் இணைந்து பேசும்போதுள்ள ஆற்றல் இருக்காது.
ஜல்லிக்கட்டுக் காளை தன்னைக் கைப்பற்றியவரை சில நொடிகள் பார்வையாளரிடம் காட்டுவது (அமைச்சர் பதவி அளித்தல்) ஒரு டோக்கனிஸமாக மாற சாத்தியம் உண்டு. இதைக் குறித்து ஸிஸெக் சொல்வது கவனிக்கத்தக்கது - என்னதான் ஒரு ஒற்றைக் குறிப்பான் முரண்பட்ட கருத்தியல்களை உள்வாங்கி சமநிலையைத் தரும் என்று லேக்ளோவ் நினைத்தாலும் பல சமயங்களில் பன்மைக் கலாச்சார அரசியல் ஒரு ஒற்றை அடையாளத்தின் (அதிகார மையத்தின் நீட்சி) தொடர்ச்சியை மறைக்கவே முன்வைக்கப்படுகிறது என்கிறார் அவர். தவெகவுக்கு பல்வேறு முரண்பட்ட நிலைப்பாடுகள் இருப்பினும் அது தொடர்ச்சியாக ஓடுகிற ஒரு பாதை இருக்கும். அது சென்று சேரும் இலக்கு இருக்கும் (மதவாதம், சாதிய மேலாதிக்கம், இந்து ராஷ்டிரம்). ஒருவேளை அப்படி இருக்கும்பட்சத்தில் இந்த வெற்றுக்குறிப்பான் என்பதே ஒரு உருமறைப்பு (camouflage) தானோ? தொடர்ந்து தலித்துகளுக்கு உச்ச பதவிகளில் இடமளிக்கும் பாஜக இதற்குச் சிறந்த உதாரணம். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர பாஜக முயன்ற போது அவர்கள் அமைதியாகத்தானே பார்த்திருந்தார்கள்? தலித்துகளின் பூர்வமதம் இந்து மதம் என்பதே மோடி, அமித் ஷாவின் நம்பிக்கை. அதையே அவர்கள் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள். தலித்தியம் இதை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம். குடியுரிமைச் சட்டம் இதை இன்னும் வலுவாக நிலைநிறுத்தும். வெற்றுக் குறிப்பான் அரசியலில் நியாயமாக இதையெல்லாம் பேசுவதற்கு, மேலாதிக்கத்தை சமரசம் பண்ண வைப்பதற்கு சாத்தியம் இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் அப்படி ஒன்றும் நடப்பதில்லை. வெற்றுக் குறிப்பான் அரசியல் மற்ற எல்லா அரசியல்களையும் போல அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் தனிநபர்கள் மௌனம் காக்கிற அரசியலாகவே நடைமுறையில் உள்ளது.
வெற்றுக் குறிப்பானாக நீடிக்க இயலாத சிக்கலை மட்டுமல்ல, ஒரேயடியாக சில காலம் உறைந்து போவதை அல்லவா இது காட்டுகிறது? ஒருவர் அதிகாரத்தை அடையும்போது அவரது நோக்கம் விடுதலை அல்ல, மேலாதிக்கத்தை தன் வசப்படுத்தி மேலாதிக்கமாகவே மாறுவதுதான். அப்போது கருத்தியல் நெகிழ்வுத்தன்மை சந்தர்ப்பவாதம் ஆகக் கூடும் அல்லவா? அங்கு வெற்றுக் குறிப்பான் மேலாதிக்கத்தை அடைவதற்கான கருவியாகக் கூடும் அல்லவா?
இச்சிக்கலை லேக்ளோவ்வும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் - தொடர்ச்சியான மாற்றங்களும் முடிவின்மையுமே மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் போராட்டம் என்கிறார்.

பி.கு: நான் ஏன் இக்கேள்வியை விசிகவிடம் வைக்கிறேன் என்றால் விசிக மட்டுமே அறத்தை, நீதியை, அறிவார்ந்த சிந்தனையைத் தன் இலக்காக வைத்துப் பயணிக்கிறது. அதுவே அக்கட்சிக்கு ஒரு ஒளியூட்டத்தைக் கொடுக்கிறது. நாம் அந்த ஒளியைக் கண்டதும் கைகூப்புகிறோம். இதுவே விசிகவின் சிறப்புத் தகுதி. இதுவே தொடர்ந்து திருமா முதல்வராக வேண்டும் என்று அறிவுத்தரப்பில் சிலர் கோருவதற்குக் காரணம். இயல்பாகவே, இதுவே அவர்களின் பலவீனமும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...