முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைவ உணவு எனும் புதிர்



சைவம் மட்டுமே உண்டு வருவோர் வயதானதும் மிகவும் தளர்ந்து போவதை அதிகமாகக் காண்கிறேன். இது போக பல நரம்பியல் சிக்கல்கள், தோல் பிரச்சினைகள், தசையிழப்பினால் வரும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. வைட்டமின் பி 12 இல்லாமை, omega-3 fatty acids, particularly eicosapentaenoic acid (EPA) மற்றும் docosahexaenoic acid (DHA) ஆகியற்றின் போதாமையால் இது நிகழும் என்கிறார்கள். இது ஏதோ நான் அரைகுறையாய் கவனித்துக் கண்டுபிடித்தது அல்ல. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review எனும் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வீகன் உணவுகள் இன்னும் மோசம் என்கிறார்கள்.

முக்கியமான காரணம்: நாம் வீடு, கார், பயணம் போன்ற உடைமைகள், வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. ஒருவர் பெரிய வீட்டில் வாழ்வார். வங்கியில் பணமிருக்கும். ஆனால் காலையில் உப்மாவோ இட்லியோ சாப்பிடுவார். வேக வைத்த காய்கறி, முட்டை, சிக்கன், பனீர், சீஸ் எல்லாம் அவருக்கு அதிகச் செலவாகத் தெரியும். அது மட்டுமல்ல சிலர் காரெடுத்துப் போய் வசந்த பவன் போய் இட்லி சாப்பிடுவார்கள். பொங்கலை முழுங்குவார்கள். அதற்கு ஆகும் பணத்தில் முட்டையும் கறியும் தாராளமாகச் சாப்பிடலாம். மீன் இன்னும் உன்னதமான உணவு. ஆனால் அதன் நாற்றம் காரணமாக சைவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு வருகிறது. ஆனால் மீனைத் தொடர்ந்து உண்டால் தோல் மினுமினுப்பாக இருக்கும். குழந்தைக்கு எட்டு வயதில் சோடாபுட்டி கண்ணாடி தேவையிருக்காது. நரம்புத் தளர்ச்சி வராது. என்ன பிரச்சினை என்றால் நாம் உணவை ஒரு கலாச்சாரமாகப் பார்க்கிறோம். இந்த சமூக மேல்நிலையாக்கம் சார்ந்த கலாச்சாரம் நம்மூரில் ஒரு பெரிய சிக்கல்.
என் நண்பர் ஒருவர் வேலை செய்யும் இடத்தில் சைவ உணவுக்காரர்கள் அதிகம். அவர் ஒருநாள் காலையில் மாட்டுக் கறி வறுவலை எடுத்துப் போய் காலையுணவாக அதைச் சாப்பிட கூடப் பணி செய்வோர் முகத்தை அஷ்டகோணலாக்க அவர் அதற்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டாம் என முடிவு செய்துவிட்டார். அறிவுள்ளவர்கள் இவர் சாப்பிடும் உணவில் எவ்வளவு புரதம், நல்ல கொழுப்பு உள்ளது, நாம் சாப்பிட்ட இட்லியில் என்ன இருந்தது என சத்துக்களின் அடிப்படையில் சிந்திப்பார்கள், ஆனால் கலாச்சார ரீதியாகப் பார்ப்பவர்கள் அடப்பாவி மாட்டையா காலையில் தின்கிறாய் என்பார்கள். இது நம் தட்டை காலியாக வைத்துக் கொண்டு பக்கத்தில் நன்றாகச் சாப்பிடுபவனைப் பழிப்புக் காட்டுவதற்குச் சமம். நல்ல உணவைத் தின்றால் உடலில் தினவு அதிகமாக இருக்கும், ஆற்றல் அதிகம் இருக்கும், நோய்கள் குறையும். உடற்பயிற்சியும் கூட இருந்தால் இத்தகைய அதிகப் புரத உணவுகள் 40 வயதுக்கு மேல் தசைகளை இழக்க அனுமதிக்காமல் வலுவாக வைத்திருக்கும்.

இதனாலே எனக்கு இஸ்லாமிய பண்டிகைகள் மீது கூடுதலான மரியாதை. அவர்கள் அதிகமாகப் புரதச் சத்தை எடுக்கிறார்கள். அவர்களுடைய டீக்கடைகளில் கூட அசைவ உணவு வந்துவிடுகிறது. இது நல்லது. ஒரே பிரச்சினை சோற்றுக்கு ஈடாக அவர்கள் காய்கறிகள் சாப்பிடுவது இல்லை என்பது. ஆனாலும் அது வெறும் சோறாகத் தின்னும் இந்துப் பண்டிகைகளை விட மேல். இது என் தனிப்பட்ட கருத்து அல்ல. அறிவியல் ரீதியாகச் சொல்கிறேன். எங்கள் ஊரில் கோயிலில் பிரசாதம் எல்லாம் பிரமாதமாக இருக்கும். மறுக்கவில்லை. ஆனால் என்ன கொடுக்கிறார்கள் என்று நுணுக்கமாகப் பார்த்தால் பயமாக இருக்கும். எதாவது பண்டிகை என்றால் தினமும் ஒரு பாயசம். எதாவது ஒரு இனிப்புப் பண்டம். அங்கு தினமும் கோயில் போய் இதையெல்லாம் தின்றால் நீரிழிவு, ரத்தக்கொழுப்பு, மாரடைப்பு, ஸ்டுரோக் நிச்சயம். இதற்குப் பதிலாக ஒருநாள் மீன் கறி, இன்னொரு நாள் நூறு கிராம் மாட்டுக்கறி, அடுத்த நாள் 100 கிராம் சிக்கன் இதையெல்லாம் நம் கோயில்களில் கொடுத்தால் பக்தர்கள் ஆரோக்கியம் பெருகும். மீண்டும் சொல்கிறேன் - நான் இதை ஒரு நாத்திகனாகச் சொல்லவில்லை. அறிவியல் பூர்வமாகவே சொல்கிறேன்.

நல்ல சத்தான உணவின் மீது அருவருப்பே வரக் கூடாது. ஆனால் பௌத்தம், ஜைனத்தின் வளர்ச்சியின் விளைவாக இந்து மதமும் புலால் உண்ணாமையைத் தம் வசமாக்க அதன் மீது சாதியப் படிநிலையும் கட்டி எழுப்பப்பட இன்றுள்ள குழப்பமான சூழலில் வந்து நிற்கிறோம்.
இதன் பொருள் சைவ உணவே உட்கொள்ள முடியாது என்பதல்ல - வைட்டமின்னும் பிற ஊட்டச்சத்துக்களும் மாத்திரைகளாக உட்கொள்ளக் கூடியவைதாம். ஆனாலும் எந்தளவுக்கு உடலில் இவை சேரும் என்பதில் நிச்சயமில்லை. இது மட்டுமல்ல, இந்த ஊட்டச்சத்துக்கள் நம் குடலில் உள்ள நல்ல நுண்ணியிர்களையும் பெருக வைக்கும். நல்ல கொழுப்பும் நிறைய காய்கறிகளின் நார்ச்சத்தும் குடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். மாத்திரைகளால் அதைச் செய்ய இயலாது.

அதனால்தான் எனக்கு சைவ உணவுப் பழக்கம் நம்மூரில் முன்பு தோன்றிய சாதி, மதப் போட்டிகளின் விளைவாகவும் பஞ்சம் காரணமாகவும் விளைந்த ஒரு விபத்து என நினைக்கிறேன். அதைப் பிடித்துத் தொங்க வேண்டியதில்லை. மாட்டால் வெறுமனே புல்லையும் தழையையும் சாப்பிட்டு புரதத்தை உற்பத்தி செய்ய இயலும். அதற்கான ஆற்றல் அதன் உடலில் உண்டு. நமக்கு அது இல்லை. பண்பாட்டு மேலுருவாக்கத்துக்காக, அல்லது வெட்டி பந்தாவுக்காக, அல்லது சிறுவயதுப் பழக்கம் காரணமாக நம் உடலை ஏன் இப்படி வருத்துகிறோம் என்பது எனக்குப் புரியாத புதிர்.

பி.கு: மேற்சொன்ன வியாதிகள் சைவ உணவால் மட்டுமே வருகிறது என்று நான் கூறவில்லை.

மேலும் தெரிந்து கொள்ள
Clemente-Suárez VJ, Redondo-Flórez L, Martín-Rodríguez A, Curiel-Regueros A, Rubio-Zarapuz A, Tornero-Aguilera JF. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review. Nutrients. 2025 Feb 28;17(5):884. doi: 10.3390/nu17050884. PMID: 40077754; PMCID: PMC11901473.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...