முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போராட்டங்களும் தொழில்சார்ந்த பிரதிநுத்துவமும்


 

தமிழ்நாட்டு துப்புரவுப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஏதோ சமூகத்தின் விளிம்பில் நடப்பதாகப் பாவிப்பது நல்லதல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கத்தினர் மட்டும் இதில் ஆர்வம் காட்டினால் போதாது. ஏனென்றால் குறைந்தபட்ச ஊதியம், அதைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் பின்னர் வேறுவகையான தொழிலாளர்களையும் பாதிக்கப் போகிறது - கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலையிலும் ஐ.டி உட்பட்ட பிற நிறுவனங்களிலும் வேலை நேரத்தை அதிகரித்து ஊதியத்தைக் குறைக்க அனுமதிக்கும்படி அரசை இந்தியாவின் பல நகரங்களில் தனியார் நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே பொருளாதார வீக்கம், அழுத்தம், அதனால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலையுயர்வு, வேலையின்மை உள்ளதால் அரசு இதற்குச் செவி சாய்க்காமல் உள்ளது. இன்னொரு புறம் அரசும் நேரடியாக வேலைக்கு ஆளெடுக்காமல் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைகிறது. இதனாலே மேற்சொன்ன துப்புரவுப் பணியாளர் சிக்கல்கள் தோன்றுகின்றன. எப்போதெல்லாம் அரசு ஒப்பந்தம் போடுகிறதோ அங்கெல்லாம் ஊழல் தோன்றும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு குறையும். எதிர்காலத்தில் அரசு செலவைக் குறைக்கும் நோக்கில் செய்வதாகச் சொல்லி ஊழியர்கள் எல்லாரையுமே ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றும். (அமெரிக்காவில் டிரம்ப் அதை நோக்கித்தான் நகர்ந்தார்.). அடுத்து தனியார் ஊழியர்களின் வேலை நேரம் அதிகரித்து ஊதியமும் குறைக்கப்படும். இதனால் சந்தைப் பணப்புழக்கம் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டு பணவீக்கம் அதிகரித்து விலைவாசி பல மடங்கு அதிகரிக்கும். வரும் ஆண்டுகளில் பொருளாதாரத் தேக்கம் ஏற்படும் என்கிறார்கள். ஆகையால் எப்போதெல்லாம் சாத்தியமாகுமே அப்போதெல்லாம் இத்தகைய தொழிலாளர் போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபாடு காட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் இப்பிரச்சினைகள் நம்மை நோக்கியே அடுத்து வரவிருக்கின்றன. அரசுக்கு வலுவான ஒரு சேதி செல்ல வேண்டும் - நமது சினிமா போன்ற ஊடகங்கள் நீண்ட காலமாகவே போராட்டங்களை எதிர்மறையாகச் சித்தரித்து வருகின்றன. அல்லது புரட்சி, மாற்றம் என மிகைப்படுத்துவார்கள். ஏனென்றால் அந்த முட்டாள்களுக்கு போராட்டங்கள் அடிப்படையில் ஊழலை ஒழிக்கவும் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் அவசியம் எனப் புரிவதில்லை.

அண்மையில் ஐ.டி ஊழியர்கள் வேலை இழந்ததும் சங்கம் ஆரம்பித்து அறிக்கை விட்டனர். அவர்களில் அடுத்து வேலை கிடைக்காதவர்கள் ஸ்விக்கி, ஓலா என ஓட்டுநர்க்ள், டெலிவரி பாய்கள் ஆகிவிட்டனர். இப்படி நீலக்காலர் ஊழியர்க்ளும் இன்று சங்கத்தின் அவசியத்தை உணர்ந்தாலும் அதை வைத்து என்ன செய்வதென அவர்களுக்கு விளங்குவதில்லை - இம்மாதிரி சங்கங்கள் தேர்தல் சமயங்களில் வெளிப்படையாக வந்து பிரச்சாரப் பணியாற்ற வேண்டும். வேலையில்லா இளைஞர்களும் 'கரப்பான்பூச்சிகளாகி' இணையவெளியில் கலகம் செய்து நேரத்தை வீணடிக்காமல் ஒரு சங்கம் அமைத்து தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது, தம் குடும்பத்தினரையும் உறவினரையும் எதிர்வாக்களிக்க வைப்பது, அதை ஊடகங்களில் பேசுவது ஆகியவனவற்றைச் செய்ய வேண்டும். அவர்களால் தேர்தலில் எதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயன்றால் மட்டுமே அரசு அவர்களைப் பொருட்படுத்தி உரையாடும். அவர்களுக்கு என்று எதிர்காலத்தில் அமைச்சர்களை நியமிக்கும். என்னிடம் கேட்டால் அமைச்சரவரையில் சாதி, மதரீதியான பிரதிநுத்துவத்தை விட, தொகுதி வாரியான பிரதிநுத்துவத்தை விட வர்க்க ரீதியான, தொழில்ரீதியான பிரதிநுத்துவம் நல்லது. ஆசிரியர்களுக்கென்று, வீட்டு வேலைக்காரர்களுக்கு, துப்புரவுப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கென்று அமைச்சர்கள். என்னிடம் கேட்டால் மதுவிலக்கு அமைச்சரை விட பிச்சைக்காரர்கள் மேம்பாட்டு அமைச்சர் வேண்டும் என்பேன். அவரது இலக்கு பிச்சைக்காரர்களுக்கு நல்ல வீடும், வசதிகளும் அமைத்து தருவதாகவும் அவர்களை வரி செலுத்த வைப்பதாகவும் இருக்க வேண்டும். போக்குவரத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கும் அமைச்சர் அவசியம். சாலை பராமரிப்பு சரியில்லை, நெரிசல் அதிகம் என்றால் அந்த அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிய வேண்டும்.
நிர்வாகம் பிடித்திருக்கிறதா, முதல்வர் ஸ்டைலாக இருக்கிறாரா, அவர் சினிமா ஹீரோவா என்பதைக் கடந்து என் சட்டைப் பையில் பணமிருக்கிறதா, என் வங்கி இருப்பில் பணம் குறைந்திருக்கிறதா என்று பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். பணம் வந்துவிட்டால் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு தானே வந்துவிடும்.
இம்மாதிரி அரசியலே பொருளாதாரத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...