முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ரியாலிட்டி ஷோ அமைச்சரவை


 விசிக அமைச்சரவையில் இணைவது தமிழ்நாட்டில் முற்போக்குச் சிந்தனையை, பகுத்தறிவை நம்புவோருக்கு ஒரு பெரிய வீழ்ச்சிதான். அதில் சந்தேகமே இல்லை.

தனிப்பட்ட முறையில் இது விசிகவுக்கு பலனளிக்கும் என்பதிலும் அதே சமயத்தில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் 'நேரடி அதிகாரத்தில்' பங்கேற்கலாம். அவர்கள்தாம், தலித்தியமோ, அம்பேத்கரியமோ, அயோத்திதாசரியமோ அல்ல. இதில் தெளிவு அவசியம் - அமைச்சர் பதவி தனிமனிதருக்குத்தானே ஒழிய கருத்தியலுக்கு அல்ல. தவெக ஒரு அம்பேத்கரிய கட்சி அல்ல. (அது கட்சியே அல்ல, ஒரு ஒற்றைத் தலைமையை வழிபடும் தொகுப்பே என்பது வேறுவிசயம்.) நான் இதையேதான் திமுக ஆட்சிக்கு வந்தாலும் சொல்லியிருப்பேன். மேலாதிக்கத்தின் பகுதியாவது கருத்தியலை நம்புவோரின் பிரதிந்தி அல்லர். ஆனால் திமுகவில் கருத்தியல் சார்ந்து ஒரு தலைமையை வழங்குபவராக விசிகவினர் இருந்திருக்க முடியும். அமைச்சரவையில் அவர்கள் இணைக்கப்படாதது குறித்து எனக்கு வருத்தமே. அதேநேரம், தவெகவுக்குள் வன்னி அரசுவால் ஒரு தலைமையை வழங்க முடியாதென்றே நினைக்கிறேன். இதுதான் முக்கியமான வித்தியாசம். காரணம் கருத்தியல் முரண் அல்ல.
தவெகவுக்கு அடிப்படையில் 'தலைமைப் பண்பிலே' நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒரு நியூஸ் கார்ட் கட்சி. அவர்கள் தினமும் பத்து நியூஸ் கார்டுகளை உருவாக்கி ரூட்ஸ் மீடியா வழியாகப் பரப்புகிறார்கள். பின்னணியில் பேரம், ஊழல் பண்ணுவார்கள். இதற்கிடையே எந்த விசயத்திலும் விஜய்யிடம் இருந்தோ பிற அமைச்சர்களிடம் இருந்தோ தலைமைத்துவம் வெளிப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. இதுவரைக்கும் நாம் பார்த்துள்ளதை வைத்தும், இதற்கு முன்பு அந்த அமைப்பு செயல்பட்ட விதத்தை வைத்தும், அவர்களுடைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை வைத்தும் சொல்கிறேன்
"நான் விஜய், இவர் விஜய், நாங்க எல்லாரும் விஜய். அண்ணன் சொல்றதை நாங்க சொல்றோம். அவ்வளவுதாங்க."
"அண்ணன் இந்த விசயத்தில் என்ன சொல்றாருங்க?"
"அண்ணனே சொல்வார்."
"எப்போ?"
"அண்ணனுக்குத் தோணும்போது."
"சரி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"நான் விஜய், இவர் விஜய், நாங்க எல்லாரும் விஜய். நன்றி. வணக்கம்."
இந்த கட்சியில் என்ன தலைமைத்துவம் இருக்க முடியும்?
அதேநேரம் விசிகவால் தன்னைப் பொருளியல் ரீதியாக வளப்படுத்த இயலும். அதைக் கொண்டு கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கட்சிக்கு அணுக்கமாக உள்ளவரக்ள் இதைப் பயன்படுத்தி வளர முடியும். வடிவேலு தன் பேண்ட் பாக்கெடுக்குள் கைவிட்டுச் சொல்வதைப் போல "இதுக்கு மேல ஒண்ணுமே இல்லீங்க".
இன்னொரு விசயம்: உண்மையான மக்கள் பிரதிநுத்துவம் நம் நாட்டில் சாத்தியமில்லை. அது தலித்துகளுக்கோ பிற உரிமை மறுக்கப்படுகிற சமூகங்களுக்கோ வர்க்கங்களுக்கோ பாலினங்களுக்கோ. அதனாலே ஒருவர் அமைச்சராகும்போது உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி நடைமுறை சார்ந்து யோசிக்க வேண்டும். ஒரு தனிநபர் ஒரு சமூகம் அல்லர். ஒருவேளை அதிமுக உள்ளே புகுந்திராவிட்டால் தவெக முழுமையாக விசிகவை நம்பியிருக்கும் நிலை இருந்திருக்கும். அப்போது அவர்கள் தம் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு சில விசயங்களில் கொள்கை ரீதியாக முடிவெடுக்க முடியும். இப்போது கூட்டணியே ஏதோ சுயம்வரம் போலாகிவிட்டது. இடது பக்கம் பார்த்தால் நூறு பேர் தாம்பாளத்தில் பரிசுகளுடன், வலது பக்கம் திரும்பினால் இருநூறு பேர் மலர்ச்செண்டுடன். ஆகையால் அழுத்தமும் போட முடியாது. இம்மென்றால் த்ரௌபதி பக்கத்தில் இருப்பவர் மீது மாலை போட்டு விடுவார்.
விஜய்க்கு ஆலோசனை வழங்கியவர்கள் அவரை திமுகவை 'மிமிக்' செய்யச் சொல்கிறார்கள் - அதாவது திமுகவை விட சிறந்த திமுகவாக தவெகவைக் காட்டி பிரச்சாரம் பண்ணுவதற்குச் சொல்கிறார்கள். ஆகையால் அவர் திமுக செய்யாததை நான் செய்கிறேன் என டோக்கனிஸமாக ஒன்றைச் செய்கிறார். அவ்விதத்தில் அது சரிதான்.
ஆனால் அவர் தொடர்ந்து திமுகவைதான் மிமிக் செய்வார், ஒப்புருவாக்குவார் என்றில்லை. அவர் என்னென்னமோ கட்சிகளை ஒப்புருவாக்குவார். ஒப்புருவாக்கத்தில் உள்ள சிக்கல் இத்தகையோருக்கு - உண்மையையைப் போலிகளால் மறைப்பதைவிட - வேறு எதிலும் சீரியசான விருப்பம் இருக்காது என்பது. இவர்களை நீங்கள் 'செலுத்தவும்' முடியாது. இது ஒரு நாடகம். அன்றாடம் உருமாறும் நாடகம். ரியாலிட்டி ஷோ. இதை ஒருவர் நினைத்தால் இயக்கவும் இயலாது. இதில் 'இணைவது' இணைவதல்ல. ஒரு குறியீடாக மாறுவது மட்டுமே.
"பிக்பாஸில்" திடீரென்று இருவர் 'லவ்' பண்ணுவார்கள். அவர்கள் காதலிக்கிறார்களா இல்லையா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஷோவின் போது அந்த 'அமரக் காதலைத்' தடுக்கவும் முறியடிக்கவும் பலர் மேடைக்கு வருவார்கள். ஒரே உணர்ச்சிவசமாக இருக்கும். ஷோவுக்குப் பிறகு அவர்கள் என்னாவார்கள் என்று யாருக்கும் கவலையும் இல்லை. தவெகவின் அமைச்சரவை விரிவாக்கம் எனக்கு இந்த பிக்பாஸ் காதலையே நினைவுபடுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.