முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூகமாற்றமும் குழந்தைகள் மீதான வன்முறையும்



இந்த தரவுகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் குழந்தைக் கடத்தல் 56% அதிகரிக்கிறது எனும் தகவல். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புரிதல் அதிகரித்திருப்பதாகவும், அதனால் அதிகமான அளவில் புகார் அளிக்கப்படுவதும், போஸ்கோ சட்டத்தில் வந்துள்ள சில மாற்றங்களும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணங்களில் சில என்றாலும் மிக முக்கியமாக 2021க்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை குறிப்பிட வேண்டும் - வறுமை வளர்ந்தவர்களைவிட குழந்தைகளையே அதிகம் பாதுகாப்பற்றவர்களாக்குகிறது என்கிறார்கள் நிபுணர்கள். பொருளாதார மாற்றங்களால் குடும்பங்கள் சிதைகின்றன, அத்துடன் குழந்தைகளை கண்காணிக்கும், அவர்களுடைய நலனை விசாரிக்கும் உறவினர்கள், தாத்தா பாட்டிகள் குறைகிறார்கள். அடுத்து, ஏற்றத்தாழ்வுகள் மிகுவதுடன் எந்த அறத்திலும் விழுமியத்திலும் நம்பிக்கையில்லாத சமூகமும் இன்று தோன்றியுள்ளது - இதற்கு இணையமும் இன்றைய நவதாராளவாத சந்தையும் ஒரு காரணம்: இவை மனித வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டு விற்கவும் வாங்கவும் முடியும், அதைத் தாண்டி - நுகர்வுக்கு அப்பால் - எதுவும் பொருட்டில்லை எனும் நிலையை எற்படுத்தின.

அடுத்து, ஊடகங்களும் கல்வித்துறையும் முழுக்க பணம் சம்பாதிப்பதற்கு அப்பால் பண்பாட்டையும் விழுமியங்களையும் பொருட்படுத்த வேண்டாம் என்றன. மானுடவியல் பாடங்கள் இன்று கல்லூரிகளில் பெருமளவு காணாமல் அடிக்கப்பட்டு விட்டன. மொழியையும் இலக்கியத்தையும் கற்றவர்கள் தொழில்நுட்பம் சார்ந்தும் பிரச்சார வியூகக் கட்டமைப்பிலும் விளம்பரங்கள் எழுதுவதிலும் மட்டுமே பணியாற்ற முடிகிறது. ஊடகங்களிலும் கூட இன்று சிந்திக்கிறவர்கள், எழுதுவோருக்கு மதிப்பில்லை. அங்கும் நிருபர்களும் உதவி ஆசிரியர்களும் கட்சிகளுக்க்காக நரேட்டிவ் செட்டிங் செய்கிறார்கள். அதைத்தாண்டி அங்கு வேலையில்லை. யோசித்துப் பாருங்கள்: இப்படியான சமூகம் 70-80களில் இருந்திருந்தால் ஒரு ஜெயகாந்தன் தோன்றியிருக்க மாட்டார். 40-60களில் இருந்திருந்தால் திராவிட சிந்தனையாளர்களும் தமிழ் தேசியவாதிகளும் வள்ளுவர், இளங்கோ, கம்பனையெல்லாம் லட்சியத் திருவுருவங்கள் ஆக்கியிருக்க மாட்டார்கள். குமரியில் எதாவது அரசியல்வாதியின், வணிகரின் சிலை இருந்திருக்கும். மெரினா கடற்கரை முழுக்க நடிகர்கள், இன்புளுவன்சர்களின் சிலைகள் நிரம்பியிருந்திருக்கும்.

அடுத்து, நகரமயமாக்கல், கிராமிய சமூகங்களின் அழிவு காரணமாக கண்ணியமான தனிமனிதர், மதிப்பு மிக்க சமூக மனிதர் ஆகிய பாத்திரங்கள் ஒழிந்துவிட்டனர். நகரம் என்பது சிதைவுகளை பணத்தேவையின், சுதந்திரத்தின் பொருட்டு நெறிப்படுத்துகிற அமைப்பு. அங்கு மனிதர் உடைந்து கொண்டேதான் இருக்க வேண்டும். உடையாதவர் அங்கு வளர இயலாது. ஏற்றத்தாழ்வுகள் மிகுந்து விட்டபின்னர் நகரங்களின் ஒரே சிறப்பான தனிமனித சுதந்திரம், வளர்ச்சி கூட இன்று காணாமல் போய்விட்டது. நகரத்திற்குப் போனால் பிழைக்கலாம் எனும் நம்பிக்கை பிழைத்துப் போய்விட்டது. அங்கு வருவோர் தம் சுதந்திரத்தை முதலில் இழக்கிறார்கள். அடிமைகளாக 18-20 மணிநேரங்கள் உழைத்தாலும் நிலையான வாழ்க்கை இல்லை. இது எல்லா அடிப்படைகளையும் கேள்வி கேட்க, துறக்கத் தூண்டுகிறது.

இதன் விளைவாக, ஒழுங்காக, நல்லவிதமாக இருப்பதற்கு சமூகத்தில் எந்த மரியாதையும் வெகுமதியும் இருப்பதில்லை. ரௌடித்தனமும் மோசடியும் செய்வோர் உச்சத்தில் போய் அமர்ந்து நம்மை ஆள்கிறார்கள். இது எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என மனிதர்களை 'அவிழ்த்து விடுகிறது'. இப்படி அவிழ்த்து விடப்பட்ட எல்லாரும் இவ்வாறு குற்றவாளிகள் ஆவதில்லை. அவர்கள் அப்போதும் கூட மதுபோதையிலும் கேளிக்கைகளிலும் தம் சினத்தைக் கரைத்துக் கொள்கிறார்கள். இந்த தீர்விலும் திருப்தி அடையாதவர்கள் தம் இலக்கை நாடுகிறார்கள். அவர்களுக்கு குழந்தைகள் எளிய இரைகள். குழந்தைகளைத் துன்புறுத்தும்போது அவர்கள் தமக்குள் இருக்கும் ஒரு பலவீனமான உலகைத் துன்புறுத்தி அழிக்கிறார்கள்.

குழந்தைகள் மீதான வன்முறை குழந்தைகளிடத்தான பாலியல் விருப்பத்தால் மட்டும் நிகழ்வதில்லை. முக்கியமாக அது வன்முறை விருப்பதால் தோன்றுகிறது. வன்முறை பாலின்பத்தின் மறுபக்கமாக இருப்பதால் எளிதில் அது பலாத்காரமாகவும் கொலையாகவும் வெடிக்கிறது.

பிரச்சினை இவ்வளவு ஆழமானது. பல நிலைகளில் கொதித்துக் கொண்டிருப்பது. இதை வெறுமனே தண்டனை, கண்காணிப்பு, போர்ன் காணொளி பார்போரைத் தண்டிப்பதால் முடிவடையாது. சொல்லப்போனால் அதிகமாக குற்றங்கள் கண்டடையப்பட்டு பதியப்பட்டு தண்டிக்கப்படும் கடந்த 4-5 ஆண்டுகளிலே குற்றங்கள் மேலும் மேலும் அதிகரித்தபடிப் போகின்றன. காவல்துறையாலும் நீதிமன்றத்தாலும் மட்டுமே இதை நிறுத்த முடியாது என்பதையே இத்தரவுகள் காட்டுகின்றன.

சமூகத்துக்கு இன்று முக்கியமாகத் தேவை மூத்தோர். நாம் மக்களுக்கு வயதானதும் அவர்களைப் புறக்கணிக்கிறோம், அவர்கள் காலவதியானதாகக் கருதுகிறோம். இளைஞர்களைக் குறித்து மட்டும் கவலைப்பட்டு அவர்களிடம் தலைமையை ஒப்படைக்கத் தவிக்கிறோம். இந்த இளைஞர் ஆட்டிப்படைப்பை நாம் குறைக்க வேண்டும். உலகம் இளைஞர்களால் மட்டும் ஆனதல்ல. வயதானவர்களே இங்கு இளைஞர்களுக்குத் தலைமை தாங்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் மூத்தோரின் வழிகாட்டுதலை நாட வேண்டும். அவர்களை பிற்போக்கு என்று கருதி ஒதுக்காமல் காதுகொடுக்க வேண்டும். இது இயல்பாகவே விழுமியங்கள் மீதான கவனத்தை அதிகரிக்கும். விழுமியங்களைப் பின்பற்றத் தொடங்கினால் சிக்கல்கள் குறையும்.

அடுத்து குடும்பத்தை நடத்துவது, வேலை செய்வது, சம்பாதிப்பது, செலவழிப்பது என ஒவ்வொன்றும் தனிமனிதருக்காக அன்றி சமூகத்துக்காக என்று மாற வேண்டும். தனிமனிதர் எனும் கருத்துருவாக்கம் பின்னுக்குப் போய் சமூக மனிதர் எனும் கருத்துருவாக்கம் முன்னுக்கு வர வேண்டும்.

ஒரு ஊரில் உள்ள குடும்பம் அந்த ஊரின் அங்கமாகக் கருதப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் மேம்பாட்டில் ஊர் அக்கறை காட்ட வேண்டும். குடிக்கிறார்களா, துன்புறுத்துகிறார்களா, குழந்தைகள் யாருடைய குழந்தைகள் என்றாலும் அவர்களை யார் அழைத்துச் செல்கிறார்கள் என ஊர் கண்காணிக்க வேண்டும். தனிமனிதர்களின் விசயங்களில் ஊர் மீண்டும் தலையிட ஆரம்பிக்க வேண்டும். நான் சொல்வது சாதிய, மதரீதியாக அல்ல; பாலினம் சார்ந்து அல்ல - அவையெல்லாம் மட்டும் இப்போதும் நடக்கின்றன. நடைமுறை சார்ந்த பல விசயங்களில் - வறுமை, குடும்பப் பிரச்சினை, வன்முறை - தலையிட்டு சீர்செய்யும் வண்ணம் ஊர் பங்கெடுக்க வேண்டும்.

கல்வியில் இலக்கியத்துக்கும், தத்துவத்துக்கும், விழுமியக் கல்விக்கும் திறன்சார் கல்விக்கு ஈடான இடமளிக்க வேண்டும்.

இணையம், சினிமா, மொபைல் விளையாட்டில், செயலிகளில் - வன்முறை, துன்புறுத்துவது, சீரழிவான மொழி சார்ந்து - அடிப்படையான ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும். அவமதிப்பது, மிரட்டுவது, இஷ்டத்துக்கு டுரோல் செய்வதன் மீது கடும் கட்டுப்பாடுகள் அவசியம்.

நாம் சும்மா பேசுகிற, செயலூக்கமாக உள்ள சமூகமாக அல்லாமல் சிந்திக்கிற, பகுத்தாய்கிற, லட்சியங்களில் நம்பிக்கை கொள்கிற, தத்துவத்தையும் இலக்கியத்தையும் கொண்டாடுகிற சமூகமாக வேண்டும். சினிமாவுக்கான மிதமிஞ்சிய மோகம் ஒழிய வேண்டும். ஒருவரது குற்ற நடவடிக்கைச் சாத்தியத்துக்கும் ஆழமான சிந்தனை, படைப்பாக்கத்துக்கும் எதிர்விகிதச் சமமான உறவு உள்ளது - அதாவது ஒருவர் எந்தளவுக்கு அதிகமாக ஆழமான சிந்தனையில் ஈடுபட்டு, வாசித்துப் பகுப்பாய்கிறாரோ, படைப்பூக்கமான செயல்களில் ஈடுபடுகிறாரோ அந்தளவுக்கு உணர்வுகளால் உடனடியாகத் தூண்டப்பட்டு செய்யும் குற்றங்களில் குறைவாக ஈடுபடுவார். அதேநேரம் மிதமிஞ்சி சினிமாவும் காட்சி ஊடகங்களும் பார்க்கப்படும்போது அவை நமது சிந்திக்கும் கற்பனை செய்யும் ஆற்றலைக் குறைத்து நம்மை அதிகமான கொலைக் குற்றங்களில் ஈடுபவடுவோராக்குகின்றன.

எப்போதெல்லாம் வறுமையும் சமூகக் கட்டுமானத்தில் நிலைகுலைவும் நிகழ்கின்றனவோ அப்போதெல்லாம் கொலைகளும் பலாத்காரங்களும் அதிகரிக்கும் என்பது வரலாறு (இந்தியப் பிரிவினை வன்முறை, ஜெர்மனியில் நாஜி இன அழித்தொழிப்பு). குழந்தைகள் மீதான வன்முறை நம் சமூகத்தின் ஆன்மாவில் விழும் அடி. அது நமக்குள் அடியாழத்தில் எதுவோ அழுகி இருப்பதற்கான அறிகுறி. குழந்தைகள் மீதான வன்முறையாக இதைச் சுருக்காமல் பரந்துபட்டு யோசிக்க வேண்டும்.

நான் சொல்வது மீட்டுருவாக்கமாகத் (revivalism) தெரியும். ஆனால் நம் ஊருக்கு இப்போது கொஞ்சம் மீட்டுருவாக்கம் அவசியம். நான் நாம் திரும்ப கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறவில்லை. நாகரிக மாற்றங்கள் வேண்டாம் எனவில்லை. பழைய உலகின் சில நல்ல விசயங்களைத் தக்க வைக்க வேண்டும் என்கிறேன்.
காவல்துறையும் நீதிமன்றமும் வலி நிவாரணிகள்; அவற்றால் வலியைத் தணிக்க மட்டுமே முடியும், ஒழிக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...