முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக டம்மி அரசு


 

தமிழ்நாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளது. பல்வேறு கனவுத்திட்டங்கள், நனவுலகுக்கு வருவதற்கன நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை. அதுவும் முழுக்க முழுக்க சோ கால்ட் சமூக நீதித் திட்டங்களை வைத்து காதில் பூ சுற்றியிருக்கிறார்.

இவ்விசயத்தில் விஜய்க்கும் வேறு சில மாநில முதல்வர்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்: சில மாநிலங்கள் மட்டுமே இன்று வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். ஒன்றிய அரசு கூட சமூக நீதி எனும் பெயரில் ஏழைகளுக்கு ஆறுதல் உதவித் தொகைகளை பல்வேறு வழிகளில் கொடுத்து ஆறுதல்படுத்தவே செய்கிறது. ஏனென்றால் இன்னொரு பக்கம் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கட்சிகள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் தப்பிப் பிழைக்கவும் தங்க மோதிரம் தருகிறேன், பத்து சிலிண்டர் தருகிறேன், பைக் வாங்கித் தருகிறேன் என்று என்னென்னமோ ஆசை காட்டிக் கொண்டே ஆட்சிக்கு வருகின்றன. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. தமிழ்நாட்டுடன் பத்து மாநிலங்களின் நிதியைச் சேர்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டிலும் இவ்வாக்குறுதிகளின் நீட்சியையே காண்கிறோம். இவையெல்லாம் கேட்க இனித்தாலும் கொஞ்சம் தேடிப் பார்த்தாலும் கீழே பெரிய பிரச்சினைகள் இருப்பது புலப்படும். இப்படி 'சமூக நீதித்' திட்டங்களால் அரசுகள் கடனாளிகளாவதே நிதர்சனம். அவர்கள் ஆரம்பத்தில் கோருவதைப் போல மாநிலத்தின் பொருளாதாரம் வளர்வதில்லை, கட்டமைப்புகள் மேம்படுவதில்லை, கல்வித் தரமும் வேலை வாய்ப்பும் பாதாளத்துக்குப் போகின்றன. இலவசக் கல்வி, இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி எல்லாம் உபயோகமானவை. ஆனால் இந்த உதவித் தொகைகள் ஒரு பகுதி மக்களைக் காப்பாற்றுகின்றன என்றாலும் இன்னொரு பக்கம் மாநிலங்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. ஏனென்றால் இவை தற்காலிக குறைந்தபட்ச தீர்வுகள். இவையே அரசின் லட்சியமாக இருக்கக் கூடாது. அரசு என்பது ஆம்புலன்ஸ் அல்ல.
சரியான பட்ஜெட் என்பது பெரும்பகுதி நிதியை இலவசக் கல்வி, தொழில்வளர்ச்சிக்கான கடன் மற்றும் பிற உதவிகள், முதலீட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க ஒதுக்கும் பட்ஜெட்டே. சும்மா ஆயிரம் டிரில்லியன் என அடித்து விடுவதல்ல. முயற்சி செய்யாமல், நிதி ஒதுக்காமல் அவ்வளவு வளர்ச்சி எங்கிருந்து வரும்? ஆயிரம் கோடியை இலவசப் பேருந்தில் போட்டால் மாநிலத்துக்குக் கிடைக்கும் முதலீட்டு ஆதாயம் (ROI) என்ன? மகளிருக்கு வேலைக்குப் போக, வெளியே சென்று புழங்க உதவுகிறது. ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை நேரடி ஆதாயமற்ற ஒன்று. ஏனெனில் நாம் முதலில் சிறுகுறு தொழில்களிலும் தொழில்முனைவிலும் ஈடுபடும் பெண்களைத் தயாரித்து அவர்களுக்கு நிதியளிக்க வேண்டும். அத்தகையோரின் எண்ணிக்கைப் பெருகிய பின்னர் பயணம் பிரச்சினை எனில் அதற்கு உதவலாம். ஊனமுற்றோருக்கு மாதம் உதவித்தொகை கொடுப்பதற்குப் பதில் அவர்கள் செல்லும் வேலையிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் கட்டமைப்பு வசதிக்குச் செலவிட்டால் அது அவர்களுக்கு வளர்ச்சியை அளிக்கும்.
மக்களின் கணக்கில் நேரடியாகப் பணத்தைப் போடும் தில்லாலங்கடியை ஆரம்பித்தவர் மோடி. அதையே பிறரும் பின்பற்றத் தொடங்கினர். மக்களிடம் பணப் புழக்கத்தை இது அதிகரிக்கும்தான். ஆனால் இதை மட்டுமே செய்தால் மக்கள் மேலும் ஏழ்மையில்தான் வீழ்வார்கள். எங்கே வேலை எனக் கேட்கும்போது மோடியிடம் பதில் ஏன் இல்லையென்றால் அவர் சிலிண்டர் தருகிறேன், விறகு தருகிறேன் என ஏமாற்றிக் கொண்டிருந்ததால்தான்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக ஒன்றியத்தில் காங்கிரஸ் வீழ்ந்த பிறகு, நாம் மிகுந்த பொருளாதார நிலையின்மையை எதிர்கொள்வதால் வேலை வாய்ப்பு குறைந்து பண வீக்கம் அதிகரிப்பதால் அரசுகள் அடுத்தடுத்த தேர்தலில் தம் வாக்குகளைக் காப்பாற்றுவதற்காக மக்களுக்கு மிட்டாய் கொடுப்பதே போதும் எனும் முடிவுக்கு வந்துள்ளன. இவற்றிடையே தமிழ்நாடும் வேறு சில மாநிலங்களுமே தொழில் வளர்ச்சியிலும் கல்வியிலும் அதிகமாக முதலீடு செய்து நல்ல நிலையில் உள்ளன. இந்த இலவசத் திட்டங்கள் இம்மாநிலங்களை பின்னுக்குத் தள்ளும்.
மக்கள் முதலில் வேலை வாய்ப்பு, தொழில் முதலீடு, கல்வி ஆகிய மூன்றையும் தவிர வேறு வாக்குறுதிகளை நிராகரிக்கப் பழக வேண்டும். தவெக வைத்துள்ள காமிடி பட்ஜெட்டுகளையும் நிராகரிக்க வேண்டும். அவர்கள் வந்ததில் இருந்தே முதலீடுகளை பக்கத்து மாநிலங்களுக்குத் துரத்துகிறார்கள். இலவசங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். திமுக, அதிமுக அரசுகளும் இலவசத் திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்கள் அதையும் தாண்டி நிறைய உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தினர். கர்நாடகத்தைப் பாருங்கள். கடுமையான மின் தட்டுப்பாடு உள்ளது. நீங்கள் பெங்களூரைத் தாண்டி வெளியே எச்சாலையில் போனாலும் இரவில் தெருவிளக்கு எரியாது. ஏனென்றால் உள்ளாட்சி, நகராட்சிகளுக்கு நிதியில்லை, அவர்கள் மின்வாரியத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வைத்திருக்கிறார்கள். பெங்களூர் மட்டுமே 85% மேல் நிதியை கர்நாடகத்துக்கு அளிக்கிறது. பிற மாவட்டங்கள் வறுமையில் வாடுகின்றன. அங்கு எப்படி நிதியை முதலிட்டு வளர்ச்சியைக் கொண்டு வருவது என அரசுக்குத் தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டு பெங்களூரே சரணம் எனக் கிடந்ததன் விளைவு. ஆனால் தமிழ்நாட்டைப் பாருங்கள் - சென்னைக்கு அடுத்தபடியாக பல நகரங்களை வளர்த்து அவற்றுக்கான சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி தொழில்வளர்ச்சியை மேம்படுத்தி இருக்கிறார்கள். நாம் இன்னும் இவ்விசயத்தில் மேம்பட வேண்டும், அதை நோக்கித் திட்டமிடுகிற அரசுகள் வேண்டும், தூய்மை, தாய் மாமன் சீர், சித்தப்பா மோர் என பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்கிற அரசுகள் அல்ல. காவிரி நீரைப் பெறுவதில் அவ்வளவு பயம், தயக்கம், ஏனென்றால் பாஜகவையோ காங்கிரஸையோ பகைக்கக் கூடாது. ஏனென்றால் பக்கத்து மாநிலங்களிலும் கட்சியை உருவாக்கி வளர்க்க வேண்டும், ஏனென்றால் எதிர்காலத்தில் பிரதமராக தன்னை முன்வைக்க வேண்டும். அதனால் சும்மா கடிதமாக எழுதுவது, சந்தித்துப் பேசுவோம் என்பது, உருப்படியாக எதையும் செய்யாமல் ரீல்ஸ் மட்டும் போடுவது. கேட்டால் எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு மாண்புமிகுவைப் போட்டுவிட்டு பண்ணிவிட்டோம் என்கிறார்கள்.
இந்த அரசிடம் தமிழ்நாட்டை இரு பத்தாண்டுகள் விட்டு வைத்தால் தமிழர்கள் சைக்கிள் மிதித்து பீகாருக்கும் உ.பிக்கும் வேலை தேடிப் போகும் நிலைவரும். இவரைப் பிரதமராக்கினால் இந்தியர்கள் மொத்தமாக சொமாலியாவுக்குப் புலம் பெயரும் நிலை வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.