லஷ்மி சரவணகுமாரின் முதல் கவிதைத் தொகுப்பு “மோக்லியை தொலைத்த சிறுத்தை”. லஷ்மி சரவணகுமாரின் கதைமொழி நமக்கு பரிச்சயமானது. வாழ்க்கை பின்புலம் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுடையதாக, ஒருவித எதிகலாச்சார காரத்துடன் இருக்கும் என்பதையும் அறிவோம். அதிகம் பேசப்படாத விசயம் அவர் மிக மிக கவித்துவமான மொழியையும் கொண்டவர் என்பது. முற்போக்கு எழுத்தாள அண்ணாச்சிகளுக்கும் கோணங்கி வாரிசுகளுக்கும் நடுவே ஒரு குறுக்குசந்து அமைத்து வாழ்பவர் லஷ்மிசரவண குமார். கோணங்கி பாணியிலான கதைகளில் சிலவேளை அவர் கவித்துவத்தின் உச்சத்தை தொடுவார். அது போக தோற்கடிக்கப்பட்ட மனதின் உளவியல் மீதும் ஒரு வலுவான பிடிப்பு அவருக்கு உண்டு. இந்த இரண்டு தன்மைகளும் லஷ்மி சரவணகுமாரின் எழுத்தாளுமை.