Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கைமாறும் நூல்கள்




திருவல்லிக்கேணி சாலையோர கடைகளில் தான் நான் பல நல்ல நூல்களை வாங்கி உள்ளேன். புத்தகக் கடைகளில் போலல்லாது பல தரப்பட்ட புதிய பழைய நூல்கள் வரும். இவ்வளவு விலைவாசி ஏறினாலும் அதே விலை தான். ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் நிலை, கனம், அட்டை பார்த்து ஒரு விலை மனதுக்குள் போடுவேன். இதற்கும் தரத்துக்கும் சம்மந்தமில்லை. பின் கடைக்காரரிடம் விலை கேட்பேன். அவர் எப்போதும் ஒரு ஐம்பது நூறு கூட்டி கேட்பார். ஆனால் பேரம் நிச்சயம் என் கணக்கில் படிந்து விடும். நேற்று உம்பர்த்தோ ஈக்கோவின் How to Travel with Salmon என்கிற பத்தி தொகுப்பு வாங்கினேன். 2008இல் லஷ்மி என்பவர் வாங்கி பெயரெழுதி இருக்கிறார். 


ஈக்கோவை வாங்கும் அளவுக்கு அவர் வாசிப்பு முதிர்ச்சியோ குறைந்தது உலக இலக்கிய பரிச்சயமோ கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இலக்கிய வெறியராக இருந்திருக்க வேண்டும். பொதுவாக இப்படியான உலக மகா எழுத்தாளனின் நூல்களை கைவிட மனம் வராது. ஆனாலும் அவர் எப்படி இந்த நூலை தூக்கி விலைக்கு போட்டிருக்க முடியும் என யோசித்தேன். அதுவும் பழைய நூல் வியாபாரிகள் கிலோ கணக்கில் தான் விலை நிர்ணயிப்பார்கள். இந்த நூலுக்கு ஐந்து ரூபாய் கிடைத்திருக்குமா? ஆனால் அசல் விலை 800. நான் வாங்கினது ஐம்பது. ஒருவேளை அவரது வீட்டில் யாராவது தூக்கி போட்டிருக்கலாம். ஏதாவது ஒரு காகித குவியலில் விழுந்து கிடந்து தெரியாமல் செய்தித் தாள் விலைக்கு போடும் போது கொடுத்திருக்கலாம். அல்லது அவர் வீடு மாறி போகும் போது வேறு வழியில்லாமல் தன் அரிய நூல்களை விற்க வேண்டி வந்திருக்கலாம். இன்னொரு சாத்தியம் யாராவது நண்பர் வாசிக்க வாங்கி திரும்ப கொடுத்தாமல் கைமறதியாய் வைத்து பின்னர் அவரே தெரியாமல் விலைக்கு போட்டிருக்கலாம்.
அப்போது இன்னொன்றும் தோன்றியது. ஏன் இவ்வளவு நல்ல விலைமதிப்பான நூல்களை கிலோ கணக்குக்கு கொடுக்க வேண்டும்? நம் புத்தகக் கடைகளிலே பழைய நல்ல நூல்களை வாங்கி தனியாய் ஒரு பிரிவில் விற்பனைக்கு வைக்கலாம். நாம் படிக்கிற அத்தனை நல்ல நூல்களும் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை அல்ல. ஒரு தடவைக்கு மேல் திறக்கப்படாமல் பல புத்தகங்கள் வருடக்கணக்கில் ஏதாவது அட்டைப்பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பாதி விலைக்கு விற்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை புதிதாய் புத்தகக்கடை திறந்திருக்கிற வாசுதேவனிடம் சொன்னேன். அவர் இது போல் பழைய நூல்களை வாங்கி புது நூல்களை கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம் என்றார்.
ஐநூறு ரூபாய்க்கு மேல் கொடுத்து நீங்கள் வாங்கின சில ஆயிரம்பக்க நாவல்கள் இருக்கும். அவை உங்களுக்கு வாசிக்க ஆரம்பித்து பிடிக்காமல் போயிருக்கலாம். என்னிடம் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”, பா.வெங்கடேசனின் “தாண்டவராயன் கதை” போன்ற வாதை புகுந்த நாவல்கள் பல இருக்கின்றன. அவற்றை படிக்க முயன்ற போதெல்லாம் ஒரு கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகும் உணர்வு ஏற்பட்டு மூடி வைத்து விடுவேன். ஆனால் தூக்கி போடவும் மனம் வராது. பார்க்கும் போதெல்லாம் ஐநூறு ரூபாய் வீணாகி விட்டதே என கடுப்பாக இருக்கும்.
அவற்றை எல்லாம் வாங்கி ஒரே வாரத்தில் திரும்ப கொடுத்து வேறு ஒரு நானூறு ரூபாய் புத்தகமாக வாங்கிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நமக்கு கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றலாம். மனுஷ்யபுத்திரன் இத்தகைய வாசகர்களை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பவர்கள் என்பார். இவர்கள் எத்தகைய சுயவதை நூல்களையும் பதறாமல் பல் படாமல் படித்து விடுவார்கள். இந்த நூல்கள் அவர்களிடமே போகட்டுமே! நாம் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு மகுடியை கொடுத்து விடுவோம். அது தானே சரியான ஜனநாயகம்.

Comments

புல்லாங்குழல் x மகுடி. நல்ல உதாரணம் தான். ஆனால் நீங்கள் சொன்னது போல் "கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றும்" போது மகுடி அவர்களுக்கு புல்லாங்குழலாய் தோன்றாலாமல்லவா?. எப்படியோ சிந்தனை (புத்தகங்கள் மாற்றம்) சிறப்பானது. கொடுப்பவனுக்கு மனநிறைவை(சிறிதளவேனும்) தரும்.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...