முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் போகன் சங்கர் மற்றும் வேடியப்பனுக்கு வாழ்த்துகளும் அன்பும்.

Image result for போகன் சங்கர்
நான் ஏற்கனவே ஒருமுறை எழுதியது போல் மிகுந்த மன எழுச்சி தரும், காட்சிபூர்வமான மொழியை கொண்டவர் போகன் சங்கர். சின்ன சின்ன உணர்வுகள், அன்றாட பிரச்சனைகள், எளிய சித்தரிப்புகளை தாண்டி மீண்டும் கவிதையை பிரம்மாண்டமான நாடகிய தருணங்கள், காவிய உணர்வுகள், வாழ்வின் துயரம் நோக்கிய திருப்பியவர். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது நகைச்சுவை ரயில் படுவேகமாய் தடத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவரை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து நாம் சிரிக்கும் போது அவர் அவரை கிண்டலடிக்க தொடங்குவார், சரி அவரைத் தானே என நாம் சுதாரிக்கும் போது அவர் நம்மை பகடி பண்ண துவங்கி இருப்பார். இதை உணராமல் நாம் சிரித்துக் கொண்டிருக்கக் கூடும். சரி இனி கவனமாய் இருப்போம் என நினைக்கும் போது போகன் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு தன்னையே கேலி பண்ணி நம்மை சிரிக்கவா வேண்டாமா எனும் சங்கடத்தில் ஆழ்த்துவார். இப்படி வினாடிகள் நாலு தடங்கள் தாவும் பகடி ரயில் அவர்.

 Vediyappan M Munusamy's Profile Photo

வேடியப்பன் புத்தகம் விற்பது ஒரு தரித்திர செயல் என கருதப்பட்ட காலத்தில் ஒரு புத்தகக் கடையை ஆரம்பித்து சரியாய் சந்தைப்படுத்தி, வாசகர் தொடர்புகளை பெருக்கி அதை முதல் கட்டமாய் வெற்றி பெற வைத்தார். அடுத்த அங்கு ஒரு கூட்டம் நடத்துவதற்கான சிறு அரங்கு உருவாக்கினார். இதை அடுத்து புத்தகங்கள் பிரசுரிக்க துவங்கினார் எஸ்.ராவை முன்வைத்து சில நல்ல கூட்டங்கள், பயணங்கள் ஒருங்கிணைத்தார். ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்று அதன் மூலம் புத்தகக் கடையை தக்க வைத்தார். கூர்மையான வணிகர் அவர்.
வேடியப்பன் நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யக் கூடியவரும் தான். சமீபத்தில் வந்த சிறந்த நூல்கள் என்னவென நம்பி கேட்கலாம். “சிறந்தஎன்றால் சமீபத்தில் அதிகமாய் கவனிக்கப்படும், ஆனால் நாம் அறிந்திராத, புத்தகங்கள் எனப் பொருள். இதில் அவரது தேர்வு சரியாக இருக்கும். அதே போல் அவரது கடை அரங்கில் கூட்டம் நடத்தினால் கூட்டத்துக்க்கான புரொமோஷனின்ல் அவரது பங்கும் சிறப்பாய் இருக்கும். டிஸ்கவரி புக் பேலசை விட நன்றாய் வடிவமைக்கப்பட்ட வேறு சில புத்தகக் கடைகளில் இந்த ஒருங்கிணைப்பு இராது. ஒரு எழுத்தாளர் பெயரைச் சொல்லிக் கேட்டால் கல்லாவில் இருக்கிறவரே ஏதோ உகாண்டாவின் பிரதமர் பெயரைக் கேட்டது போல் முழிப்பார். அதனால் தான் அவை டிஸ்கவரி அளவுக்கு வெற்றி பெறவில்லை.
வேடியப்பன் மேலும் பல முன்னேற்றங்களை காணட்டும்.


கருத்துகள்

”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
இரு நண்பர்களுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...