கார், வீடு, ஐபோன், வெளிநாட்டு பயணங்கள் இவை மட்டுமே சிலருக்கு ஒரே லட்சியமாக இருக்கிறது. அதற்காய் இரவு பகலான உழைப்பு. இவற்றை அடைந்ததும் வேறேதாவது முன்னதை விட விலை மதிப்பான ஒரு பொருளை வாங்க கனவு காண்கிறார்கள். அதற்காய் கூடுதல் பணமீட்ட முனைவார்கள். இப்படியே வாழ்க்கை முழுக்க நிரந்தர வாடிக்கையாளர்கள். இது சமூகத்தில் சுலபமாய் நற்பெயர் பெற்றுத் தருகிறது. எனக்கு இவர்களை காணும் போது ஜெயமோகன் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் சொன்னது நினைவு வரும்: “வாழ்க்கை என்பது உணவு மேஜைக்கும் கழிப்பறைக்கும் இடைப்பட்டதாய் முடிந்து விடக் கூடாது”
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments