முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

Image result for sunny leone kerala visitImage result for sunny leone kerala visit

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

 அவ்வாறாகின், அவருக்கு அருவருப்பு ஏற்பட்டிருக்குமா? தன்னை வெறிப்பவர்கள் மீதல்ல – தன் மீது?
சன்னி உண்மையில் என்ன உணர்ந்திருப்பார் என நமக்குத் தெரியாது. வெளியில் இருந்து அவரை அவதானிக்க முயலும் எனக்கு அவர் இதை இயல்பாக, சுலபாக, கடந்து போயிருப்பார் எனத் தோன்றுகிறது. எப்படி?
 பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள், ஊடக ஆளுமைகள், வெவ்வேறு பிரபலங்கள் இந்த சுய-முரணை ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். (சன்னி அவர்களை விட பலமடங்கு உக்கிரமாய், கொந்தளிப்பாய் இதை உணர்ந்திருப்பார் என்பதே வித்தியாசம்.) ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்களின் மிகை வெளிப்பாடுகளுக்கு பழகிப் போவார்கள். தாம் வேறு தம் பிம்பம் வேறு; தம் பிம்பமே தமக்கு புகழ்வெளிச்சம் தருகிறது என புரிந்து கொள்வார்கள். அப்போது தம் உடலோ அல்லது பிம்பமோ தம்மில் இருந்து பிறிதொரு பொருள் – ஒரு கருவி – என அவர்களுக்கு தோன்றும். தம் ரசிகர்களைப் போன்றே தம் உடலை அல்லது பிம்பத்தை பார்க்க, ரசிக்க, பாதுகாக்க, மேம்படுத்த அவர்கள் பிரக்ஞைபூர்வமாய் முயல்வார்கள். பிறகு மெல்ல மெல்ல தம்மில் இருந்து தம் பிம்பத்தையோ உடலையோ முழுக்க வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் பழகுவார்கள். தம் மீது மீடியாவின், வேடிக்கை பார்ப்பவர்களின், படக்கருவியின் கண்கள் பதியும் போது தாம் முற்றிலும் இன்னொருவராய் மாறுவதை உணர்வார்கள்.
 அவர்களுக்கு தமது வழிபாட்டுக்குரிய “பிரதியின்” மீது அருவருப்போ ஆச்சரியமோ குழப்பமோ இராது. தனக்கு கைவரப்பெற்ற ஒரு அற்புதமான வரம் என தமது பிரதிபிம்பத்தை காணத் துவங்குவார்கள்.
 ரஜினியும் சன்னி லியோனும் வைரமுத்துவும் இவ்விசயத்தில் ஒன்று தாம். வைரமுத்து தம் பிம்பத்தை எல்லா கட்டங்களிலும் இடங்களிலும் நிலைநிறுத்த பிரயத்தனிப்பவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரிலேயே புது வெள்ளை குர்தாவுக்கு மாறுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினி தனது பிம்பம் தன்னை விட்டு எப்படியும் தொலையாது என புரிந்து கொண்டவர். அதனாலே மேக் அப் இன்றி, விக் இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். மக்கள் அதையும் அவரது அன்றாடத்தின், எளிமையின், ஆன்மீகத்தின் பிம்பமாக மாற்றிக் கொண்டு கொண்டாடினார்கள். கூடவே விக் அணிந்து, மேக் அப் சூடிய இன்னொரு பிம்பத்தையும் அவர் தக்க வைத்தார்.
முன்பு படக்கருவி முன் மெழுகு பொம்மை போல் தோன்றிய சன்னியும், இப்போது திருமணமாகி, தன் கணவனுக்கும் மாமியாருக்கும் ராஜ்மா சாவல் சமைத்து விளம்பும் ஒரு இளம் பஞ்சாபி மனைவி போல் தோன்றும் இன்னொரு சன்னியும் வேறு வேறு எனும் தெளிவு அவருக்கு இருக்கலாம். இதுவே தன்னை அன்றாட வாழ்வில், பொதுவெளியில் தன்னை போர்னோ பிம்பமாய் பிறர் பார்க்கும் போது அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள சன்னி லியோனுக்கு உதவுகிறது. (சில்க்கை போன்ற ஒருவருக்கு இது இயலவில்லை என்பதே வெறுமைக்கும் தற்கொலைக்கும் அவரை விரட்டி இருக்கலாம்.)
தன்னை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிற சன்னி லியோனின் இந்த மனமுதிர்ச்சி மற்றும் துணிவு வணங்கத்தக்கது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஞானம் சொட்ட சொட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தும் பல ஆன்மீக குருக்களை விட அவர் மேலானவர். “ஆம்! நீங்கள் படுக்கையில் நடிகையுடன் பார்த்த ஆள் நான் தான், அதுவும் நானே இப்போது ஆன்மீக உரை நிகழ்த்தும் இதுவும் நானே” என சொல்ல நித்தியானந்தாவால் முடிந்ததா? அந்த நெஞ்சுரம் – ஓஷோவுக்கு இருந்த அந்த சுயபகடியும் சுயவிமர்சனமும் - நித்திக்கு இல்லை. அவர் தன் பாலியல் பிம்பத்தில் இருந்து தப்பித்து ஓடவல்லவா செய்தார்?
 ஆனால் ரசிகர்களால் சன்னியை அப்படி இரண்டாக பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு இன்னமும் கல்லா கட்ட உதவுகிறது. கல்லைக் கண்டவர் நாயைக் கண்டிலர். நாயைக் கண்டவர் கல்லைக் கண்டிலர்!


கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் உண்மை, எழுத்தாளர்களிலும் சிலருக்கு இந்த மனமுதிர்ச்சி உண்டு,
ஏன் சமூக வலைதள பதிவர்களில் கூட, பலர் நேரில் சந்திக்கும் பொழுது வேறு விதமாக இருப்பர்கள். .
வலை தளங்களில் வீர ஆவேசமாக எழுதும் பலரும் நேரில் உரையாடும் பொழுது அன்பாக மிருதுவாக உரையாடுகிறார்கள்
ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
சில்க் ஸ்மிதா இந்தக் காரணத்தால் மட்டுமே தற்கொலை செய்து ஆய்வுக்கு உரிய விஷயம்.
குஷ்பு, விந்தியா ஆகியோர் கூட பொது மேடைகளில், பொது இடங்களில் மனமுதிர்ச்சியுடன் பங்கு பெறுபவர்கள், நடந்து கொள்பவர்கள் தானே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...