முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சலி அஞ்சலி

 Image result for obituary cartoon
ஞாநியின் மறைவை ஒட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள் நம் பேஸ்புக் டைம்லைனில் தோன்றி கண்ணீர் சிந்தின, மெல்ல அழுதன, கையைப் பற்றி அழுத்தின. நான் ஒரு நண்பரிடம் ஞாநி ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கத்தை, அபாரமான நட்பு வலையை, அவர் சம்பாதித்த நற்பெயரைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்நண்பர் சில நொடிகள் அமைதியாகி விட்டு சட்டெனக் கேட்டார்: “இவ்வளவு நாளும் இந்த அஞ்சலிக் குறிப்பாளர்கள் எங்கிருந்தார்கள்? அவர் உயிருடன் இருந்த போது அவரைப் பற்றி மிகக் குறைவான பாராட்டுரைகளே எழுதப்பட்டன. அதிகமும் அவரை விமர்சித்தும் கண்டித்தும் எதிர்த்துமே எழுதினோம். அவர் இல்லாமல் ஆன பின் எவ்வளவு ஆயிரமாயிரம் சொற்களை மாலை மாலையாய் அவர் பிம்பத்தின் மேல் சூட்டுகிறோம். ஏன் இந்த பாசாங்கு? ஏன் மரணத்தில் மட்டுமே ஒரு மனிதன் மதிப்பு பெறுகிறானா?”
 எனக்கு சட்டென விக்கித்து விட்டது. நானும் இப்பட்டியலில் சேர்வேன். ஒரு மனிதர் மறைந்த பின்னர் எல்லா கசப்புகளையும் அல்லது தயக்கங்களையும் கடந்து அவரை பாராட்டி அன்பைப் பொழிவது எளிதாகிறது. தமிழில் வாழ்ந்து மறைந்த அத்தனை ஆளுமைகளுக்கும் இது பொருந்தும். ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றி சொற்களை உருவாக்க நம் விரல்கள் கீபோர்டில் நர்த்தனமிட தொடங்குகின்றன. இது ஏன்?

நண்பர் போனைத் துண்டித்த பின்னரும் வெகுநேரம் இதைப் பற்றியே சிந்தித்த படி இருந்தேன். இதற்கு இரு காரணங்கள் தோன்றின. அஞ்சலிக் குறிப்பெழுதும் நம் மனநிலையை நான் இரு விதங்களில் புரிந்து கொள்கிறேன்.
ஒருவர் இருக்கும் போதை விட இறந்த பின்னரே அவரைப் பற்றி பேசுவதற்கான தேவை நமக்கு அதிகமாகிறது. இதில் பாசாங்கு ஏதும் இல்லை. அஞ்சலிக் குறிப்புகள் நமது அன்றாட அமைதிக்கு அவசியமானவை. எப்படி என சொல்கிறேன்.
1)   மனிதர்கள் எப்படி நம் வாழ்வில் இடம் பெறுகிறார்கள்? புனைவின் வழி. ஒவ்வொரு மனிதனும் பொதுவாழ்விலோ அந்தரங்க உலகிலோ தனது உரையாடல்கள் வழி தன்னை ஒரு பாத்திரமாக உருவாக்கிக் கொள்கிறான். அவனது அடிப்படையான குணாதசியம், அவனது உடன்மொழி, கையசைவு, குரல், நம்பிக்கைகள், உணர்வுநிலை என ஒவ்வொன்றாய் நம் நினைவடுக்குகளில் சேர்ந்த பின் அவன் நம் வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கிறான். அப்போது அவன் தன்னைப் பற்றி ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான் (இதை கோட்பாடுகளில் கதையாடல் என்கிறார்கள்).
 அதாவது நமது அன்றாட வாழ்வு பல் வேறு சினிமாக்களின் தொகுப்பே. டிவியில் பார்க்கும் மனிதர்கள், பண்பலை வானொலியில் நாம் கேட்பவர்கள், சாலையில் எதிர்வருபவர்கள், அலுவலகத்து நண்பர்கள், உயரதிகாரி ஆகிய ஒவ்வொன்றும் ஒருவித சினிமா. நம் குடும்பம் நாமும் பங்கு பெறும் நாம் மட்டுமே பார்க்க முடிகிற ஒரு அந்தரங்க சினிமா. நம் மனம் இப்படித் தான் மனிதர்களையும் அவர்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளையும் புரிந்து கொள்கிறது. ஞாநியைப் போன்று ஒருவர் இறக்கும் போது என்னவாகிறது? ஒரு படத்தில் சட்டென ஒரு காட்சியில் ஒரு பாத்திரம் மட்டும் மறைந்து போனால் என்னவாகும்? அவருடன் பேசும் மற்ற பாத்திரங்கள் காட்சியில் தம் பாட்டுக்கு இயங்குகிறார்கள். ஆனால் இவரை மட்டும் காணவில்லை. எவ்வளவு அபத்தம்! இதை எப்படி எதிர்கொள்வது?
நான் சிறுவனாய் இருக்கும் போது வி.சி.ஆர் எனப்படும் வீடியோ காசெட்டை போட்டு படம் பார்க்கும் கருவி இருந்தது. ஏதாவது ஒரு விடுமுறையின் போது அதை வாடகைக்கு எடுத்து நாங்கள் படம் பார்போம். ஒருமுறை “கேப்டன் பிரபாகரன்” பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது தீவிர கேப்டன் விசிறி. என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த அண்டை வீட்டு பையன்களும் தாம். படம் பாதியில் இருக்கும் போது மின்சாரம் போய் விட்டது. இரண்டு நாட்கள் மின்சாரம் வரவில்லை. நாங்களும் வாடகைக் காலம் முடிந்ததால் காசெட்டையும் வி.சி.ஆரையும் திரும்ப கொடுத்து விட்டோம். படத்தின் மிச்சக் கதை என்ன? அடுத்து என்ன ஆகியிருக்கும் எனும் கேள்வி எங்களை அலைகழித்தது. பரபரப்பு தாங்காமல் நாங்கள் பையன்கள் சேர்ந்து மிச்ச படத்தின் கதையை ஊகித்து ஒரு விளையாட்டாக மாற்றினோம். ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மிச்ச கதையை நாங்களே பேசி நடித்து விளையாடினோம். உண்மையில் அதை படத்தை விட நல்ல சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது. மின்சாரம் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி விளையாடியிருக்க மாட்டோம்.

ஒவ்வொரு ஆளுமை நம் புலன்களில் வெளியில் இருந்து மறையும் போது நாமும் இப்படியே கற்பனை செய்து விளையாடுகிறோம். அந்த விளையாட்டு தான் அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவது. இதன் வழி இல்லாமல் போன ஞாநியை மீட்டுக் கொணர்கிறோம். அவரது குரலை அவருக்கு மீள அளிக்கிறோம். அவரை நம் கண்முன் நிகழ்த்திப் பார்க்கிறோம். எழுத்தின் அபாரமான ஆற்றல் அது நிறுத்தாமல் கனவுகளை உற்பத்தி செய்யக் கூடியது என்பது. லூப்பில் ஒரு காட்சியை பார்ப்பது போன்றது இது.
 எழுத்தின் பதிவாகும் நினைவுகள், கனவுகள், நம்பிக்கை சித்திரங்கள் மரணமுறாது. ஆக, அஞ்சலிக் குறிப்பின் வழி நாம் ஞாநியை மரணமற்றவராய் மாற்றி நம் அருகே வைத்துக் கொள்கிறோம். அவர் சட்டென போய் விட்டாரே எனும் அதிர்ச்சி தரும் பதற்றத்தை இப்படிப் போக்குகிறோம். இந்த வாழ்வு அநிச்சயமானது என எந்த ஆளுமையின், பிரியமான நபரின் மறைவும் நமக்கு உணர்த்தும். அஞ்சலிக் கட்டுரையும் நிச்சயம் அதை உறுதிப் படுத்துகிறது. அதேவேளை முரணாய் இவ்வாழ்வு நிச்சயமானது என்பதையும் அஞ்சலிக் குறிப்பு உணர்த்துகிறது. அஞ்சலிக் குறிப்பு ஒருவிதத்தில் கர்த்தர் கல்லறையை திறந்து “லாசரஸ்! வெளியே வா” என அழைத்ததைப் போன்றது.

2)   அடுத்த காரணம் பண்பாட்டு ரீதியானது. நமது நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும் உண்மையாய் வாழ்ந்து மறைந்த மனிதர்களே. இம்மனிதர்கள் எப்படி தெய்வமாகிறார்கள்? தொன்மக் கதைகள், அவற்றை ஒட்டின சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் வழி. மனிதர்களை இப்படி தெய்வமாக்குவது நமது தொன்று தொட்டு இருக்கிற பழக்கம்.
இதில் ஆர்வமூட்டும் விசயம் இத்தொல் கதைகள் நேற்று உருவாகி உறைந்து போகிறவை அல்ல. எங்கள் ஊரில் உள்ள பூதத்தான், மாடன் ஆகிய சாமிகளின் தோற்றம் பற்றி உள்ள கதைகளை விட அச்சாமிகள் தம் வாழ்வில் எதிர்பட்டதைப் பற்றி எளிய மக்கள் கூறும் நடுங்கச் செய்யும் கதைகளே அதிகம். என் நண்பன் பூதத்தான் சாமியின் சலங்கை ஒலியை ஓரிரவு கேட்டதாய் என்னிடம் உணர்ச்சிபூர்வமாய் விவரித்த போது நானும் நம்பினேன். இன்னொரு நண்பன் மாடசாமி தன்னை முதுகில் அறைந்த அழைத்ததைச் சொல்லி சட்டையை அவிழ்த்து சிவந்து தடித்த தடம் ஒன்றையும் காட்டினான். இவர்கள் யாரும் மனம் பிறர்ழ்ந்தவர்கள் அல்ல. சாமிகள் இப்படித் தான் நம் வாழ்வில் நீடிக்கிறார்கள்; இப்படித் தான் நம் கை பிடித்து அவர்கள் உலவுகிறார்கள். அஞ்சலிக் குறிப்பெழுதுவதும் இந்த தொல்மரபின் ஒரு நீட்சியாக இருக்கலாம். நாம் ஓரளவுக்கு மேல் தோளில் கையிட்டு அணுக்கமாய் பழக முடியாத ஆளுமைகளை நம் கையில் அமரும் பட்டாம்பூச்சியாய் மாற்றி வைத்துக் கொள்ள அஞ்சலிகள் உதவுகின்றன.

ஆகையால் அஞ்சலிக் குறிப்புகள் நம் பாசாங்கின், போலித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மரணத்தை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்வதற்கு நம்மிடம் உள்ள ஒரு அற்புதக் கருவியே அஞ்சலிகள்!

கருத்துகள்

premkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Woww superb write up sir

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...