முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியாவின் முதல்வன் பாணி அரசியல்



ஆகாஷ் விஜய்வர்கியா மத்திய பிரதேச பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன். நடப்பு எம்.எல்.. அவர் கடந்த வாரம் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்து மக்களை வெளியேற்றிய முனிசிப்பல் அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து விரட்டிய சம்பவம் வைரல் காணொளியாகி பெரும் சர்ச்சையானது. ஆகாஷ் கைது செய்யப்பட்டு உடனே பெயில் வாங்கி பெரிய கட்சி வரவேற்புடன் வெளியே வந்தார். அந்த அதிகாரி வீட்டுக்குள் புகுந்து ஒரு பெண்ணை பலவந்தமாக வெளியேற்றதாலே பொறுக்க முடியாமல் தான் அவரை தாக்கியதாகவும் அதற்கு தான் வருந்தவில்லை எனக் கூறினார் ஆகாஷ். அவரது அப்பாவும் தன் மகன் எந்த குற்றமும் பண்ணவில்லை, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையே இந்த செயலுக்கு காரணம் என தடித்தனமாக பதில் சொல்லி உள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்த சம்பவத்தை மறைமுகமாக கண்டித்துள்ளார். இத்தகையை பொறுப்பற்ற அரசியல்வாதிகள் தன் கட்சியில் இருக்கவே தகுதியற்றவர்கள், அவர்கள் பாஜகவின் பெயரை கெடுப்பவர்கள் எனக் கூறியுள்ளார். இங்கு இரண்டு விசயங்கள் சுவாரஸ்யமானவை.



  1. இந்த காட்சிமுதல்வன்படத்தில் ஒருநாள் முதல்வரான பின் அர்ஜுன் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகளை தொந்தரவு செய்யும் ரௌடிகளை சேரிக்குள் புகுந்து துரத்தி அடித்து காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்கிற காட்சியை நினைவுபடுத்துகிறது. இத்தகைய காட்சிகள்பரத்தாகிய நான்தெலுங்குப் படத்திலும் வந்தன. காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர் ஏன் சண்டை போட வேண்டும்? சாமான்ய மக்கள் ஓட்டுப் போட்டே ஒருவரை தலைவராக, எம்.எல்., முதல்வராக உயர்த்துகிறார்கள் என்றாலும் அவர்கள் நகைமுரணாக தேர்தலில் வென்ற பின் சாமான்யர் எனும் நிலையில் இருந்து நகர்ந்த்து ஆளும் வர்க்கம் ஆகின்றனர். ஆளும் வர்க்கத்தின் முகம் ஆன பின் அதன் சீரழிவுகளுக்கு அவர்கள் பொறுப்பாக வேண்டும். தனக்குக் கீழ் உள்ளோரின் பொறுப்பின்மைக்கும் பொறுப்பாக வேண்டும். ஆனால் ஆளும் தரப்பு ஆன பின்னரும் ஒருவர் எளிய மக்களைப் போல தெருவில் இறங்கி சண்டை இடும் போது அவர் பெறும் அனுகூலம் ஒன்று உண்டு - அவர் அப்போது தன்னை தற்காலிகமாக அதிகாரமற்ற சாமான்யராக காட்டிக் கொள்கிறார். அப்படி காட்டிக் கொள்ளும் போதே அவர் அதிகாரம் மிக்கவராகவும் காட்டிக் கொள்கிறார் - ஏனென்றால் தெருவில் இறங்கி சண்டையிடுகிற சாமான்யன் கைது செய்யப்பட்டு காவல்துறையால் லாடம் கட்டப்படுவான்; ரௌடி என பட்டம் கட்டப்பட்டு தன் வேலையை இழப்பான். ஆனால் அதிகாரியை அடித்தால் கூட ஒரு அரசியல் தலைவருக்கு இத்தகைய பாதகங்கள் ஏற்படாது. அடிப்பதை விட இப்படி அடித்து சட்டத்தை மீறிய பின்னரும் அதே கெத்துடன் பாதுகாப்பாக இருப்பது தான் நிஜமான ஹீரோயிசம். இப்படி ஒரே சமயம் ஒரு அரசியல்வாதி தன்னை அதிகாரம் அற்றவராகவும் கொண்டவராகவும் காட்டிக் கொள்ள தெருச்சண்டை, தெருவில் நிகழ்த்தப்படும் வன்முறையான தர்ணா ஆகியவை நல்ல உபாயங்கள். சில வருடங்களுக்கு முன் முதல்வராக கேஜ்ரிவால் சாலையில் அமர்ந்து போராட்டம் பண்ணியது இந்த உபாயத்தின் ஒரு கண்ணிய வடிவமே. ஆகாஷ் விஜய்வர்கியாவின் அரசியல் இத்தகைய சினிமாத்தனம் கொண்டது தான். அவர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு அதிகாரியை நோக்கி அடிக்க செல்லும் போதே அது தன்னை மறந்த செயலாக இல்லை, அவர் ஊடக கவனம் குறித்த பிரக்ஞையுடன் அதை செய்வதை காணொளியில் நாம் அவதானிக்கலாம். இத்தகையமுதல்வன்பாணி அரசியல் சேட்டைகள் இனி அடிக்கடி எதிர்காலத்தில் நிகழும் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பிம்ப அரசியலே மக்களிடம் ஆதரவு பெறும் அரசியலாக இன்று உள்ளது. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது ரௌடி அரசியல் என்றால் நீங்கள் ரௌடியாக இருக்கத் தேவையில்லை. நீங்கள் கனவானாக வாழ்ந்தபடியே ரௌடியாக பிம்பத்தை கட்டமைத்து மக்களிடம் ஆதரவு பெறலாம். ஆகாஷ் இதையே பண்ணி இருக்கிறார். அந்த குடியிருப்பு பகுதியில் இந்த அதிரடியால் அவரது செல்வாக்கு பெருகி இருக்கும். யோசித்துப் பாருங்கள், நீங்கள் அரசில், காவல்துறையில், அதிகாரவர்க்கத்தில் நம்பிக்கை இழந்த, அமைதிக் குலைவை, சட்டமீறலை பொருட்படுத்தாத சாமான்யன். உங்கள் வீட்டை ஒரு அரசு அதிகாரி ஜப்தி பண்ண வருகிறார்; உங்கள் கவுன்சிலர் அங்கு வந்து அந்த அதிகாரியை உதைத்தே விரட்டினால் உங்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்படாதா? எதிர்கால தலைமுறை அரசியல்வாதிகள் இத்தகைய மீறல் அரசியல் நாடகங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன்.
  2. மோடி ஒரு பக்கம் ஆகாஷை மறைமுகமாக கண்டித்தாலும் அவர் அதை ஒரு குற்றம் எனக் கூறவில்லை, தன் கட்சிக்கு இத்தகையோரால் நேரும் களங்கத்தைப் பற்றி, பாஜகவின், தனது பிம்பத்தில் படும் கறையைப் பற்றித் தான் அவர் கவலை கொள்கிறார். ஆனால் பாஜக தொடர்ந்து இப்படி சட்டத்தை கையில் எடுத்து கலவரங்கள் நடத்தியே வெற்றிகளை குவித்த கட்சி அல்லவா? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடி பாகிஸ்தானில் நடத்திய சர்ஜ்ஜிக்கல் ஸ்டிரைக்கும் ஆகாஷின் கிரிக்கெட் மட்டை தாக்குதலுக்கும் என்ன வித்தியாசம்? மோடி தேச பக்தியின், பாதுகாப்பின் பெயரில் ராணுவத்தைக் கொண்டு நடத்திய நாடகமே அந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள். அது நிஜயுத்தம் அல்ல. பாகிஸ்தான் அசரவே இல்லை. அது ஒரு டிவி யுத்தம். அதைக் கொண்டு பாஜக சமீபத்தில் முடிந்த தேர்தலில் பெரும் அறுவடை செய்தது. புல்வாமா தீவிரவாத தாக்குதலை இந்தியா நினைத்தால் தடுத்திருக்க முடியும் என அறிவோம். ஆனால் பெரும் எண்ணிக்கையில் ராணுவத்தினர் கொல்லப்பட்டதும் ஆளும் மத்திய அரசு ஒரு சாமான்யனைப் போல பலவீனமாய் தன்னை சித்தரிக்க முடிந்தது, அடுத்து சாமான்யனின் சார்பில் பாகிஸ்தானின் சில கற்பனை தீவிரவாத முகாம்களில் குண்டு மழை பொழிந்து ஹீரோயிசம் பண்ண மோடியால் முடிந்தது. ஆகாஷைப் போன்றோர் சின்ன அளவில் சுயமாய் நேரடியாக செய்ததையே மோடி மிக பிரம்மாண்டமாக, காட்சிபூர்வமாக, நிறைய பொருட்செலவில், திட்டமிடலுடன் மறைமுகமாய் பண்ணினார். தனது அதே வகை அரசியலை கொஞ்சம் மலினமாக முன்னெடுக்கும் ஒரு இளம் தலைவரை மோடி விமர்சிப்பது நகைமுரணாகும். ஆகாஷின் அப்பா சொல்வது தான் சரி - அவர் இன்னும்முதிரவில்லை”  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...