முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் தேய்வழக்குகள்


 

நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அங்கு தண்டனையை சீர்திருத்தம் என அழைக்கிறோம்).

அடுத்தொரு தேய்வழக்கு படித்தவர்கள் அடிப்படையில் நல்லவர்கள், தூய்மையானவர்கள், உலகைத் திருத்தத் துடிக்கிறார்கள் என்பது. நான் கவனித்தவரையில் படித்தவர்கள் தன்னலம் மிக்கவர்களாகும் வாய்ப்பே அதிகம் (நான் இதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).
இத்தேய்வழக்கு எண்ணங்களே நம்மை இளைஞர்கள் அதிகமாக தவெக போன்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது "புத்தம் புது பூமி வேண்டும்", "எடுடா அந்த சூரிய மேளம்" என்றெல்லாம் பாட வைக்கிறது. ஆனால் அவர்கள் வந்து ஒரே மாதத்தில் தனியாக ஊழல் செய்ய வீட்டையே வாடகைக்கு எடுத்து அலுவலகமாக்கியும் டெண்டர் ஊழலில் தனக்குப் பங்கு தராவிட்டால் செல்லில் ஜட்டியோட இருக்க வைத்து அடிப்பேன் என்று மிரட்டவும் செய்யும்போது, 100 கோடி பழனியாண்டவர் கோயில் சொத்தை மட்டமாகத் திட்டமிட்டுத் திருடப் பார்க்கும்போதும் அதிர்ச்சியடைய வைக்கிறது. எத்தனை எத்தனை பேர்கள் சொன்னார்கள், இளைஞர்கள் இவர்கள், அவகாசம் கொடுங்கள், நம்புங்கள், புதிய சக்தி அது இதுவென. இன்னும் சிலர் இவர்கள் நல்லவர்கள்தாம், கீழே இருக்கும் அதிகாரிகளே ஊழலில் திளைத்தவர்கள் என்கிறார்கள். இல்லை, இவர்களே நூற்றுக்கணக்கான கோடிகளைச் சுருட்டுகிறார்கள். அதிகாரிகள் லட்சங்களில்தான். இதை நீங்கள் பத்திரிகைச் செய்திகளைப் படித்தாலே தெரிந்துகொள்ள முடியும். ஓராண்டு நிறைவடையும்போது இந்த அமைச்சர்கள் தலா ஆயிரம் கோடிக்கு மேல் அடித்துவிடுவார்கள். சரி அமைச்சர்கள்தாம் கெட்டவர்கள், விஜய் ஒரு அப்பாவி, வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதவர் என்றில்லை. அவர் இவர்களைவிட பத்து மடங்கு அடித்துவிடுவார்.
சரி இந்த இளைஞர்கள்தாம் அப்பழுக்கற்றவர்கள் இல்லை அண்ணாமலையின் பின் வரும் களங்கமற்ற இளைஞர்கள் படித்தவர்கள், தேசப்பற்று மிக்கவர்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று நினைத்தால் அவர்களும் இதையேதான் செய்வார்கள்.
மனிதர்களை வயது வித்தியாசமின்றிப் பார்க்க வேண்டும். நம் மிகைக் கற்பிதங்களைச் சுமத்தாமல் பரிசீலிக்க வேண்டும். இந்த உலகில் நல்லவர்கள், களங்கமற்றவர்கள் என யாரும் இல்லை. எல்லாரும் தன்னலம் மிக்கவர்களே. அவர்களைக் கறாராகக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்க மட்டுமே நம்மால் முடியும்.
அரிஸ்டாட்டில் சொல்வதைப் போல ஒருவரது நடத்தையை கணிக்க அவரது கடந்த காலத்தை, அவர்கள் வெளிப்படுத்தி உள்ள எண்ணங்களை, தொடர்ச்சியை, தொடர்ச்சியின்மையை நுணுக்கமாக ஆராய வேண்டும். பெரும்பாலும் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு நீட்சி இருக்கும். ஒருவர் தான் சின்ன வயதில் முதலையைப் பிடித்துக் கட்டிப் போட்டதாகக் கதைவிட்டால் அவர் ஆட்சிக்கு வந்தபின்னரும் கதைதான் விடுவார். அதனால் நம் பொருளாதாரம் சீரழியும், வெறுப்புப் பிரச்சாரம் பரவும், மக்களாட்சி முறை நசிவுறும். ஒருவர் அதிகாரியாக இருந்தபோதே கையூட்டுப் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்து, பாலியல் காணொளிகளைப் பதிவு பண்ணி மிரட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குப் பயந்து வேலையை விட்டு அரசியலுக்கு வந்து நான் கிராமத்து வாழ்க்கையை, ஆடு மேய்ப்பதை விரும்புகிறேன், நான் தேசபக்தன், இளைஞர்களுக்கு வழிகாட்டுபவன் என்றாலும் அவரது கடந்த காலத்தைத்தான் விசாரிக்க வேண்டும். அதிகாரியாக இருக்கும்போது செய்த குற்றங்களைத்தான் அரசியலுக்கு வந்தபிறகும் செய்வார்.
ஒருவரைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஊடகம் சொல்வதை நம்பாமல் பொறுமையாகத் தேடிப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தம் பிரச்சாரத்திற்காக இன்று ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவிடுகிறார்கள் என நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசியல் பிம்பமும் ஒரு பிராண்ட், ஒரு முதலீடு. குஜராத் ஒளிர்கிறது என்று சொன்னால் பத்தாண்டுகளில் அந்த மாநிலத்தின் நிஜமான தரவுகள் என்ன, குற்றச்சாட்டுகள் என்னவென்று விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். தெரியும்வரைப் பொறுக்க வேண்டும்.
அப்பழுக்கற்ற இளைஞர்கள், கறாரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் உருக்கு மனம் படைத்த நிர்வாகி போன்ற தேய்வழக்குகளே நமது அரசுகள் இவ்வளவு கேவலமாக இருக்கக் காரணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...