முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தி தீர்ப்பு - கறுப்பு தினம்



அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறியுள்ள உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய (மசூதி அமைக்கப்பட்டுள்ள) நிலத்தில் மசூதியை அகற்றி இடித்து விட்டு அங்கு ராமர் கோயிலை எழுப்ப ஆணையிட்டுள்ளது. இந்த ஆலய நிர்மாணத்துக்கு மூன்று மாத காலக்கெடுவை விதித்து அதற்கு பொறுப்பாக ஒரு இந்து அறங்காவலர் குழுவை அமைக்கவும் அது அரசுக்கு ஆணையிட்டுள்ள்ளது. மற்றொரு பக்கம் இடிக்கப்பட்ட மசூதிக்கு ஈடாக 5 ஏக்கர் நிலமொன்றில் மற்றொரு மசூதியை கட்டுவதற்கு வக்ப் அமைப்புக்கு நீதிமன்றம் அளித்துள்ளது. ஆனால், திருமாவளவன் குறிப்பிடுவதைப் போல, இந்த மசூதியை ஒன்று மைய அரசோ மாநில அரசோ கட்டலாம் எனச் சொல்லும் நீதிமன்றம் இதன் மூலம் கட்டுமானப்பணி தொடர்ந்து தள்ளிப் போடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. அதோடு ராமர் கோயிலுக்கு தந்துள்ளதைப் போல காலக்கெடுவை ஏன் மசூதி கட்டுவதற்கும் நீதிமன்றம் விதிக்க வில்லை எனும் கேள்வி முக்கியமானது. இன்னொரு பிரச்சனை எந்த அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது. இதைப் பற்றி பேசும் போது பல கேள்விகள், சிக்கல்கள் எழுகின்றன.

1) ஒரு வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாதபட்சத்தில் நிலைமையை இருக்கிறபடி தொடர அனுமதிப்பதே நீதிமன்ற மரபு. (ஒருவர் குற்றம் சாட்டப்பட்டாலும் அவர் மீது ஆதார இல்லையென்றால் அவர் விடுவிக்கப்படுவார்.) எப்போதுமே நம்பிக்கை, மக்களின் செண்டிமண்ட், சமூகங்கள் இடையிலான நல்லுறவு ஆகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடாது. தலித்துகளை உயர்சாதியினர் சிலர் கொன்று விட்ட ஒரு வழக்கு இருக்கிறதெனக் கொள்வோம். வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உயர்சாதியினர். அவர்கள் வழக்கில் தம் ஆட்கள் விடுவிக்கப்படுவதையே விரும்புவர். நீதிமன்றமும் இப்போது பெரும்பான்மையை ஆதரிக்க, அதன் மூலம் சமூக அமைதியை நிலைநிறுத்த முயன்றால், சட்டம் செத்து விடும். கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைப்பாட்டை அயோத்தி வழக்கிலும் நீதிமன்றம் எடுத்துள்ளது.
2) நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாமா? அதுவும் புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிக்கலாமா? கூடாது. இவ்வழக்கில் புராணப் பிரதிகளில் ராமர் பிறந்த இடம் அயோத்தி என சொல்லப்படுகிறது; இதுவே மக்களின் நம்பிக்கை என தீர்ப்பின் இணைப்பில் நீதிபதிகள் கூறி உள்ளார்கள். இப்படி ஒரு அபத்தமான கூற்று வேறு எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் கூறப்பட்டு நான் கண்டதில்லை. நாளை பல ஆபத்தான சமூகப் போக்குகள் தோன்ற, ஒருவேளை வழக்குகளில் பிற்போக்கான தீர்ப்புகள் வழங்கப்பட இது வழிவகுக்கலாம்; முன்னுதாரணமாகலாம். ஒரு உதாரணத்திற்கு ராமாயணத்தில் சீதையின் கற்பு குறித்து ஊர்மக்கள் கேள்வி எழுப்பும் போது ராமர் அவளை தீக்குள் புகுந்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்கக் கேட்கிறார். நாளை இந்த நடைமுறையை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் நடைமுறைப்படுத்தினால் அதை நாம் இதே போல ராமாயணத்தின் அடிப்படையில், ஒரு நம்பிக்கை எனும் பட்சத்தில், நியாயப்படுத்தலாமா? மகாபாரதப் போர் ஏன் நடக்கிறது? பாண்டவர்களின் மனைவியை கௌரவர்கள் அவமதித்ததால். இது புராணக்கதை. இதை இந்தியா முழுக்க இந்துக்கள் நம்பி ஏற்கிறார்கள். இதே போல ஒருவர் தன் மனைவியை அவமதித்தவரைக் கொன்று விட்டு மகாபாரத அடிப்படையில் தன் செயல் குற்றமில்லை எனச் சொன்னால் அதை நீதிமன்றம் ஏற்குமா? தீண்டாமை நமது சட்டப்படி ஒரு குற்றம். ஆனால் புராணக் கதைகளின் தீண்டாமை குற்றமல்ல. கர்ணன் ஒரு அந்தணன் அல்ல எனத் தெரிய வரும் போது அவனது குருவான பரசுராமன் அவரை சாபமிட்டு வெளியேற்றுகிறார். பின்னர் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் எனத் தெரிய வரும் போது அர்ஜுனன் அவனுடன் போட்டியிட மறுக்கிறான். அன்றைய சமூகத்தில் ஒருவர் தன் சாதி எல்லையைக் கடந்து கல்வி கற்கவோ போட்டியிடவோ அனுமதி இல்லை. இதை நமது மரபு, நம்பிக்கை எனக் கோரும் ஒரு ஆசிரியர் இன்று தன் மாணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கக் கூடாது எனச் சொல்லி வகுப்பில் இருந்து மாணவரை வெளியேற்றினால் என்னவாகும்? தன் சகமாணவருடன் இதே போல சாதி அடிப்படையில் தேர்வு எழுத முடியாது என ஒரு மேல்சாதி மாணவர் பிரச்சனை செய்தால் என்னவாகும்? அடிப்படை உரிமையா நம்பிகையா என வரும் போது நீதிமன்றத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? இந்தியாவில் எல்லாருக்கும் தம் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என அரசியலமைப்பு கூறுகிறது. சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதியில் அப்படியாக இஸ்லாமியர் வழிபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் தம் மதத்தை பின்பற்றும் இந்த உரிமையைத் தான் பத்தொன்பதாம் நூற்றாடில் இருந்தே இந்துத்துவ அமைப்பினர் எதிர்த்து வருகிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து இந்த உரிமையை பாதுகாத்தும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சியாளர்கள் மற்றும் நீதி அமைப்புகள் இந்த உரிமையை தொடர்ந்து மறுத்தும் வந்துள்ளனஎதிர்காலத்தில், “சமூக அமைதியைகாப்பாற்றும் பொருட்டும், மரபான நம்பிக்கைகளின் அடிப்படையிலும் சாதி அமைப்பை, வர்ணாசிரமத்தை நமது நீதிமன்றங்கள் ஆதரித்து தீர்ப்பளிக்காது எனக் கூற முடியுமா

3) பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சொல்லப்பட்டாலும் அது இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அகழ்வாராய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவை இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன் படி அந்த மசூதிக்குக் கீழே உள்ள கட்டிட அமைப்பின் மீதங்கள் அங்கு முன்னர் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கவில்லை என அகழ்வாராய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் இது ஒன்றும் புதுச் செய்தி அல்ல. பாபர் அந்த மசூதியை கட்டுமுன் அங்கு வேறு மசூதிகள் இருந்ததென யாரும் கோரவில்லை. அது வரலாறும் அல்ல. அதே நேரம் இந்துக்கோயில் இருந்ததற்கான ஆதாரத்தையும் அகழ்வாராய்வு அறிக்கை தரவில்லை. நியாயமாக அங்கு இதற்கு முன் இந்துக்கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதே இவ்வழக்கில் அங்கு மசூதி கட்டுவதற்கான முகாந்திரத்தை அளிக்கிறது. ஆனால் நீதிமன்றம் (திருமாவளவன் சொல்வதைப் போல) இதை வசதியாக தவிர்த்து விட்டு ஒருதலை பட்சமாக, ஆதாரத்தை தனக்கேற்றபடி வளைத்து பயன்படுத்தி உள்ளது.

4) ராமர் அயோத்தியில் அந்த குறிப்பிட்ட நிலத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த வரலாற்று அகழ்வாராய்வு ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் அதற்குப் பதிலாக புராணக் கதைகளை ஆதாரமாக கருதி உள்ளது. இது இரண்டு விதங்களில் பிரச்சனையாகிறது. இந்தியாவில் ராமர் மட்டும் அல்ல நூற்றுக்கணக்கான வேறுபல கடவுள் அவதாரங்களும் அவர்களுக்காகபிறப்பிடங்களும்உண்டு. நாளை இதை வைத்து யாருக்கு சொந்தமான நிலத்தையும், வழிபாட்டுத் தலத்தையும் மத அமைப்புகள் உரிமை கோர முடியும். (ஏன் ராவணனைத் தோற்கடித்து ராமர் வென்றெடுத்த இலங்கை மட்டும் ஏன் இந்தியாவுக்கு சொந்தமாகக் கூடாது?) 
5) அடுத்து ராமர் ஒரு மனிதராக அயோத்தியில் பிறந்தார் என்றால் அவர் கடவுள் அல்ல மனிதர் என பொருள் வரும். ராமாயணத்தில் ராமர் ஒரு அவதாரம், ஆனால் அவர் மனிதர் அல்ல. விஷ்ணு / சிவனைப் போல தெய்வமும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்டவர். அதனாலே அவரால் வில்லேந்தி கானகத்துக்கு சென்று பெரும் ராட்சதர்களைக் கொல்ல முடிகிறது. சமுத்திரத்துக்குக் குறுக்காக பெரும் பாலம் அமைக்க முடிகிறது. அந்த பாலம் ராம் எனும் பெயர் எழுதப்பட்ட கற்கள் பரஸ்பரம் ஒட்டிக் கொள்ள மந்திரம் போலத் தோன்றுகிறது. இதே காரணத்தால் தான் ராவணனால் புஷ்பக விமானம் ஓட்ட முடிகிறது. அதாவது ராமர் மனிதர் அல்ல என்பதே இந்த அதிசயங்களை, மாந்திரிக நிகழ்வுகளை சாத்தியமாக்குகிறது. இப்போது ராமர் அயோத்தியில் பிறந்தார் என உச்சநீதிமன்றம் சொல்வது உண்மையானால் ராட்சதர்களும் புஷ்பக விமானமும் உண்மை என ஆகி விடும். சீதை தீக்குளித்ததும் ராவணனுக்கு பத்து தலை என்பதும் உண்மையாகி விடும். இவை கதையோ கற்பனையோ அல்ல உண்மைக்கதைகள் என ஆகி விடும். இப்போது இந்த புனைவுகளை வரலாற்று நூலின் பகுதியாக்கி பள்ளியில் குழந்தைகளுக்கு பழங்கால இந்திய வரலாறு என கற்பிக்கலாமா? உச்சநீதிமன்றம் இதை ஏற்குமா?

6) ஒரு பக்கம், மூடநம்பிக்கையை வரலாறாக்குகிறது என்றால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இன்னொரு பக்கம் இந்து நம்பிக்கைக்கே விரோதமானது ஆகிறது - ராமர் ஒரு மனிதர், அவர் நிஜமாகவே வாழ்ந்தார் எனும் போது அவர் தெய்வம் இல்லை, சாய்பாபா, ஶ்ரீ ஶ்ரீ போல வழிபாட்டுக்குரிய தெய்வீக மனிதர் என ஆகிறது. அதாவது ஶ்ரீ ஶ்ரீயும் சத்குருவும் ராமரும் ஒரே போன்றவர்கள் என ஆகிறது (ஶ்ரீ ஶ்ரீ, சத் குருவைப் போன்றே ராமருக்கும் பிறப்பிடம், முகவரி எல்லாம் இருக்கிறது எனும் போது). இதை ஒரு நாட்டார் நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளத் தக்கதே; ஆனால் வைதீக மதம் இதை எப்படி ஏற்க முடியும்? வைதீக இந்து மதத்தில் தெய்வம் தெய்வம் தான், மனிதன் மனிதன் தான். இருவரும் ஒன்றாக முடியாது. .தா., கிருஷ்ணருக்கு ஆயிரம் கோபிகையர், மனைவியர் என்பது புராண நம்பிக்கை. லீலை என்பது நிஜமான மனித லீலை அல்ல. ராமரைப் போல கிருஷ்ணனரும் நிஜம் என ஆகி விட்டால் அவர் ஒரு ஆபாசமான மனிதர் என பொருள் வந்து விடும். ராமரோ பஞ்ச பாண்டவர்களோ தந்தைப் பெயர் அறியாதவர்கள் (சோதனைக் குழாய் குழந்தைகள்) என ஆகி விடும். அதாவது, நான் இதைக் கூறவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு இப்படி இந்து மனத்தை மறைமுகமாக புண்படுத்தும் பார்வையை கொண்டிருக்கிறது. இப்படி தெய்வத்தை மனிதர் என உச்சநீதிமன்றம் கோருவது நாத்திகப் பார்வையாகிறது.
கிறித்துவர்கள் ஒரு போதும் கர்த்தர் ஒரு வரலாற்று மனிதர் என ஏற்க மாட்டார்கள். ராமரையோ உச்சநீதிமன்றம் வரலாற்று மனிதராக்கி இந்துக்களை (அவர்களது) செருப்பாலே அடிக்க அதை ஏன் இந்துத்துவர்கள் ஆதரிக்கிறார்கள்? இந்துத்துவர்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்பதை இது நிரூபிக்கிறதா?

7) இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் வழக்கு இது எனும் பட்சத்தில் இதற்கு ஒரு அறுதியான முடிவை நீதிமன்றம் தந்துள்ளது நல்லதே என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் இது இத்தகைய சர்ச்சைகளுக்கான முடிவாக இருக்கும் என நாம் உறுதியாகக் கூற முடியாது. 1980இல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ அலையை வலுவாக்க விரும்பிய ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடங்களுடன் தொடர்புடைய மசூதிகளைக் குறி வைத்து சர்ச்சைகளை உண்டுபண்ணி, அந்த இடங்களை இந்துக்களுக்காக மீட்க ஒரு இயக்கம் ஆரம்பிக்க முடிவெடுத்தது. இதற்காக காசி, மதுரா, அயோத்தி ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளை இலக்காக்க அது முடிவெடுத்தது. ஏப்ரல் 7-8 ஆகிய தேதிகளில் தில்லி விக்யான் பவனில் நடந்த இந்துத்துவ மாநாட்டில் வரலாற்றுப் பின்னணியையும் மக்கள் ஆதரவையும் கணக்கில் கொண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி தேர்வானது. இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அயோத்தி என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் இலக்கு பட்டியலில் உள்ள பல பெயர்களில் ஒரு பெயர் மட்டும் தான் என்பது. நாளை இந்துத்துவ அரசியல் தொய்வடையும் போது வேறு மசூதிகள் மற்றும் சிறுபான்மை வழிபாட்டுத்தலங்களை ஆர்.எஸ்.எஸ் எடுத்துக் கொண்டுரத யாத்திரைகளைஆரம்பிக்கலாம். இந்த தீர்ப்பை ஒரு நீண்ட கால பிரச்சனையின் முடிவு என பெருமூச்சு விட்டு ஏற்காமல் இது ஒரு பெரும் பிரச்சனையின் துவக்கப் புள்ளி எனப் பார்ப்பதே தர்க்கபூர்வமானதாக இருக்கும்.

8) இத்தீர்ப்பை வாசித்த தலைமை நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கொகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வழக்கில் கொகோய் சுலபமாய் விடுவிக்கப்பட்டதற்கும், சரியான நடைமுறை பின்பற்றப்படாமல் வழக்கு அவசரமாய் முடித்து வைக்கப்பட்டதற்கும் இப்போது பாஜக அரசுக்கு ஆதரவாக அயோத்தி திர்ப்பு வழங்கப்பட்டதற்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இதனாலே, இந்துத்துவ தரப்பை திருப்திப்படுத்த நீதிமன்ற அமர்வு காட்டியுள்ள அக்கறையும் மிதமிஞ்சிய விருப்பமும் ஒட்டுமொத்தமாக நமது நீதி அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 இத்தீர்ப்பு வெளியான நவம்பர் 9 என்பது மதசார்பற்ற தேசம் என கோரிக்கொள்ளும் இந்த நாட்டின் வரலாற்றில், அம்பேத்கர் எனும் மாமனிதரின் கனவான அரசியலைப்பு சட்டத்தின் வரலாற்றில், ஒரு கறுப்பு தினமாகவே நம் எதிர்கால சந்ததியினரால் அனுசரிக்கப்படும். அந்தளவுக்கு நமது நாட்டின் மத ஒற்றுமைக்கு பாதகமான நாள் இது. சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பின் மீதுள்ள நம்பிக்கைக்கு உலை வைத்த நாள் இது. இறைநம்பிக்கையையும், பகுத்தறிவையும் ஒரே சமயம் செருப்பு மாலையிட்டு கழுதை மீதேற்றிய தினம் இது. கறுப்பு தினம் இது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...