முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுரேஷ் ரெய்னாவின் மிஸ் ஹிட்


தோனியைப் பற்றி நிறைய பேசியாயிற்று; அவர் ஓய்வு பெறும் இந்த பொழுதில் எனக்கு கூடுதலாக சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவருடன் ஓய்வு பெறும் சுரேஷ் ரெய்னாவைப் பற்றி சில வார்த்தைகள் சொல்வது அவசியம்


ரெய்னா ரெண்டாயிரத்தின் பேஸ்மேன்களில் வித்தியாசமானவர் - ஆதிக்கமான ஆளுமையோ, அணிக்குள் குழு அரசியல் பின்புலமோ இல்லை. தன் ஆட்டவாழ்வு குறித்த பெரிய திட்டமிடல், தொலைநோக்கு இல்லை. வடக்கிந்திய வீரர்களைப் போல முரட்டுத்தனம், ‘ஆண்மைச் செருக்கு’, ஆர்ப்பாட்டம், சிங்கம் சூர்யா போன்ற பாவனைகள் ஒன்றுமில்லை. எப்போதும் முகத்தில் அந்த வெகுளிச் சிரிப்பு. பேட்டிகளின் போதும் அவர் தன்னை வலுவாக முன்னிறுத்த மாட்டார். எளிமையான மென்மையான மனிதர் எனும் பிம்பம் இறுதிவரை மாறவே இல்லை.

 ரெய்னா சிறுவயதில் கிரிக்கெட்டுக்காக வீட்டை விட்டு விடுதியில் தங்கி படித்தவர். இதனாலோ ஏனோ பெற்றோரைத் தொலைத்த ஒரு சிறுவனைப் போன்றே அவர் வளர்ந்த பின்பும் இருந்தார். வளர்ந்து தேசிய அணியில் இடம்பெறும் அளவுக்கு முன்னேறிய பிறகும் அவர் மனதளவில் குழந்தைதான் - தீர்க்கமான எண்ணமும், தீர்மானமான போக்கும் கொண்ட ஒருவரை - ஒரு தந்தை தொன்மத்தை - பின்பற்ற விரும்புகிறவர். அவர் சொல்கிறதை அப்படியே பின்பற்றுகிறவர். ரெய்னாவுக்கு அந்த தந்தை தொன்மமாக தோனி இருந்தார். தோனியின் அறிவுறுத்தல் இல்லாத போது அவர் ஏதோ பட்டம் விடும் சிறுவனைப் போல ஜாலியாக அடிப்பார், ஆனால் தோனி துணைக்கு வந்தவுடன் பொறுப்பாக பிரமாதமாக ஆடுவார். சென்னை அணியிலும் தோனியின் கீழ் தான் ரெய்னா சோபித்தார். குஜ்ராத் லயன்ஸில் இருந்த போது திக்குத்தெரியாத காட்டில் கைவிடப்பட்ட யுவதியைப் போன்றே தோன்றினார். இப்போது தோனி ஓய்வு பெற்றதும் அவரும் ஓய்வை அறிவிக்கிறார்


ரெய்னாவின் மனம் எவ்வளவு பலவீனமானது என்பதற்கு 2017ஆம் வருடம் ஒரு உதாரணம். கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தில் இறப்பு நேரும் போது அவர்கள் விடாப்பிடியாக போராடுவதைக் கண்டிருக்கிறோம். சச்சின், கோலி ஆகியோரின் அப்பா காலமான போது அவர்கள் ஈமச்சடங்குக்குக் கூட செல்லாமல் ஆடியிருக்கிறார்கள். மெக்ராத் தன் மனைவி புற்றுநோயால் அவதிப்பட்ட போது  இன்னும் தீவிரமாக கிரிக்கெட்டில் ஈடுபட்டார். ஆனால் 2017இல் ரெய்னாவின் மகளுக்கு உடல் நலமில்லாமல் போன போது அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட பங்கு பெறவில்லை. இதை ஒரு குற்றமென நான் கூறவில்லை. இந்த காலகட்டம் முழுக்க அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்து உடல்தகுதியை இழந்து பருமனாகி பி.சி.சி.ஐயின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளானார். திராவிட், சச்சினில் இருந்து தோனி, கோலி வரை இப்படியான ஒரு குடும்பத் துயர் நேர்ந்திருந்தால் வேறுவகையில் நிதானமாய் கையாண்டிருப்பார்கள். ஆனால் ரெய்னா உடைந்து போய் விட்டார். அடுத்து அவர் வேறு உடல்நலிவுற்றுப் போனார்.

 ரெய்னாவின் இந்த நிலையற்ற மனம் அவரது கிரிக்கெட் வாழ்வு ஏற்ற இறக்கங்களுடன் இருந்ததற்கு 33 வயதிலேயே அவர் ஓய்வு பெற்று விட்டதற்கு ஒரு காரணம் எனலாம்.


ரெய்னா தனக்கு ஐந்து வருடங்கள் முன்பு வந்த யுவ்ராஜ், கேயிப்பைப் போன்றே அபாரமான களத்தடுப்பாளர். சாமர்த்தியமான பகுதிநேர ஸ்பின்னர். வேகப்பந்தையும் சுழல்பந்தையும் ஒரே போல சிறப்பாக ஆடும் இடதுகை ஸ்டைலிஸ்ட். 2005 காலகட்டத்தில் ரெய்னாவின் வருகையும் பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் அவரது ஆட்டமும் என் மனத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது ரெய்னாவை அவர் மிகவும் உச்சத்தில் வைத்திருந்தார். ரெய்னாவை அவர் ஆஸ்திரேலியாவின் பெவனோடு ஒப்பிட்டதாக நினைவு. ரெய்னாவின் ஆரம்ப கால அரை சதங்களின் போது என்னை மிகவும் கவர்ந்தது அவரது ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சேகரிக்கும் திறன். பின்னர் அவர் கவர் பகுதி மேலாக பந்தை தூக்கி அடிப்பது, வேகப்பந்தை நளினமாக கவர் டிரைவ் செய்வது, ஆப் ஸ்பின்னை லேட் கட் செய்து பவுண்டரி அடித்து புன்னகைப்பது, சுழலர்களை இறங்கி வந்து அடிப்பது என ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்றொரு பேட்ஸ்மேன் ஆனார். எந்த ஷாட்டிலும் முரட்டுத்தனம் இராது, ஒருவித மென்மை, நளினம், உருகும் ஸ்கிரீம் போன்ற இனிமை தான் இருக்கும்.

 

மற்ற இடதுகை பேட்ஸ்மேன்களைப் போல அல்லாமல் ரெய்னா கால்பக்கம் வலுவானவர். இறுதி பத்து ஓவர்களில் அவர் கால் பக்கம் சிக்ஸர் அடிக்க முயல்வார் எனத் தெரிந்தே பவுலர்கள் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாகப் போட்டு அவரைத் தூக்குவார்கள். ஒவ்வொரு முறை அவர் அப்படி அவுட் ஆகும் போதுதிறமை இருக்கும் அளவுக்கு உனக்கு மூளை இல்லடாஎன அந்த பவுலர் புன்னகையிலே சொல்வார். ரெய்னாவும்பரவால்ல இருக்கட்டும்எனக் கிளம்பி விடுவார். கடைசியாக நாம் .பி.எல்லில் பார்த்த ரெய்னாவும் இதே மனநிலை கொண்டவரே, முதிர்ச்சி என்ற சொல்லே அவரது அகராதியில் இல்லை, அவரது ஆட்டத்தின் அழகே ஒருவிதத்தில் இந்த களங்கமின்மைதான் என்பேன்.

ரெய்னாவுக்கு உயரப்பந்து பலவீனமாக இருந்ததுண்டு, அதை அவர் தனதான பாணியில் ஹூக்-புல் ஷாட் அடித்து சமாளித்தார். ஒருநாள், டி-20 போட்டிகளில் தலையை நோக்கி வரும் உயரப்பந்தை லாலிபாப் பந்தாக்கினார்.


ரெய்னா, யுவ்ராஜ் ஆகிய இருவரது ஆட்டவாழ்வும் பெருமளவில் ஒத்தது - இருவருமே கூடுதலாய் ஐந்து வருடங்கள் 5, 6 எண்களில் ஒருநாள் அணியில் ஆடியிருக்கலாம், கடந்த நான்கு ஆண்டுகளில் நம் அணி சந்திக்கும் கீழ்-மத்திய பலவீனம் இந்தளவுக்கு இவர்கள் இருந்திருந்தால் பாதித்திருக்காது. ரெய்னாவின் ஆட்டவாழ்வு அவர் கால்பக்கம் சிக்ஸ் அடிக்க முயன்று டீப் கவரில் மிஸ் ஹிட்டாகி கேட்ச் கொடுப்பது போன்றே அசந்தர்ப்பமாக முடிந்து விட்டது

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...