கலையரசி நடராஜன் வீட்டில் வெண்பா நகை திருடி விட்டார் எனும் சர்ச்சையை வெளியில் இருந்து பார்க்கையில் எனக்குத் தோன்றுவது இது:
1. வெண்பா நகையை திருடியிருக்க வாய்ப்பில்லை. நகை திருட்டுப் போயிருந்தால் கலையரசி முதல் வேலையாக காவல் துறையில் புகார் தெரிவித்திருப்பார். மாறாக, தன்னிடம் லயோலா கல்லூரியில் படிக்கிற வளர்மதி என்றும், சமூக நீதி சேனல் ஒன்றை நடத்துவதாகவும் பொய் சொன்ன வெண்பா மீதுள்ள கடுப்பில் இந்த புகாரை கிளப்பியிருக்கிறார் என நினைக்கிறேன். மதனின் எதிர்த்தரப்புக்கு இது வசதியாகப் போய் விட்டது. திருட்டுப் பட்டத்தை வைத்து செய்கிறார்கள்.
2. கலையரசியிடம் தன்னை அறிமுகப்படுத்திய போது ஏன் பொய்ப்பெயர், தகவல் எல்லாம் தந்திருப்பார் வெண்பா?
இது என் ஊகம் மட்டுமே - வெண்பாவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்றாலும் அவர் தன்னை மதன் ரவிச்சந்திரன் போன்ற ஒருவரின் யுடியூப் சேனலுடன் நேரடியாக தொடர்புபடுத்துவதை விரும்பியிருக்க மாட்டார். ஆனால் அடையாளம் தெரியாமல் பின்னிருந்து அந்த டீமில் வேலை செய்ய மட்டும் செய்கிறார். பொய்ப்புரட்டு எல்லாம் இதற்காகத் தான் இருக்கும்.
3) எப்படி வெண்பாவின் படம் தன்னிடம் சிக்கியது என்பதை கலையரசி கூறவில்லை. ஏதோ ஒரு சிசிடிவி படம் அல்லது யாரோ எடுத்த காணொலியின் மங்கலான ஸ்டில் போல தெரிகிறது. அதை வைத்து தெரியாதவர்களால் வெண்பா என அடையாளம் காண முடியாது. கலையரசியின் வட்டத்தில் வெண்பாவை முகநூலில் பின் தொடரும் யாராவது இருந்து அவர்கள் உதவியிருக்கலாம். இதை வெண்பா எதிர்பார்த்திருக்க மாட்டார். (ஒரு துப்பறியும் கதை போல இருக்கிறது இந்த இடம்.)
4) பேட்டி ஆரம்பிக்கும் முன்பு மதுவந்தியிடம் வெண்பா பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டேன் என கலையரசி சொல்வது உண்மையெனில் (அதற்கான வாய்ப்பு அதிகம்) இந்த ‘சம்பவத்தின்’ திரைக்கதை மதுவந்தி போன்ற பாஜக இரண்டாம் நிலை தலைவர்களால் எழுதப்பட்டதே - கறுப்பர் கூட்டம் சர்ச்சை, ஸ்டாலின் இந்துக்களை அவமதிக்கிறார் போன்ற வெடிமருந்துகள் பற்றிக் கொள்ளாத போதும் பாஜக அணியினர் இந்து விரோத பிம்பத்தை திமுக மீது சுமத்த பிடிவாதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். கலையரசியின் பேச்சு குறித்து ஒரு பரபரப்பு கிளம்பிட, அவரிடம் பேட்டி எடுத்து சம்பவம் செய்யலாம் என நினைத்திருப்பார்கள். ஆனால் மதன் தான் பேட்டியாளர் எனத் தெரிந்தால் கலையரசி ஒப்புக்கொள்ள மாட்டார் என வெண்பாவை மாற்றுப்பெயர், அடையாளத்துடன் அனுப்பியிருக்கிறார். கலையரசியின் காலில் வெண்பா விழுந்து வணங்கியது முதல் அவரிடம் பேட்டிக்காக கெஞ்சியது வரை நடந்திருக்க வாய்ப்புண்டு. ரொம்ப கெஞ்சுறாளே என மனம் கனிந்து கலையரசி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது சனி. இரண்டு நாள் கழித்து பேட்டிக்காக மதனின் குழு போய் நிற்க கலையரசி சாப்பிடாத களைப்பிலும் மதனின் முட்டாள்தனமான கேள்விகளிலும் திகைத்து போய் சொதப்பி விட்டார்.
5) இது போன்ற பேட்டிகளால் பாஜகவுக்கு என்ன பலன் கிடைக்கும்? பூஜ்யம். சமூக வலைதளங்களில் உள்ள சில ஆயிரம் சங்கிகளுக்கு பார்த்து ரசிக்க இத்தகைய ரௌடியிசங்கள் உதவும். மக்களிடமோ இப்பேட்டிகள் எதிர்மறையாகவே விளைவை ஏற்படுத்தும். இதன் பின்பு மதுவந்தி இருப்பதிலும் ஆச்சரியமில்லை - அவர் பேசிய பேச்சுக்கள் இதுவரை சர்ச்சைகளை உண்டு பண்ணி, தமிழக பாஜகவுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தியது. இப்போது மதன் போன்ற கைத்தடிகளை வைத்து அதே எதிர்மறை வெறுப்பரசியலை தொடர்கிறார்.
6) இந்திய ஊடகங்களின் வரலாற்றிலேயே பொய்ப் பெயர், பொய் விபரங்களுடன் பேட்டியெடுக்க சென்ற முதல் டீம் இதுவாகத் தான் இருக்கும். இத்தனைக்கும் அந்த பாட்டிக்கு மதனையே தெரியவில்லை - மதன் டயரி சேனல் என்று உண்மையை சொல்லியிருந்தாலும் அதனால் கலையரசி பாட்டி மறுத்திருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு சின்ன பையன் என நினைத்திருப்பார். ஆனால் ஏதோ துப்பறியும் சாம்பு போல பயங்கரமாய் பிளான் போட்டு பாட்டியை டிராப் செய்திருக்க தேவையில்லை. மதனே போய் காலில் விழுந்திருந்தாலும் பாட்டி ஒத்துக் கொண்டிருப்பார். இவ்வளவு பில்ட் அப் பண்ணி கடைசியில் அது திருட்டுப் பட்டத்துக்கு வழிவகுத்து விட்டது. வளர்மதி, லயோலா கல்லூரி, சமூக நீதி சேனல் போன்ற பொய்களினால் தான் வெண்பா திருடியிருப்பார் எனும் எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டுள்ளது.
7 ) மதன் அடிப்படையில் ஒரு ‘திருடன்’ என கலையரசி சொல்வது உண்மை. அவர் பேட்டியெடுக்க வரும் போது ஒரு கிரிமினலைப் போல எதிர்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு. ஒழுங்காக பதில் சொல்லப் போனால் பேட்டி கொடுக்கிறவர் முட்டாள் போன்ற பிம்பம் ஏற்பட்டு விடும். கலையரசி சொல்வதைப் போலவே மதனின் வாழ்க்கை சுயமரியாதையோ, அங்கீகாரமோ இன்றி ரொம்ப கேவலமாகப் போய் முடியப் போகிறது என நினைக்கிறேன். “த்த்தூ த்த்தூ” என சூர்யா தேவி துப்பி போஸ்ட் பண்ணின யுடியூப் காணொலிகள் ஐந்தே நிமிடங்களில் 1-2 லட்சம் வியூஸ்களைப் பெற்றன. பிளாஸ்டிக் டப்பா விற்கிற காளொலிகளுக்கே 25,000 வியூஸ் கிடைக்கிறது. 50,000 வியூஸ்காக அவர் இவ்வளவு டகால்டி செய்து ஒரு பாட்டியை வதைக்கத் தேவையில்லை. இப்படியே போனாலும் எந்த சேனலிலும் வேலை தர மாட்டார்கள். பாஜக தேர்தலுக்குப் பின் சர்க்கஸை கலைத்துக் கொண்டு கிளம்பி விடும். மதன் அப்போது ஜெப்படி வேலைதான் செய்ய வேண்டும்.
8 ) வெண்பாவுக்கு ஒரு அறிவுரை - அடுத்த முறை இது போன்ற தாவூத்துகளுக்கு reconnaissance வேலை செய்ய, வேவு பார்க்க செல்லும் போது மாறுவேடம் அணியவும். புகைப்படம் சிக்கினாலும் தப்பித்துக் கொள்ளலாம். ரெபரென்ஸுக்கு பழைய ஜெய்சங்கர் படங்கள் பார்க்கவும்.


Comments