முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறுபிறவி என்பது உண்மையா?


இவ்வார நீயா நானா நிகழ்ச்சியில் முற்பிறப்பில் நம்புவதாய் பேசிய சிலரைப் பார்த்த போது வெளியே பார்க்க இயல்பாக இருந்தாலும் இயல்பற்ற உலகில் வாழ்வோர் ஏராளமானோர் உள்ளனர் எனத் தோன்றியது. ஒரு பெண் தான் முந்தைய ஜென்மத்தில் மரமாக இருந்ததாக நினைவு வந்ததாக சொல்லிய போது எனக்கு எதார்த்த கதைகூறலின் பொருள் என்ன எனும் கேள்வியே எழுந்தது. தொண்ணூறுகளில் எஸ்.ராவும், கோணங்கிய எழுதிய கதைகளை அப்படியே சிலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் தாம் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை


எனக்கு தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த பிறவியே எப்படி ஆரம்பித்தது, நான் கண்ணைத் திறந்து அழுது உலகை அறிந்து கொள்வதற்கு முன் எங்கிருந்தேன், உயிரற்று ஒன்றுமற்ற ஒன்றாக இருந்தேன் எனில் உயிரற்றது எப்படி உயிருள்ளவராக முடியும், காலம் இல்லாதவனாக இருந்தவன் எப்படி திடீரென காலத்துள் வந்து குதிக்க முடியும் ஆகிய ஹைடெக்கரிய கேள்விகள் எனக்கு உள்ளன. இதுவே தெரியாத போது நான் இந்த வாழ்வையோ இங்கு மிகத்தீவிரமாக நம்பப்படும் பலவற்றையும் உண்மையென நம்ப முடியாத இடத்திற்கு நகர்ந்துவிடுகிறேன். ஒருவர் உயிர்கொள்வது, பிறவியை எடுப்பதே விளக்கத்திற்கு அப்பாலானது எனும் போது அவர் உயிரிழப்பதும், அடுத்த பிறவிக்குப் போவதும் அசாத்தியம் தான். இங்கு சாத்தியம் இப்போதுள்ள ஒவ்வொரு கணமும் மட்டுமே. அதில் மட்டுமே பல பிறப்புகளைக் காண முடியும் என நினைக்கிறேன். இது என் தர்க்க மனம், என் தத்துவ அறிவு சொல்வது. அதே சமயத்தில், முற்பிறப்பு, அடுத்த பிறப்பு போன்ற கற்பனைகளில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அச்சிந்தனைகள் இந்த வாழ்வை ஒரு முடிவற்ற விளையாட்டாகப் பார்க்கத் தூண்டுகின்றன எனும் அளவில் முக்கியமானவை என ஒரு கலைஞனாக நினைக்கிறேன்.


ஷோவில் சிறப்பு விருந்தினராக வந்த போக சிறப்பாக பேசினார். அவர் ஒரு அசல் கவிஞனாக சிந்தித்து சொன்ன சில விசயங்கள் பிடித்திருந்தன என்றாலும் வேறு சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. போகன் சொல்வதைப் போன்ற புத்தர் முற்பிறப்பை நம்பினாரா, அடுத்தடுத்த பிறவிகளை போதித்தாரா? ஆம், பல புத்தர்களில் அவரும் ஒருவர். புத்தரின் பிறப்புக் கதையிலே இந்த செண்டிமெண்ட் உண்டே. ஆனால் இன்னொரு புத்தர், நான் ஆர்வம் கொள்ளும் புத்தர், இந்த பிறப்புகளை மானுட இருப்பு, பிரக்ஞை உருவாக்கம், மறைவு சார்ந்து விளக்கியவர். ஒன்று சூனியவாத மரபு, மற்றொன்று யோகாச்சார மரபு. ஒவ்வொரு நிமிடமும் நம் அகம் பிறந்து பிறந்து மடியும் போது அங்கு ஒரு நினைவின் சரடு இருக்கிறது தானே, அதையே பின்னர் வைதீகர்கள் ஆன்மா என்று மீசை தாடி வரைந்து உபநிடங்களையும், கீதையையும் எழுதி குழப்பமாக விளக்கினார்கள். பௌத்தம் ஒரு உளவியல் அல்லது இருத்தலியல் தத்துவம். ஒரு ontological system. புத்தர் இந்த உலகில் மட்டுமே இருந்தார், அவர் எங்கும் போக முடியாது, அவரது பூதவுடலுக்கு அப்பால் அவருக்கு இருப்பு இல்லை எனக் காட்டவே பௌத்தர்கள் புத்தரின் பாதத்தை வழிபடுகிறார்கள். போகன் குறிப்பிட்ட மணிமேகலையின் வரிகளும் இவ்விதத்திலே பொருள் கொள்கின்றன.

 உதயகுமரன் கஞ்சணனால் கொல்லப்பட்ட பிறகு வருந்தி அழும் அவன் தாயிடம் மணிமேகலைஉங்கள் மகனின் உடலுக்காக வருந்துகிறீர்கள் எனில் அதை பாதுகாத்து வைக்க வேண்டியதுதானே, அவன் ஆன்மாவுக்காக வருந்துகிறீர்கள் எனில் அது யாராகவும் எதுவாகவும் மறுபிறப்பெடுக்கக் கூடும் எனும் போது உங்கள் மகன் இங்கு உள்ள எந்த உயிராகவும் இருக்கலாம் எனும் போது நீங்கள் அனைவரையும் நேசிப்பதன் வழியாக உங்கள் மகனைத் தொடர்ந்து  நேசிக்கலாமேஎன்று கூறி தெளிவுபடுத்துகிறாள். [உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். (சிறைவிடு காதை, 73 - 79)]

கவனித்தால் மணிமேகலையின் கூற்றில் நாம் நாகார்ஜுனரின் அபத்தத்தை நோக்கி பின்நகர்த்தும் விவாத முறைமையை (reductio ad absurdum) காண முடியும். உங்கள் மகனின் ஆன்மா மறுபிறப்பெடுத்து யாராக வந்துள்ளது எனத் தெரியாது என்பதை உங்கள் மகன் இங்கு யாராகவும் இருக்கலாம் என்பதைப் போலவே யாராகவும் இருக்க முடியாது என்றும் புரிந்துகொள்ளலாம். இன்னதென்று தெரிய முடியாது ஒன்று இல்லாததற்கு சமம் தானே. யாராகவும் மறுபிறக்க கூடிய ஒருவருக்கு உங்கள் மகன் எனும் சிறப்பு இயல்பு, அடையாளம் இல்லாத போது அவர் உங்கள் மகனே இல்லை தானே? சாராம்சமாக இல்லாத ஒருவருக்காக ஏன் இரங்க வேண்டும்? இப்படி மணிமேகலையின் கூற்றே மறுபிறப்புக்கு, முற்பிறப்புக்கு எதிரானதுதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...