Skip to main content

ஜெயமோகனை விட அஜிதன் ஏன் மேலான எழுத்தாளர்?



கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார்ந்ததாக மாறிவிட்டது. ஏதோ கவிதையில் தான் இன்றும் மெய்யியல் கொஞ்சமாவது மீதமிருக்கிறது. அஜிதன் அதைப் புனைவெழுத்தில் மீட்க முயல்வது பாராட்டத்தக்கது. அதனாலே நான் அவர் தன் தந்தையை விட மேலான படைப்பாளி என நினைக்கிறேன். ஒரே பிரச்சினை அவர் தன் தந்தையின் மொழியை போலச் செய்ய முயல்கிறார் என்பது. (நான் சொல்லும் இந்த விசயத்தை கூட அவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் மறுக்கவே செய்வார் என்றே நம்புகிறேன்.) இந்த உளவியல் தடையை மீறிவிட்டால் சிறந்த படைப்பாளி ஆகிவிடுவார். அவரது அத்வைதத்துடன், கடப்புநிலைவாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தை என்னால் ரசிக்க முடிகிறது, நான் நாவல் எழுதும் போது அது ஒரு தாக்கத்தை செலுத்துவதை உணர்ந்தேன். ஜெயமோகனின் எழுத்து இதை எனக்கு செய்ததில்லை. அவரது சொல்லாட்சி, நடை நினைவிருக்கும், நாடகீயமான காட்சிகள், கவித்துவமான பிம்பங்கள் நினைவிருக்கும், ஆனால் அதைக் கடந்து அவரது ஆன்மா என்னுடன் நான் எழுதும் போது இருப்பதில்லை. அதனாலே ஜெயமோகனால் தூண்டுதல் பெற்று ஒரு புதிய புனைவை நம்மால் எழுத முடிவதில்லை, அப்படி செய்கிறவர்களும் அவரது நடையை மட்டுமே பிரதியெடுக்கிறார்கள். இது சுந்தரராமசாமியிடமும் இருந்த நெருக்கடிதான், இப்போது யோசிக்கையில் ஜெயமோகன் சு.ராவின் நீட்சியே எனத் தோன்றுகிறது. இருவரிடமும் புறத்தை தாண்டி மீயுலகம் ('அகம்', 'மீபொருண்மையான இருத்தல்') என ஒன்று இல்லை. அந்த புறம் மிக அழகானது, பல நுட்பங்கள், வசீகரங்கள் நிறைந்தது, ஆனால் பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போவதைப் போல அது மண்ணிலே இருக்கிறது, பறந்தெழுவதில்லை.
பி.கு: இதை நான் ஜெயமோகன் மீதான கோபத்தில் சொல்லவில்லை. (கோபப்படுவதற்கு அவரிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.) இது ஒரு விமர்சனக் கருத்து, வாசக அவதானிப்பு மட்டுமே.

Comments

யதார்த்த வாதம் என்பது ஒரு நோயா ? எழுத்தாளர்களை பற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொல்ல.... எழுத்திற்கு fact and fiction எல்லாம் கிடையாது ! Facr is also a figment of imagination which is seen as magical realism but fact is also a fictional perse .

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...