முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

## கால்கள் – நெஞ்சை நெகிழவைக்கும் பாதைகள்... ✍ கவிப்பூரணி M. சாமுண்டீஸ்வரி

ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும்.

அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன்.

அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன்.

மது — இந்த கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம். 
அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்.

அவளது பெற்றோர், அவளது நிலை மாறும் என நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பெற்றோர்களின் விழிப்புணர்வற்ற மற்றும் அவளது நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உழலும் மனப்போக்கை வெளிக்கொணர்கின்றன.

கார்த்திக் மற்றும் பாலு — இவர்களுடனான மதுவின் உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளுடன் இருந்தாலும், மதுவுடன் இணைக்கும் பாசப் பிணைபாடுகள் வாசகருக்குள் ஆழமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

மதுவின் தாயார் அவளை “சவம்” என அழைக்கும் வேளைகள் மனதைக் கலங்க வைக்கின்றன. இதைப் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வாழ்வில் எதிர்கொண்ட வலிகளை மிக நேரடியாகக் காணக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின்றன. பெற்றோரது ஆதங்கமும் இயலாமையும் இயல்பாக புதினத்தில் இழைந்தோடுகிறது.

பவித்ரா எனும் பாத்திரம் தன்னம்பிக்கையுடன் கதையில் வளைய வருவதாக அழகாக சித்தரிக்கப்படுகிறார். கதையில் இடம்பிடிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மை அந்தக் கிராமத்தில் வாழ்வதைப் போல உணர வைக்கும் வகையில் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன.

மருத்துவமனை காட்சிகள், மதுவின் உளவுருக்கங்கள், தந்தையின் வேதனைகள், அன்னையின் ஆற்றாமைகள்  — அனைத்தும் வாசகரை நெகிழ வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

பலமுறை மதுவின் உள்ளத்தில் கேள்விகள் எழுகின்றன, ஆனால் அவை வெளிப்படுவதில்லை. 
அந்த தருணங்கள் எனக்கு ஒரு ஆழமான எண்ணத்தை நினைவூட்டின:

“ஒரு ஆடை எனக்காகத் தைக்கப்படுகிறதா? இல்லை, ஏற்கனவே யாருக்காகவோ தைக்கப்பட்ட ஆடையில் என் உடலை வெட்டிச் சேர்க்க வேண்டிய நிலையா?”

அதேபோல், மதுவும் தனது கேள்விகளை வெளிப்படுத்த முடியாமல் போராடுகிறாள்.

31 வயதிலேயே இப்படியான ஆழமான, உணர்வுப்பூர்வமான எழுத்து எழுத முடிந்திருப்பது, திரு  அபிலாஷ் வாழ்வின் பல அனுபவங்களின் பின் வந்த வாசிப்பு பயணத்தின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. அவரது எழுத்து நம்மை உணர்வுச் சுழலில் இழுத்துச் செல்கிறது.

நாவலின் பாரம் இன்னும் என் இதயத்தில் கனமாய், ரனமாய்.  சில இடங்களில் என் சொற்கள் நின்றுவிடுகின்றன. உணர்வுகளை முழுமையாக விவரிக்க முடியாமல் போகிறது.

அபிலாஷ் சார், நாவலை கிண்டிலில் வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். என் போன்ற, மகேஷ் போன்ற பார்வைச் சவாலைச் சந்திக்கும்  நண்பர்கள், இப்படியொரு ஆழமான படைப்பை வாசிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றோம். கிண்டிலில் இது வெளியாகவில்லை என்றால், இது எம்மை எட்டியிருக்காது.

---

## கால்கள் – நம்முள் ஒலிக்கும் மனக்குரல்களின் பயணம்... 
“வாசிக்கக்கூடிய புத்தகங்கள் இருக்கின்றன. சில புத்தகங்கள் நம்மை வாசிக்கின்றன. ‘கால்கள்’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது."

- வாசக தோழி சாமுண்டீஸ்வரி

கிண்டிலில் கால்கள் நாவலை வாங்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...