முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்



"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது.
உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமான நாடகக் காட்சிகள், மேலோட்டமான பக்தி என தன்னை மறு-உருவாக்கம் செய்துகொண்டார். அதுவும் "அறம்" இருக்கிறதே ரொம்ப மட்டமான ஒரு தொகுப்பு. மிகையான மதிப்பீடுகள், போலியான அற விழுமியங்கள், போலியான மனிதச் சித்தரிப்புகளின் அடுக்கு அது. அவரே நல்லுணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கில் எழுதியதாகச் சொல்கிறார். எந்த இலக்கியவாதியும் அப்படிச் செய்ய மாட்டார். அது இலக்கியத்தின் நோக்கம் அல்ல. நல்லுணர்ச்சி என்ன அல்வாவா பொட்டலம் மடித்துக் கொடுக்க? அதுவென்ன பாலுணர்ச்சியா தூண்டுவதற்கு? அது 30,000 பிரதிகள் விற்றதாக பவா சொன்னதில் அதிர்ச்சி இல்லை. அது பல லட்சம், கோடி பிரதிகள் விற்றிருக்க வேண்டும். நம் ஊரில் வாசிக்கவே தெரியாத எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அது போய் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அந்நூல் ரொம்பவே பிடிக்கும். "வெண்முரசு" இன்னொரு கொடுமை. வியாசரின் "மகாபாரதத்தைப்" படித்திருக்கிறேன். அதைப் படித்தவர்களுக்குத் தெரியும் - அதில் பாத்திரங்கள் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். நிறைய பலவீனங்கள், ஈகோ, தன்னலம் ஆகியவற்றால் நடத்தப்படுபவர்களாக இருப்பார்கள். அர்ஜுனன் கூட ஆன்ம பலம் மிக்கவனாக இருந்தாலும் பெரும்பாலும் எளிய உணர்ச்சிகளே அவனைப் பிடித்தாட்டும். இதையெல்லாம் நீங்கள் ஜெயமோகனின் "வெண்முரசு" பாத்திரங்களில் பார்க்க முடியாது. அவர்கள் டிவி தொடர் பாத்திரங்களைப் போல இருப்பார்கள். அவர் டிவி தொடருக்காக எழுத ஆரம்பித்து பின்னர் நாவலாக மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். கார்ட்போர்ட் பாத்திரங்கள், கார்ட்போர்ட் கதை. மகாபாரதம் எனும் மகத்தான காவியத்தைப் படிக்க விரும்பும் ஒரு தலைமுறைக்கு அதன் சாரத்தைத் தொடாமல் வடிவத்தை மட்டுமே எடுத்து சீரியல் வடிவில் அவர் தனதான ஜிகினா மொழியில் எழுதிக் கொடுத்துவிட்டார். அது வெளிவந்தபோது ஒரு பதிப்பாள நண்பர் என்னிடம் சொன்னார், "வாசகர்களை இந்துத்துவப்படுத்த ஜெயமோகன் அதைச் செய்கிறார்" என்றார். ஆனால் அந்தளவுக்குகூட அதற்கு முக்கியத்துவம் இல்லை. ஜெயமோகனுக்கு இது தெரியும் - தன் இலக்கிய வீழ்ச்சியை ஈடுகட்டத்தான் அவர் இலக்கிய அரசியல் செய்கிறார், கூட்டம் கூட்டமாகப் போடுகிறார், பணம் செலவழித்து எழுத்தாளர்களைத் தன் வசம் இழுக்கிறார், விருது ஆசை காட்டுகிறார், சினிமாக்காரர்களை வரவழைத்து அவர்களுடைய அணுக்கம் தரும் அதிகாரத்தைக் காட்டி இன்னும் மிரட்டுகிறார், இப்போது ரீல்ஸும் போடுகிறார். இதுதான் நம் இலக்கியவாதிகள் வந்து சேர்ந்துள்ள இடம். இவர்களை வாசிப்பவர்கள் நிலை பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிப்பவர்களை விடப் பரிதாபம். அவர்களுக்காவது தமக்கு இலக்கியம் தெரியாது என்று தெரியும்; இவர்களுக்குத் தாம் வாசிப்பது இலக்கியம் அல்ல என்று தெரியாது.
இந்த லும்பன் இலக்கிய கும்பலுக்கும் அசல் இலக்கிய வாசகர்களுக்கும் தான் இடைவெளி இன்று எழுந்துள்ளது. நாம் பேச வேண்டியது பாவப்பட்ட பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவிடம் அல்ல, போலியான சினிமாத்தனமான இலக்கிய எழுத்தாளர்களிடம்தான்.

பின்குறிப்பு: இன்றும் மிகத்தீவிரமான சிக்கலான ஆழமான இலக்கியத்தைப் படிப்பதற்கு மிகக் குறைவான வாசகர்களே உள்ளனர். அவ்வளவு பேர் இருப்பதே சாத்தியம் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது சிறந்த நாவல்களை நீங்கள் லட்சக்கணக்கில் கூட விற்க வைக்கலாம். அதற்கு சந்தையும் ஊடகங்களும் உதவக் கூடும். ஆனால் அவற்றை ஆழமாக வாசிக்கும் பயிற்சி அப்போதும் மிகக்குறைவானவர்களிடமே இருக்கும். நல்ல இலக்கியத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அப்படிச் சேரும் நிலை ஏற்பட்டால் நம் உலகம் இப்படி இருக்காது. அது பௌதீகமாகவும் ஆன்மீகரீதியாகவும் முழுமையாக விடுதலை பெற்றிருக்கும். 

கருத்துகள்

ANNAMALAI MARIYAPPAN இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் சார்.
சாய் வித் சித்ரா போலி விவாதம் எனும் இக்கட்டுரையில் எனக்கு நிறைய குழப்பங்கள் எழுகின்றன.
1) இலக்கியம் என்றால் என்ன?
2) ஏன் இலக்கியத்தை தனித்துத் தெரிய வைக்க வேண்டும்?
3) ஜெயமோகனின் அறம் நூலினை இலக்கியத் தரம் சார்ந்து ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? அது உண்மையான மனிதர்களின் நிகழ்வுகளைத்தானே புனைந்திருக்கிறது. வாசகனை ஒருமுகப்படுத்தி, கதைகளோடு தோயச்செய்து அவனின் உணர்வுகளை ஏக்கங்களை வெளிக்கொணர்கிறது. பிறகு ஏன் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது?. பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் தவறு செய்தவர்களை ஜமீன், கம்பத்தில் கட்டி வைத்து புளியமிளாரால் அடிப்பாராம். நான் கூட அக்கம்பத்தை கண்டிருக்கிறேன். இன்றும் கூட ஆதிக்க வர்க்க, வயது குறைவான பெண்ணொருத்தி என் அப்பாவை பெயரிட்டே அழைக்கிறார். இந்நிகழ்வுகள் அக்கதையிலும் வருவதால் கதையோடு ஒன்ற முடிந்தது. மேலும் மொழியும் அதை எனக்கு உயர்த்திக் காட்டியது. இருந்தும் ஏன் அது இலக்கியத் தரத்திற்கு வராது? நான் இலக்கியம் வாசிக்க வேறு எந்த நூல்களை வாசிக்க வேண்டும்? இதை அறம் நூலுக்கான பரிந்துரையாக கொள்ள வேண்டாம். ஜெயமோகனும் அதை அவ்வாறே மதிப்பிடுகிறார். எனில் எதற்காக இவ்வளவு நூல்கள் எழுதப்படுகின்றன? அழகுணற்சிக்காகவோ, தனித்துத் தெரிவதற்கோ, நல்வழிப்படுத்துவதற்கோ எழுதப்படுகின்றன என்றாலும் அவர்களும் அதற்கான ஊக்கங்களை நூல்களில் இருந்து தானே பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் குறிப்பிடப்போகும் நூல்களை எழுதிய எழுத்தாளரும் கீழ்மைகள் கொண்டவர்தானே? பிறகு எப்படி அது வேறுபடுகிறது? நீங்கள் பரிந்துரைக்கும் நூல்களும் என் உணர்வைத் தூண்டாதா ? சற்று எரிச்சலோடும் அதீத குழப்பத்தோடும் உங்களை நாடுகிறேன். நன்றி.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள அண்ணாமலை, வணக்கம். "அறம்" தொகுப்பில் உள்ள பிரதான பிரச்சினை அவை மேலோட்டமாக நம் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை ஒரு தட்டையான விழுமியத்தை நோக்கி நகர்த்துகிறது என்பதுதான். அறம் என்றால் அவ்வளவு எளிதான ஒரு உணர்ச்சி அல்ல, அது மனசாட்சி அல்ல. அது இயற்கையின் நியதியும் அல்ல. அது ரொம்ப சிக்கலான இருத்தலின் நிலை. அவ்வாறுதான் இந்திய தத்துவம் அதை வகுக்கிறது, இந்திய தொன்மங்களும் காவியங்களும் அற நெருக்கடியை அவ்வாறே சித்தரிக்கின்றன. சரி தவறாகவும் தவறு சரியாகவும் தெரிவதே அறம் குறித்து நாம் பேச எத்தனிக்கிற இடம். ஜெயமோகன் தெளிவாகவே அத்தகைய கதை நிலைகளுக்குள் போவதில்லை - அவர் ஒரு பிரச்சார நோக்கத்துக்காக எழுதுகிறார், நம் மனத்தை நிலைகுலைய வைக்க முயல்கிறார். ஆனால் அது மலினமான உத்தி - அது வாசகரின் கற்பனையைப் பறித்துவிட்டு அவர்களை பனுவலின் உத்தேசத்துக்கு உடன்பட வைக்கிறது; வணிகக் கதைகளில் நடப்பதுவும் இதுதானே. நான் யாருடைய கதைகளையும் பரிந்துரைக்கப் போவதில்லை. அதனால் பயனிருக்காது. நீங்களே தேடிப் படியுங்கள். உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை நாடுங்கள். பொய்களைத் தவிர்த்தால் மட்டும் போதும். அதாவது உங்களுடன் நீங்கள் உரையாடும்போது உண்மையாக இருந்தால் போதும். அதுவே உங்களை நல்ல வாசகராக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...