முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?



ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி.

ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல.
நமது இப்போதைய பிரதிநுத்துவ மக்களாட்சிக்கும் காலனியாட்சிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. என்னதான் மக்களால் மக்களாட்சியில் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்க முடியும் என்றாலும் நேரடியாகக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. இதனாலே ஒரு மிதமிஞ்சிய அதிகாரச் சமநிலையின்மை ஏற்படுகிறது. உங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக அதிகாரம் படைத்த ஒருவரை நீங்கள் எப்படிக் கேள்வி 'கேட்க' முடியும்? அது நடைமுறை சாத்தியமில்லை. அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள். ஒரு புது புரொமோஷன் வீடியோவை பதிவிட்டு விட்டு அடுத்த டெண்டரை கவனிக்கப் போவார்கள். அந்த வீடியோவைக் கூட அவர்கள் பதிவேற்ற மாட்டார்கள். வலைதள நிர்வாகிகள்தாம். அவர்கள் அதில் 'நடிக்கக்' கூட மாட்டார்கள். ஏ.ஐ தான். இவ்விசயத்தில்தான் இந்தியாவில் உள்ளது ஒரு முகமூடி அணிந்த 'நவகாலனிய' ஆட்சியே. நான் இதைப் புதிதாகச் சொல்லவில்லை - ஆஷிஸ் நந்தி இதைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறார். நம் ஆட்சியாளர்கள் காவல்துறையைக் கையாள்வதைப் பாருங்கள். அது அப்படியே முன்பு பிரிட்டீஷ்காரரக்ள் செய்ததைப் போன்றே இருக்கும்.
வெள்ளைக்காரர்கள் இங்கு ஆண்டபோதும் ராணுவ அதிகாரிகள் பெரும் செல்வத்தை, அதிகாரத்தை அனுபவித்தார்கள், எளிய பின்னணியில் இருந்து வந்த வெள்ளைத் தோலர்கள் தொழிலதிபர்கள் நம் வளத்தை கொள்ளையடித்து அவர்கள் ஊரில் குவித்தார்கள். அவர்களுடைய சட்டமும் நிர்வாகிகளும் இந்தக் கொள்ளையையும், சுரண்டலையும் அனுமதிப்பதாக இருந்தன. யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால் சிறை, தடியடி, துப்பாக்கிச் சூடு. இன்று அது அப்படியே இந்திய ஆட்சியாளர்களாக, அவர்களுக்குச் சாதகமான தொழிலதிபர்கள், அல்லரை சில்லறைகள், ரௌடிகள், புரோக்கர்கள் என்று மாறியிருக்கிறது. இன்றும் சட்டமும் அதிகார நடைமுறையும் இந்தக் கொள்ளையை, சுரண்டலை அனுமதிக்கும்படியாகவே உள்ளது. நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தினாலும் உங்களுக்கு மேல் உங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த முதலீட்டாளர்களின் அமைப்பு இருக்கும். சேவையை ஏற்கவோ மறுக்கவோ பயனர்கள் இருப்பர். ஆனால் அரசை நீங்கள் நடத்தும்போது உங்களை யாருமே நேரடியாகக் கட்டுப்படுத்தவோ உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி உங்களை மட்டுப்படுத்தவோ மாட்டார்கள். ஊடகங்கள் செய்யலாம், ஆனால் அதிகாரச் சமநிலை இல்லாதபோது ஊடகங்களாலும் அதைச் செய்ய முடியாது. மக்களால் அரசை நெருங்கக் கூட முடியாது.
மிகப்பெரிய அதிகாரக் குவிப்புள்ள படிநிலை ஓர் அரசில் உள்ளதாலே அங்கு அதிகாரமும் பெரும்பணமும் உள்ளவர்களாலே நெருங்கி காரியம் சாதிக்க முடிகிறது. அதிகாரம் அதிகாரத்தையே ஈர்க்கும். இந்த பணக்காரர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாக்க மாற்றுக் காவல்துறையாக ரௌடிகளைப் பயன்படுத்துகிறார்கள் (காவல்துறையும் சிலநேரங்களில்ல் ஒரு அடியாள் படைதான்.) அவர்களும் இதனால் அதிகாரம் பெறுகிறார்கள். அதிகாரம் பணத்தைக் கொண்டு வருகிறது. அவர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆகிறார்கள்.
முதலில், இந்த அதிகாரக் கட்டமைப்பு மறையாமல், அதிகாரம் பரவலாக்கப்பட்டு பெருமளவு குறைக்கப்படாமல் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், குற்றங்கள் குறையாவது. மாற்றி மாற்றி வாக்குகளைச் செலுத்துவதைப் போன்ற மிகப்பெரிய அபத்தம் உலகில் இல்லை.
அடுத்து, நம் ஆட்சிகளில் பணத்தையும் வசதியையும் விட மதிப்பீடுகள் முன்னுரிமை பெற வேண்டும். அதாவது வாழ்க்கை வெளிமுகமாக அல்லாமல் உள்முகமாக மாற வேண்டும். மக்களைப் பணத்தை வைத்து விலைக்கு வாங்க முடியக் கூடாது. இதை எப்படிச் செய்வதென்றால் அதற்குத் தீர்வு காந்தியிடம் உள்ளது - அவர் எளிமையை நோக்கிப் போகச் சொன்னார். மிகக் குறைந்த அதிகாரம், குறைந்த பணம் உள்ள, கட்டுப்பாடற்ற தொழில்வளர்ச்சியை நோக்கிப் பாயாத ஒரு சமூகமே கறைபடியாமல் இருக்கும். வளம் மக்களிடம் சமமாகப் பரவ வேண்டும். அதனாலே அவர் தொழில்மயமாக்கலை எதிர்த்தார். அதன் பின்னுள்ள முதலீட்டியம் அடிப்படையில் மக்களை ஊழலில் தள்ளி ஏற்றத்தாழ்வைப் பெருக்கி மகிழ்ச்சியைச் சூறையாடக் கூடியது என அவர் கண்டார். அவர் மட்டுமல்ல 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இச்சிந்தனை பல அறிவுஜீவிகளிடம் இருந்தது. தல்ஸ்தாய், ஹைடெக்கர் போன்றோர் உதாரணங்கள்.
தொழில்நுட்பம், சாலைக் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் அவசியமே. ஆனால் இவற்றினால் விளையும மூலதனம் தனியாரிடம், சில தனிமனிதரிடம் போவதே இன்றைய குற்றங்களின் ஆதாரம். அதிகாரமும் பணமுமே குற்றங்களின் பிறப்பிடம் (செக்ஸோ ஆசையோ அல்ல).
நம் மக்களாட்சி அமைப்பு இந்த அக-ஒழுக்கம், எளிமை, சமத்துவம், மூலதனம் பரவலாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. தொழில்மயமாக்கலைப் பரவலாக்கும் நோக்கிலே மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. அதிகமாக மக்கள் உற்பத்தியிலும் நுகர்விலும் ஈடுபட்டால் மூலதனம் பலமடங்கு பெருகும். அதற்கு அவர்களுக்கு ஓரளவுக்கு சமவாய்ப்பும் பங்களிக்கும் உரிமையும் கொடுக்க வேண்டும் என அன்றைய முதலீட்டாளர்கள் கருதினார்கள். இன்னொரு பக்கம் முற்போக்குத் தாராளவாத சக்திகளும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். அவர்கள் நாட்டின் பிரச்சினைகளின் மொத்த பழியையும் மன்னர்களின் தலையில் போட்டார்கள். "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்" என ஒரு பொய்யை நம்மிடம் விற்றார்கள். ஏன் இன்றும் சில ஊர்களில், நாடுகளில் மக்கள் மன்னர்கள் மீது பெரும் அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்றால் மக்களாட்சியில் இல்லாத ஏதோ சில விழுமியங்கள் மன்னராட்சியில் உண்டு, மக்களாட்சிப் பிரந்திதிகளை மன்னர்கள் மறைமுகமாகக் கட்டுப்படுத்துவார்கள் எனும் நம்பிக்கையினால்தான். மைசூருக்கு நான் முதலில் வந்தபோது இங்குள்ள ராஜ விசுவாசம் என்னை பெரும் அசூயையை ஆழ்த்தியது. ஆனால் போகப்போக இதைக் குறித்து ஆய்வு செய்தபோது எனக்கு சில உண்மைகள் விளங்கின - மைசூர் மன்னரின் குடும்பம் அறுபதுகளில் அமைத்த சாலைகள் இன்றும் உடையாமல் நன்றாக உள்ளன. பெங்களூர் சாலைகளின் கதியைப் பாருங்கள். ஆம் இரு நகரங்களின் போக்குவரத்திலும் வேறுபாடு உண்டு. அதேநேரத்தில் சாலைகளின் தரமும் சாக்கடைக் குழாய்களின் அமைப்பும் ஒப்பற்றவையாக உள்ளன. அது மட்டுமல்ல, வேறு நகரங்களில் இல்லாத ஸ்திரத்தன்மை, தரமான வாழ்க்கை மீதான நம்பிக்கை இங்கு உள்ளது. பூர்வகுடி மைசூர்வாசிகள் உள்ளிருந்து புறமாக யோசிக்கிறார்கள். புறமிருந்து உள்ளாக அல்ல.
மக்களாட்சி முதலீட்டியத்தின் குழந்தை என்பதால் அதில் இத்தகைய எந்த விழுமியமும் செல்லுபடியாவதில்லை. பணமும் அதிகாரமுமே அங்கு தெய்வங்கள். உலகம் முழுக்க மிதமிஞ்சிய பொருளாதார ஏற்றத்தாழ்வினால் மக்களாட்சி அமைப்பு நிலைகுலைந்து வருவதாக ஒரு பேச்சு இன்று உள்ளது (நானே அண்மையில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன்.). ஆனால் பொருளாதார சமத்துவம் வெறுமனே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதல்ல. அது ஒரு ஆன்மீகப் பிரச்சினையினால் விளைவது - மிதமிஞ்சிய அதிகாரத்தையும் செல்வத்தையும் நோக்கி எல்லாரும் பாய வேண்டிய கட்டாயத்தை ஒரு அமைப்பு உருவாக்கும்போது அங்கு ஆன்மீகச் சீரழிவே ஏற்படும் எறு காந்தி நம்பினார். அதை இன்று நவதாராளவாதம் நிரூபித்திருக்கிறது. மக்களாட்சியில் நாம் பார்க்கும் கட்டற்ற ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இதன் நோய்க்குறிகள் மட்டுமே. அவையே ஒரு நோய் அல்ல. நோய் அதன் அடியாழ்த்தில் எங்கோ உள்ளது. அதை நாம் காந்தியிடம் திரும்பச் சென்று விவாதித்து கண்டடைய வேண்டும். வாழ்க்கை என்பது அடிப்படையான விழுமியங்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும் - நவதாராளவாத முதலீட்டியத்தின் கையில் நம் ஆன்மாவை நாம் பணயம் வைக்கக் கூடாது. அப்படிச் செய்ததாலே நம்மால் வெல்ல முடியாத ஒரு பொருளாதார, அதிகாரப் போட்டியில் நாம் பொம்மைகளாகப் போட்டியிட்டுத் தோற்கிறோம், ஏழைகளாக நீடிக்கிறோம். இன்று இந்தியாவில் மத்தியவர்க்கத்தைப் பாருங்கள். ஏழைகளாகி விட்டார்கள். மேல்மத்திய வர்க்கத்தைப் பாருங்கள். மத்திய வர்க்கம் ஆகிவிட்டார்கள். யாரும் திருப்தியாக இல்லை. சுதந்திரமோ மேம்பட்ட வாழ்க்கையோ நிச்சயமில்லை. நாம் ஒரு நூற்றாண்டுக்கு முன் செய்து கொண்ட 'ஒப்பந்தத்தின்' (மக்களாட்சி) விளைவை இன்று அனுபவிக்கிறோம்.
அதனாலே மூலதனம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற, மூலதனத்திற்கும் அதிகாரத்திற்கும் அப்பால் விழுமியங்களே உயர்ந்தவை என நம்புகிற வகையில் மக்களாட்சியை மறுவரையரை செய்ய வேண்டும். அதுவரை காட்சி மட்டுமே மாறும், கோலம் மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...