முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஷாட் ஓக்கேவா?" எனும் கொடூர ஆட்சி

 நாட்டின் நடக்கும் குற்றங்களின் மொத்தப் பழியையும் தவெக ஆட்சி மீது சுமத்தக் கூடாது என்பதை ஏற்கிறேன். குற்றங்களை மொத்தமாகத் தடுப்பது அல்ல, குற்றங்களில் இருந்து அடிப்படையான பாதுகாப்பளிப்பதும், குற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை அளிப்பதும்தன அரசின் பணிகள். அதாவது ஒரு கட்டமைப்பும் அதற்கான நடைமுறையும் உள்ளதாகக் காட்டுவதற்கே அரசும் அமைச்சரவையும் முதல்வரும் இருக்கிறார்கள். சூலூர் சிறுமியின் கொலைச் சம்பவத்தில் காவல்துறை வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தது பாராட்டத்தக்கது. காவல் அதிகாரிகள் எப்படி ஊடகங்களிடம் பேசினார்கள், எவ்வளவு சீரியஸாகத் தெரிந்தார்கள் என்பது முக்கியமல்ல. அது optics.

அதேநேரம், தவெக அரசு மேற்சொன்ன opticsக்காகத்தான் அக்குழந்தையின் சடலத்தை அவசரமாக எரித்தார்கள். தாயிடம் கூடக் காட்டாமல் அநீதி இழைத்தார்கள். குழந்தையின் தாய் ஆவேசமாகப் பேட்டியளித்ததும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் ரூட்ஸ் மீடியாவை கலங்க வைத்துவிட்டது. குழந்தையின் சடலத்தை வைத்து எதாவது ஊர்வலம் போவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வந்து துக்கம் விசாரிப்பது, அறிக்கை விடுவதெல்லாம் நடந்து குழந்தையைக் கூட பாதுகாக்க வக்கில்லாத அரசு என்பதான தோற்றம் வந்துவிடுமோ என பந்துவிட்டார் ஜான். உடனே அவர் தன் கட்சியின் ஜோம்பிகளை அழைத்து அத்தாயின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும்விதமாக காணொளிகளையும் பின்னூட்டங்களையும் பதிவேற்ற வைத்தார். கதையாடலை அப்பெண்ணுக்கு எதிராக மாற்றினார். இது அவரைக் கொஞ்சம் அச்சுறுத்தி வைக்கவும்தான். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதும் சங்கீதா தரப்பை இப்படித்தான் தரங்கெட்டு விமர்சித்தார்கள். இது அவர்களின் வழமையான உத்தி. அவர்களுக்குத் தேவை தம் ரீல்ஸ் அடிப்படையிலான பிம்பத்துக்கு பாதகம் வராதிருப்பது. அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்படிச் சிந்திப்பதில் வியப்பில்லை.
விஜயண்ணா ரொம்ப தாமதமாக ஒரு அறிக்கை வெளியிட்டதும், போனில் பெற்றோரிடம் பேசியதாக செய்தி வந்ததும் அவர் வேறொரு லோகத்தில் இருக்கிறார், ஆட்சியை அவர் பொருட்டு வேறு யாரோ செய்கிறார்கள் என்பதால்தான். வியூக வகுப்பாளர்களே வழக்கு விசாரணையில் முடிவெடுக்கிற விசித்திர ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.
ஒரு நல்ல ஆட்சியில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தையும் பெற்றோரையும் ஆறுதல் சொல்வார்கள். சடலத்தை அவசரமாக எரிக்காமல், பெற்றோரை அவமதிக்காமல் நடைமுறையை நிகழ அனுமதிப்பார்கள். மக்கள் குற்றவாளியின் கைதினால் அமைதி கொள்வார்கள் என நம்புவார்கள். இச்சம்பம் இந்த ஆட்சி ஒரு புள்ளியில் நிலையாக இல்லை, அது எல்லாவற்றையும் ஊடக மேலாண்மையாகப் பார்க்கிறார்கள்,அதைக் குறித்தே அதிக கவலை கொள்கிறார்கள் எனக் காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...