உதயநிதியைக் கண்டித்து ஏன் தவெகவினர் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தவில்லை? ஏன் திமுகவால் முடிந்தது?
தவெக அடிப்படையில் ஒரு கட்சியல்ல. அது ஒரு சற்றே பெரிய ரசிகர் மன்றம். அவர்களுடைய நோக்கம் தம் கட்சியை ஒரு மரபான கட்சியாகக் கட்டமைப்பது அல்ல. ஆகையால் அவர்கள் தெருவில் இறங்கி திரண்டு தம் குரலைப் பதிவு பண்ண மாட்டார்கள். விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு கூட அந்தந்த ஊர்களில் இருந்து அல்ல வேறு ஊர்களில் இருந்தே பெருந்திரளாக பணம் கொடுத்து பார்வையாளர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களில் சிலர் தமக்கு உள்ளே செல்ல சீட்டுக் கிடைக்கவில்லை என்று அழுது மன்றாடியதைப் பார்த்திருக்கிறோம்.
டிஜிட்டல் உலகில் கூட எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டடைவது சிரமம். இன்ஸ்டா ஆதரவளர்கள் கூட கூலிக்கு அமர்த்தபட்டவர்களே என்கிறார்கள். திமுகவைப் போல இவர்களுக்கு நேரடி அரசியலில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை.
இவர்கள் அதற்குப் பதில் ஏற்கனவே நேரடி அரசியலில் இருக்கிற மாற்றுக் கட்சிக்காரர்களை தம் கட்சிக்குள் இழுத்து தேர்தலில் இடமளித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளை இக்கட்சி ஒரு வாடகைப் பொருட்களாக, தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களைப் போல பாவிக்கிறது.
ஒரு படம் வெளியானதும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு அதைக் கொண்டாடுவதில்லை. ரசிகர் மன்றத்தினரில் ஒரு சிறு குழுதான் பாலூற்றி முழங்குகிறார்கள். இன்னொரு கூட்டம் சினிமா டுரோல்களாகி வேறு ஹீரோக்களைத் தாக்குகிறார்கள். ஒரு பெரிய கூட்டம் திரையரங்கை நோக்கி வருகிறார்கள். இவர்களில் யார் ரசிகர்கள், யார் பொதுப்பார்வையாளர்கள் எனத் தெரியாது. ரசிகர்களின் எண்ணிக்கை கூட நிச்சயமில்லை. இல்லாவிட்டால் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் கடந்த சில ஆண்டுகள் தோல்வியுற்றிருக்காது. விஜய்க்கு என்றில்லை தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கும் இது நடந்திருக்கிறது. இந்த ஆதரவாளர்கள் சினிமாவில் எங்கிருக்கிறார்கள் என யாருக்கும் எப்படித் தெரியாதோ அப்படித்தான் அரசியலிலும் என நினைக்கிறேன். ஆனால் இவர்கள் பரந்துபட்டு இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாமல். இதனால்தான் இவர்கள் (மோசடி பண்ணும் வாக்கு எந்திரங்களுடன் சேர்ந்து) திரண்டு வந்து விஜய்க்கு போன தேர்தலில் வாக்களித்தபோது பலரும் வியப்புற்றார்கள். தவெக இவர்களை நம்பியிருப்பதால்தான் யாரும் தெருவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறார்கள். இவர்கள் திமுக குடும்பத்துக்குள் இருப்பார்கள், அதிமுக, பாஜக ஆதரவாளர்களாகவும் இருப்பார்கள், வெளிநாட்டுப் பிரஜையாக இருப்பார்கள், இரண்டு வயதுக் குழந்தையாக இருப்பார்கள், சட்டென விஜய் ஆதரவாளர் ஆவார்கள். இவர்கள் இன்னும் எவ்வளவு காலம் இப்படி மறைந்திருந்து ஆதரிப்பார்கள் என யாருக்கும் தெரியாது.
விஜய் வேறு தான் மக்களின் இதயத்தில் வீற்றிருப்பதாக அடிக்கடி சொல்கிறார். இதயமே ஒரு கற்பனை அல்லவா. அதனால் தான் எங்கென்று அறியாத இந்த ஜீவிகள் எப்போது வருவார்கள் என்றும் நமக்குத் தெரியாது. படம் நன்றாக இல்லாவிட்டால் என்ன நம் தலைவரை ரசிக்கச் செல்வோம் என்று கூட ஜனநாயகனுக்குச் செல்ல மாட்டார்கள். இப்படி அள்ளியும் கொடுப்பார்கள், ஈவிரக்கமற்றும் இருப்பார்கள். இவர்கள் வாக்காளர்களும் தாம் என்பதால் விஜய் ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டு வாக்காளர்களின் சுபாவம் பற்றி ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
திமுக என்றால் தன் இலக்கு வாக்காளர் தொகை இதுதான் எனத் தெரியும். அதிமுகவுக்கும் தெரியும். இதைப் பொறுத்து அவர்களுடைய திட்டங்கள், கொள்கை, பட்ஜெட் மாறும். எங்குமே இல்லாத கொரில்லா வாக்காளர்களான இவர்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் தப்பில்லை என விஜய் நினைத்தாலும் சரிதானே. ஆகையால்தான் அவர் பல இடங்களில் இருந்து (பெரும்பாலும் திமுகதான்) வெட்டி ஒட்டி பல திட்டங்களை அறிவிக்கிறார். அவற்றை நடைமுறைப்படுத்த நிதியும் ஒதுக்குவதில்லை. எம்.ஜி.ஆர் ரசிகர்களை முன்பு அட்டக்கத்தி என்று கலாய்ப்பார்கள். சிலநேரங்களில் இத்தகைய ரசிகர்களுக்கு நிஜக்கத்தி தேவையில்லை. சரி தவெக ஆதரவாளர்களாக அல்லாதவர்களுக்கு? அசல் ஆதரவாளர்களே கொரில்லா வீரர்களாக மறைந்திருக்கும்போது யார் எவர் எனத் தெரியாதபோது யாருக்காக எதைச் செய்வது?
இதையெல்லாம் நான் தவெகவை குறைத்து மதிப்பிடச் சொல்லவில்லை - ரசிகர்களின் பவரை நான் நன்கு அறிவேன். எனக்கு ஒரு பயங்கர சினிமா ரசிகையான தோழி இருந்தார். அப்போது நான் பாடமெடுத்த வகுப்பில் ஒரு இளம் நடிகை இருந்தார். அப்போது அவர் பிரபலமாகவும் இருந்தார். எனக்கு அதெல்லாம் பொருட்டில்லை. எல்லாரையும் போல அவரும் ஒரு சாதாரண மாணவரே. அவரை தனியாக நடத்தினால் அது மற்ற மாணவர்களுக்குச் செய்யும் அநீதி. அதனால் அறிமுகப்படுத்த மாட்டேன் என்றேன்.
நான் இவ்விசயத்தில் அநியாயத்துக்குக் கறாராக இருப்பேன். வகுப்பில் ஒரு இடுபணிக்காக இம்மாணவர்கள் ஒரு நாடகம் நடித்துக் காட்டினார்கள். மாணவர்களுக்கு நான் என் மதிப்பீட்டை விளக்கிய பின் இந்த பிரபல நடிகையை தனியாக அழைத்து "உன் நடிப்பு சரியில்லை, ரொம்ப கவனமாக நடிக்கிறாய்" என்றேன். அவரும் கேட்டுவிட்டுப் போனார். எனக்கு அதன்பின் சற்று குற்றவுணர்வு ஏற்பட்டது. என்ன இருந்தாலும் அவர் அறியப்பட்டவர். அவரைப் போய் இப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஆகையால் அடுத்த நாள் அவரை மீண்டும் தனியாக அழைத்து "நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. நீ ஒரு அறியப்பட்ட நடிகை" என்றுவிட்டு "ஆனாலும் என் கருத்து அதுதான்" என்றேன். அவர் புன்னகைத்தார். நடிகர்கள் தொழிலாளர்கள் மட்டுமே, கிளாமர் எல்லாம் கட்டமைக்கப்படுவதே என்பது என் நம்பிக்கை. எந்த நடிகரைப் பார்த்தாலும் இதுவே தோன்றும். என்னுடைய சினிமா ரசிகைத் தோழி இருக்கிறாரே அவர் எப்படியாவது இப்பெண்ணைச் சந்திக்க வேண்டும் என என்னை நச்சரிப்பார். நானும் முடிந்த அளவுக்குத் தட்டிக் கழித்து வந்தேன். கடைசியாக செமஸ்டர் முடியும் தறுவார். நான் சொன்னேன், "தேர்வு முடிந்துவிட்டது. மதிப்பெண்ணை அளித்துவிட்டேன். இனி அவர் என் மாணவர் அல்லர். அவரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன்." அதற்குத் தோழி சொன்னார், "இப்போது எனக்கு அவரைப் பார்க்கும் மனநிலை போய்விட்டது. வேண்டாம்." "இல்லை உனக்கு அறிமுகப்படுத்தணும்ன்னு ஆசைப்படுறேன்." "சத்தியமா வேணாம். எனக்கு ஒரு பிக்பாஸ் பிரபலத்தைப் பார்க்கணும். அவர் இங்கே எங்கேயோ ஒரு தெருவிலதான் இருக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்." சரி, நான் அவரை அப்படிவிடக் கூடாது, கலாய்க்க வேண்டும் எனச் சொன்னேன் "இல்ல நான் அந்த மாணவர்ட்ட சொல்லி வச்சிட்டேன். எதிர்பார்த்திருப்பர்." "ச்சீ போ" அவர் சாலையில் அப்பிக்பாஸ் பிரபலத்தை தேடத் தொடங்கினார்.
இந்த தமிழ் ரசிகர்கள் வாக்காளர் மத்தியில் எப்போது எங்கே இருப்பார்கள், என்ன முடிவெடுப்பர்கள் என யாராலும் கணிக்க முடியாது.
கருத்துகள்