முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா: அதி-புத்திசாலித்தன யுக்தியும் விளைவும்


 

எதிரியை யுக்திபூர்வமாகக் கையாள்வது என்று சொல்வார்கள். இதுவரைக்கும் பாஜகவை பல கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்கள் அவ்வாறுதான் நடத்தி வந்தார்கள் என்பது என் அவதானிப்பு. தொடர்ந்து கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்களில் படித்தும் பணியாற்றியும் வந்தவன் எனும் நிலையில் நான் இதை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் - இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது என்

வகுப்பில் அமெரிக்காவில் பலியானவர்களுக்காக பிரார்த்தனை பண்ணினார்கள். எதுக்குடா அவங்களுக்காக நீங்க பண்றீங்க என யோசித்தபோதே அப்போதிருந்த அரசியல் விளங்கியது: அப்போது உலகம் முழுக்க கிறிஸ்துவர்களில் ஒரு பகுதியினர் யூத ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் வெளியுறவு யுக்தியை மதசார்பாக வகுத்துக் கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறை ஒன்றியத்தில் தொடர்ந்து வென்றபோது பல கிறிஸ்துவ நிறுவனங்கள் வெளிப்படையாகவே பாஜக ஆதரவு என நிலைப்பாடு எடுத்தன. இந்துத்துவாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகிவிடும், சிறுபான்மை அரசியலைக் கூடப் பேசக் கூடாது என்றே அவர்கள் மறைமுக தணிக்கையை கல்லூரி, பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினர். இது பயத்தினால் அல்ல, பாஜகவின் கூட்டு சக்தியாகத் தாம் மாற வேண்டும், இந்துத்துவாவின் கார்ப்பரேட் ஆதரவைப் பயன்படுத்த வேண்டும் எனும் ஆசையினாலே தோன்றியது. கேரளாவில் பல கிறிஸ்துவர்கள் வெளிப்படையாக இந்துத்துவா பேச 'கிறிஸ் சங்கிகள்' எனும் பெயரே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்மாலியர் மீது தாக்குதல் நடத்தப்படும்போது வாயை மூடிக்கொண்டு வேறு திசை பார்த்து நிற்பது அவர்கள் வழக்கமாகியது. கிறிஸ் சங்கிகளுக்குப் பாஜகவில் இருந்து நிதியும் சென்றது. தமிழ்நாடு சற்றே விதிவிலக்காக இருந்தாலும் இங்கும் தவெகவை கொண்டு வருவதில் சில கிறிஸ்துவ நிறுவனங்களில் வெளிப்படையாக வேலை பார்த்தது செய்தித்தாள்களில் வந்தது. இஸ்லாமிய விரோத நிலைப்பாட்டுக்கு கிறிஸ்துவ நிறுவனங்களை பாஜக கொண்டு வந்து விட்டது, சிறுபான்மை மக்களை இரண்டாகப் பிளந்துவிட்டது என நண்பர்கள் என்னிடம் கூறினர். நான் அவர்களைப் பொறுமை காக்கக் கேட்டேன். பாஜகவின் திட்டம் சிறுபான்மையினரை உடைத்து தனித்தனியாக அடிப்பதுதான். அவர்கள் ஒவ்வொருவரிடமாக வருவார்கள். நைசாக நைச்சியமாகப் பேசுவார்கள். ஆனால் மடியில் இருப்பதைப் பிடுங்கி தனிமைப்படுத்துவார்கள். சட்டத்தால், நடைமுறையால் அடிப்பார்கள்.
முதலில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்கும் செயல்படுவதால் வரி செலுத்த வேண்டும் எனச் விதிமுறை போட்டார்கள். அதை எதிர்த்து இவர்கள் நீதிமன்றம் போனார்கள். அடுத்து வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா (FCRA) வருகிறது. இதற்கான நியாயமாக அவர்கள் சொல்வது வெளிநாட்டு நிதியெனும் பெயரில் கறுப்புப் பணம் இந்தியாவில் கொண்டு வரப்படுகிறது என்பது. இதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது என்றாலும் பாஜகவின் நோக்கம் கறுப்புப் பண ஒழிப்பு மட்டுமல்ல, சிறுபான்மையினரின் நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதுதான். தற்போது கிறிஸ்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு அமித் ஷாவைச் சந்தித்து தம் கவலைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர் இது அனைத்து மதங்களுக்குமான மசோதாதான் எனப் போலிச் சமாதானம் சொல்லியிருக்கிறார். இங்கு ஸ்டாலினைச் சந்தித்து உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால் மசோதாவைத் தடுக்க முடியாது.
எந்த விசயத்திலும் அரசை எதிர்க்காமல் யுக்தி பூர்வமாக இருந்ததன் விளைவுதான் அவர்களுக்கு எனப் பிரச்சினை உதிக்கும்போது பொதுமக்களின், பிற சிறுபான்மையினரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பது.
மற்றொரு காரணம் மதத்தைப் பரப்புவது, பொதுச்சேவை செய்வது எனும் பெயரில் நடத்தப்படும் நிறுவனங்கள் பெரும் கார்ப்பரேட்டுகளாகி விட்டன. அவர்களுடைய வரவுசெலவில் தில்லுமுல்லு நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. கல்லூரி, பல்கலைகளில் இடம் பெற லஞ்சம் வாங்குகிறார்கள். சில பாதிரியார்கள் தனிப்பட்ட முறையில் உறவினர்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு சொத்து வாங்கிப் போடுகிறார்கள். கடந்த ஆண்டு நான் கோவை சென்றிருந்தபோது ஒரு கேரளாவைச் சேர்ந்த விரிவுரையாளரிடம் பேசினேன். அவர் தன் வீட்டருகே உள்ள நூறு கோடி சொத்தை ஒரு கத்தோலிக்கச் சாமியார் வந்து 'ஹாட் கேஷ்' கொடுத்து வாங்கிப் போனதாகச் சொன்னார். எளிய கடவுளின் பிள்ளைகளாக இருக்க வேண்டியவர்களுக்கு எதற்கு இவ்வளவு சொத்து? எதற்கு வெளிநாட்டு கார்? ஏன் தாய்லாந்துக்கு உல்லாசப் பயணம்? இதே போல, இயற்கைப் பேரிடர் வரும்போது சில என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகையை வாங்கி அப்படியே முழுங்கி விடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்களுக்கு எரிச்சல் வராதா? வரும். அதுவும் இவர்களைத் தனிமைப்படுத்தி இருக்கிறது.
நீதியற்ற யுக்தியும் கிறிஸ் சங்கித்தனமும் கறுப்புப் பணமும் முறையற்ற சம்பாதித்தியமுமாக இருக்கும்போது பாஜகவின் இந்த மசோதாவை எதிர்க்கும் அற வலிமையை இழந்து விடுகிறார்கள். தொண்டு செய்யும் மனநிலை கொண்ட அசல் சாமியார்களும் நீதிவான்களும் உண்டு. அவர்கள்தாம் இந்த சுயநலக் கார்ப்பரேட் சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பாஜகவுக்கும் இடையில் அதிகமாகச் சிக்கி பாதிப்படைவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...