முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடும், மாடு மேய்க்கும் அரசு வேலை


 

இன்று வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியா முழுக்கவே நிலைகுலைந்து வருகிறது. ஆனாலும் தானிய உற்பத்தி குறையவில்லை. காய்கறி விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அரசு காய்கறிகளுக்கான குளிர் வைப்பறைகளை அமைத்துத் தருவதையோ அடிப்படையான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையோ உத்தரவாதம் செய்யவில்லை. நீர் வளமும் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே போகிறது. அதற்கும் அரசு சுற்றுச்சூழலைப் பிரதானப்படுத்தாததே காரணம். ஒரே நல்ல விசயம் ஒரு அடிப்படை விலையை தானியங்களுக்கு நிர்ணயித்து அரசு கொள்முதல் பண்ணுவதே. இதுவும் கூட விவசாயத்தைக் காப்ப்பாற்ற அல்ல, மக்கள் பசியில் வாடி பஞ்சம் வரலாகாதே என்பதற்காகத்தான்.

இந்தியா இன்னும் முழுமையான ஒரு நகர்மய, தொழிலுற்பத்தி சார் நாடாக மாறவில்லை. அதற்கே இந்த கதி. அடுத்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட் விவசாயம் இங்கு வலுக்கும் என்பது என் கணிப்பு. அதாவது இதை பாஜகவால் செய்துதர இயலவில்லை எனில் கார்ப்பரேட்டுகள் அடுத்து வரும் அரசைக் கொண்டு செய்ய வைக்கும்.
ஏனென்றால் வேளாண் மக்கள் தொடர்ந்து நகரங்களுக்குப் பயணித்து வேலை தேடுவதும் நிலங்கள் ரியல் எஸ்டேட்டுக்கு விற்கப்படுவதும் அதிரித்துக் கொண்டே போகிறது. இந்த மாற்றத்தைக் கண்ணால் நேரடியாக நம்மால் பார்க்க முடிகிற படி வேகமாக நிலைமை உள்ளது.
இது நல்லது அல்ல என்று அறிவுள்ளவர்களுக்குத் தெரியும் - உணவு உற்பத்தியை - விவசாயத்தை - அரசு பாதுகாக்காவிடில் ஏழ்மை அதிகரித்து நிலையின்மை தோன்றும். காய்கறி விலை கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் கார்ப்பரேட் உள்ளே வந்ததும் தானிய விலை அதிகரித்தே ஆகும். அரசு மெல்ல மெல்ல குறைந்தபட்ச கொள்முதல் விலைத் திட்டத்தைக் கைவிடும். இதனால், மக்கள் மலிவு விலை துரித உணவுகளை வாங்கி சூடு பண்ணி சாப்பிடத் தொடங்குவார்கள். ஒரு கட்டத்தில் மக்களின் ஆரோக்கியம் சீர்கெடும். நோய்கள் பெருக்கும். ஆஸ்பத்திரிகள் லாபம் சம்பாதிக்கும்.
நிலைமை இம்மாதிரி சமச்சீரற்றுப் போனதற்கு நமது அரசுகளின் பொருளாதார கொள்கைகள் ஒரு காரணம் எனில் வாக்காளர்களின் அக்கறையின்மை மற்றொரு காரணம். இந்நிலையில்தான் நேற்று நான் சீமான் பேசிய ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் எட்டு லட்சத்துக்கு மேலான இளைஞர்களுக்கு ஆடு, மாடு வாங்கிக் கொடுத்து விவசாயம் செய்ய வைப்பேன், அதுவே அரசு வேலை என்கிறார். தன்னை எல்லாரும் முட்டாள் என்கிறார்கள், ஒருநாள் மக்கள் அவரிடம் போகும் நிலை வரும் என்கிறார். இது நிச்சயம் நடக்காது. சொல்லப்போனால், சீமானின் தேர்தல் வீழ்ச்சிக்கு இந்த தற்சார்புப் பொருளாதாரப் பிரச்சாரமும் ஒரு முக்கிய காரணம். தவெக ஒரு பக்கம் இலவசங்களை அள்ளி வழங்குவதாகச் சொல்லிக் கொண்டே கார்ப்பரேட் நிதியாளர்களின் பல்வேறு உத்தரவாதங்களைச் சொல்லி பணம் பெற்றார்கள். சீமானுக்குக் கிடைத்ததை விட பல்லாயிரம் மடங்கு அதிகப் பணம் தவெகவுக்குக் கிடைத்தது இப்படித்தான். அவர்கள் மிகை-கார்ப்பரேட்வாதத்தை ஆதரிக்கிற ஒரு கட்சி. கல்வியில் முதலீடு, கட்டமைப்பு வளர்ச்சியில் முதலீடு கிட்டத்த இல்லவே இல்லை. அவர்கள் அரசு வேலைகளையும் தேர்தலுக்கு முன்பு தருகிற இலவசத் திட்டத்தைப் போன்றே பார்க்கிறார்கள். அதாவது திமுகவுக்கு சமநிலையைப் பேணும் நோக்கம் உண்டெனில் இவர்களுக்கு சுத்தமாக இல்லை. டாஸ்மாக், பேருந்து சேவை, மின்வாரியம் எல்லாமே இனி தனியார்தான். இதற்காகத்தான் கார்ப்பரேட் ஆதரவு அவர்களுக்கு தேர்தலின்போது கிடைத்திருக்க வேண்டும். ஆடு, மாடு என்றெல்லாம் பேசினால் சீமானுக்கு யார் கொடுப்பார்கள்? மேலும் படித்துவிட்டு விவசாயம் செய்வது, அடிப்படையான வசதிகளுடன் மட்டும் வாழ்ந்து வறட்சியுடன் போராடி விவசாயத்தைக் காப்பாற்ற மத்திய வர்க்க, மேல்மத்திய வர்க்க மக்கள் ஏன் விரும்ப வேண்டும்? ஆனாலும் சீமானுக்கு யார் இந்த முட்டாள்தனமான ஐடியாக்களைக் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
கடைசியாக, இவ்வளவு பெரும் பொருளாதாரக் கொள்கை, கட்டமைப்புப் பிரச்சினையை சரிசெய்யாமல் தற்சார்பு பொருளாதாரத்துக்கு ஆடு, மாடு வளர்த்து ஒருவர் போக முடியாது. சரியான தீர்வு ஒன்றிய அரசு தன் கொள்கையை மாற்றி விவசாயத்திற்கும் விற்பனைச் சங்கிலியை உருவாக்கி குளிர் வைப்பறைகளைக் கட்டுவதற்கும் அதிகப் பணத்தை முதலீடு செய்வதே. மெல்ல மெல்ல, இதன் வழியாக ஒரு பகுதி மக்களை ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை கிராமங்களில் வாழ அனுமதிப்பதே. இன்னொரு பக்கம், இருக்கிற நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதே. மக்களும் உணர்ச்சிகரப் பிரச்சினைகளை விடுத்து, பொருளாதாரம் சார்ந்து வாக்களிப்பதே.
எனக்கு நல்லவேளை சீமானுக்கு மக்கள் பலத்த ஆதரவைத் தரவில்லை என்று ஆறுதல் ஏற்பட்டது. அவருக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் அதன் வழிமுறையென்ன, பாதிப்புகள் என்னவென யோசிப்பதில்லை. தொழில்மயமாக்கலில் முதலீடு செய்து, இளைஞர்களுக்கு அதில் வேலை பெற்றுத் தராமல் தமிழ்நாடு மட்டும் ஆடு, மாடு வளர்ப்பு, இயற்கை விவசாயம் என தனி டிராக்கில் போக முடியாது. நம் இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்தால் வடக்கர்கள்தாம் இங்கு சீமானுக்காக ஆடு மெய்க்கும் அரசு வேலையில் சேர வேண்டி வரும்.
இதைப் பார்க்கும் போது ஒன்று தோன்றுகிறது: விஜய்யோ சீமானோ சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாசிக்கிற, யோசிக்கிற பழக்கமே இல்லை (அவர்கள் மட்டும் ஏன் தனி தத்திகளாக இருக்கிறார்கள் என்பது எவ்வளவு யோசித்தும் புரியவில்லை). அப்படியே படித்தாலும் அது அவர்கள் மூளையில் ஏறுவதில்லை. கமலஹாசனைப் போல. ஒரு படித்த சமூகம் அவர்கள் சொல்வதைக் கேட்டுச் சிரித்துவிட்டுப் போய்விட வேண்டும். கைத்தட்டி, வாக்களித்து அரசியலில் ஆதரித்தால் அது சமூகமாக இருக்காது, மனநல விடுதியாகிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...