அதிகாரச் சமநிலை இல்லாத சமூகத்தில் எந்த நல்ல விசயமும் நிகழ்கையில் ஏற்கனவே ஒரு ஏற்றத்தாழ்வை, சுரண்டலை உருவாக்கும். தமிழ்ப் பண்பாடும் நவீன இலக்கியமும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்:
முப்பதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெகுமக்கள் வாசிப்பு, ஊடகம், பதிப்பு ஆகியவற்றில் இருந்தும் அரசாங்க ஆதரவு, நிதியில் இருந்து விலகி இருந்தோம். அதாவது வாய்ப்புகள் இல்லை என்பதால். இது ஒரு பெரும் ஆற்றலை அளித்தது - புதிய போக்குகளை விலகி நின்று வாசிக்க, விவாதிக்க, உருவாக்க இயன்றது. அரசில் இருந்து சினிமா, வெகுமக்கள் கலை வடிவங்கள், கருத்துருவாக்கங்கள் அனைத்தையும் குறித்த மாற்றுப் பார்வைகள் தோன்றின. இந்த விலகல் மறைந்து வெகுமக்கள் போக்குகளுடன், நிறுவனங்களுடன், அரசுடன் நாம் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டது. தொழில்நுட்பம் இதற்கான வெளியை உருவாக்கியது. இதனால் புத்தகப் பதிப்பு வலுவானது. பத்து புத்தகங்கள் வந்த இடத்தில் ஐநூறு புத்தகங்கள் வந்தன. ஆனால் வெகுமக்கள் பார்வையுடன் ஒத்திசைய வேண்டிய கட்டாயம் நவீன இலக்கியவாதிகளை பெரும் அமைதி கொள்ள வைத்தது. எதிர்மை இல்லாததால் புதுச் சிந்தனைகள், போக்குகள், எதிர்த்தரப்புகள் மறைந்தன. ஒன்றிப் போகும் முயற்சியில் நாம் நம்மை இழந்தோம்.
புத்தகத் திருவிழாக்கள், நூலகக் கொள்முதல் ஆகிய இரண்டு திட்டங்களும் இலக்கியத்திற்கு வெகுவாகப் பயனளித்தன. ஆனால் இவை மற்றொரு பிரச்சினையை உருவாக்கின: எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர் தொழில்முனைவோர் ஆயினர். இதுவும் காலத்தின் கட்டாயம்தான்: புத்தகங்களை நேரடியாக விற்காமல் அவர்களால் எதையுமே எழுத்தில் இருந்து சம்பாதிக்க முடியாத நிலையை வாசகர்களின் போதாமை ஏற்படுத்தியது. தொழில்முனைவோருக்கான அடிப்படைச் சிக்கல் அவர்களையும் இப்போது ஆட்கொண்டது.
பொதுச்சமூகம் ஏற்கும் விதத்தில் பேசுவது, எழுதுவது, அதிகார மையத்துடன், குறிப்பாக அமைச்சகத்துடனும் அதிகாரிகளுடனும் நல்லுறவைப் பேணுவது அவசியமாகியது. ஒவ்வொரு முறை அரசு புதிதாக அமையும்போது இதற்கான முயற்சிகளில் இறங்குவது அவசியமானது.
இதில் நடைமுறைத் தேவையைத் தாண்டின ஒன்றும் உள்ளது: நீங்கள் அப்படியே நெருக்கம் பேணாவிடினும் புத்தக ஆணை கிடைக்கத்தான் செய்கிறது. அதாவது கடந்த ஆட்சியில் இது ஒழுங்காகவே நடந்தது. பேச்சாளர்கள் அனைவரும் அரசியல் வலைத்தொடர்பு கொண்டவர்கள் அல்லர். பேச்சுத்திறனும் நட்பாக்கமுமே இதற்கு உதவியது. ஆனாலும் கூட அதிகாரத்துடன் நெருக்கமாக இருக்கும் ஆசை சில நவீன இலக்கியவாதிகளிடம் உள்ளது. இது இன்று மட்டுமல்ல முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் தான் இருந்தது. அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் கிடைக்கும் நட்பை பிரகடனப்படுத்தும் இயல்பு அன்றைய சிறுபத்திரிகையாளர்களிடமும் வலுவாக இருந்ததுதான். சொல்லப்போனால் நமது சங்க இலக்கியத்திலும் இத்தகைய உறவு (புலவர்-புரவலர்) குறித்துப் பேசப்படுகிறது. அரச இறையாண்மையுடன் நெருங்கும் விழைவு படைப்பாளியின் தன்னிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுதான் சற்று வினோதமானதாக உள்ளது.
இது ஏனென்றும், நாம் வேறெப்படி இருந்திருக்க முடியும் என்றும் புரிய நாம் இதை இங்கிலாந்தின், அமெரிக்காவின் இலக்கிய மரபுடன் இணைவைத்தால் போதும். இங்கிலாந்தில் கவிஞர்கள் பதினான்காம் நூற்றாண்டு துவங்கி பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரை பல்வேறு நிலைகளுடன் அரச குடும்பத்துடன் நெருக்கமாகவோ எதிர்நிலையிலோ இருந்திருக்கிறார்கள். மார்லோவ் அரசாங்கத்தின் ஒற்றராக இருந்தே கொல்லப்பட்டார். ஷேக்ஸ்பியர் தன் கொடையாளர்களுக்காக கவிதைகள் பிரசுரித்திருக்கிறார்; எலிசபத் ராணியுடன் நட்புறவைப் பேணியிருக்கிறார். இதன் பிறகு ஒரு மாற்றம் வருகிறது - பிரஞ்சுப் புரட்சிதான் துவக்கம் என நினைக்கிறேன். அரசும் மதமும் பிரிய வேண்டும் எனும் எண்ணம் பதினாறாம் நூற்றாண்டு முதலே அங்கு நிலைகொண்டிருந்தாலும் அரசும் பொதுச்சமூகமும் இலக்கியவாதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாடு கற்பனாவாதிகளிடமே முதலில் வலுவாகத் தோன்றுகிறது. வெர்ட்ஸ்வொர்த், காலரிட்ஜ், ஷெல்லி, கீட்ஸ் போன்றோரைக் குறிப்பிடலாம். இது பாரித்தத் தாக்கத்தை அங்கு இலக்கியத்திலும் சமூகத்திலும் உருவாக்கியது. இதன் தாக்கத்தை அடுத்தடுத்த நூற்றாண்டுகளிலும் இங்கிலாந்திலும் பின்னர் அமெரிக்காவிலும் காண்கிறோம். இந்தியாவில் கூட பாரதியில் துவங்கி நவீனத்துவ படைப்பாளிகள் வரையிலும் காண்கிறோம். இதை ஒரு படைப்பாளியின் மிகைத்தன்னிலையாக்கம் என்று பார்க்கிறேன். அதாவது எழுத்தாளர் தன் கற்பனையால் தன்னை மிகப்பெரிய ஆகிருதியாகப் பெருக்கிக் கொள்வது. முற்றிலும் புதிய ஒளியில் தன்னையும் உலகையும் கண்டு பண்பாட்டை, மொழியை மீளுருவாக்கம் செய்வது, ஆன்மாவைப் புத்துணர்ச்சி கொள்ள வைப்பது படைப்பாளியின் நோக்கம் என வரையறுப்பது. இலக்கியம் இவ்வாறு ஒரு 'முற்போக்கு மதமாகிட', படைப்பாளி அதன் 'மானுட தெய்வமாகவும்' ஆனார். அதாவது 'பெறும்' நிலையில் இருந்து 'கொடுக்கும்' நிலைக்கு முழுமையாகப் போனார். ஆனால் உலகப் போர்களுக்குப் பின்பும் பின்நவீனத்துவத்தின் கருத்தாக்கங்களாலுமே இதில் ஒரு பெரும் மாற்றம் தோன்றி எழுத்தாளர் உற்பத்தியாளர் ஆனார். இச்சிந்தனையே தமிழிலும் படைப்பெழுத்து மொழியில் உற்பத்தி பண்ணப்படும் பண்டமே, அதில் எந்த மகத்துவதும் இல்லை, படைப்பாளி எங்கும் எதிலும் ஒன்றுதான் எனப் புரிந்துகொள்ளப்பட்டு வெகுமக்கள் கலைவடிவங்கள் எனப் புகழப்படும் மலினமான இதழ்கள், சினிமாவில் எழுத எழுத்தாளருக்கு மேடையமைத்தது.
இவ்வளவு விசயங்கள் உலகெங்கும் நிகழ்ந்தபோதும் அவை தமிழில் காலனியாதிக்கம் காரணமாக இருபதாம் நூற்றாண்டு வரை காலூன்றவில்லை. இருபதாம் நூற்ற்றாண்டின் துவக்கத்தில் கூட இங்கு நிகழ்ந்த சினிமா புரட்சி, வெகுமக்கள் கலாச்சார எழுச்சியால் மூழ்கடிக்கப்பட்டன. மேற்சொன்ன நம்பிக்கை இலக்கியத்திலும் கூட முழுமையாக நிலைகொள்ளவில்லை. ஒரு உதாரணத்திற்கு, பிரபஞ்சனின் இலக்கிய உரையொன்றில் அவர் பாண்டிச்சேரி சுதந்திரப் போராட்டம் பற்றி பெருமிதத்துடன் பேசும்போது தேசியத்திடன் முன் எழுத்தாளர் கொள்ளும் பக்தி கலந்த மண்டியிடலையே காண்கிறோம். அதில் இருந்து விலகி நின்று அதன் அபத்தங்களை, போதாமைகளை விமர்சிக்கிற, அதற்கு மேலாக நின்று பேசுகிற கற்பனாவாத அகந்தையை நாம் காண்பதில்லை. தமிழிலும் மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோரால் வெகுமக்களின் அரசியல், சமூகச் செண்டிமெண்டுகளை எதிர்த்துச் சிந்திக்க இயன்றதில்லை. இறையாண்மைக்கு எதிராக நிற்க இயன்றதில்லை. ஒரு சமூகமாக, தொடர்ந்து வெள்ளையர் அரசு, இந்தி மேலாதிக்கம் ஆகிய தாக்குதல்களுக்கு எதிராக நம்மை நிலைகொள்ள வைக்க வேண்டிய அவசியமும் உள்ளார்ந்த தாழ்வுணர்வும் எப்போதும் குற்றவணர்வுடனே பேசியும் யோசித்தும் சமரசம் பண்ண வைத்தன என நினைக்கிறேன். நமக்கென்று ஒரு பிரஞ்சுப் புரட்சியும் அதன் வழியாக நம் சமூக ஆளுமையை, படைப்பாளுமையை மீளத் தொகுத்துக் கொள்கிற வாய்ப்பும் வரலாற்றில் அமையவில்லை.
இவ்வாறு, இங்கு அரசியலும் சமூகச்சீர்திருத்தமுமே முற்போக்கு மதமாகியது. இங்கு அரசியல் தலைவர்களே மானுட தெய்வங்கள். சினிமா அவர்களுடைய பிரச்சார வாகனம். ஐரோப்பாவில் போல இங்கு பண்பாட்டு மூலதனம் இலக்கியத்துக்குக் கிடைக்காததால் எழுத்தாளர்களுக்கு நிதியாதாரமும் இல்லாமல் போனது. அவர்களுக்குள் சித்தாந்த ரீதியாகவே அரசின் அணுக்கத்தை நாடும் ஒரு முனைப்பு தீவிரமாகத் தொடர்ந்தது. அரசின் அமோதிப்பே பண்பாட்டு மூலதனத்தையும் நிதியையும் பெற்றுத் தர முடியும் என்பதைத் தாண்டி படைப்பாளியின் ஆளுமையின் சாரத்தை அரசின் கவனம் ஏதோ ஒரு விதத்தில் உறுதிப்படுத்துகிறது. இது வினோதமானது - இலக்கியத்துக்கும் அரச இறையாண்மைக்கும் இங்கு எந்த நேரடி கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனாலும் அமைச்சரின், அதிகாரிகளின் தொடர்பு எண்கள், அருகாமையை உணர்த்தும் காணொளிகள், படங்கள் ஒரு உறுதிப்பாட்டை படைப்பாளிக்கு அளிக்கிறது. அது மட்டுமல்ல, குடும்பத்தின் அங்கீகாரம், உறவுகளின், சாதியினரின் அங்கீகாரம் நம் உபமனத்துக்க்குத் தேவைப்படுகிறது. உலகம், பிரபஞ்சம் எனப் பெரும் பரப்பை நோக்கிப் பாயும் படைப்பாளியின் தன்னிலை இங்கு மிகச்சிறு புள்ளியை நோக்கி விசைகொள்ளவும் செய்கிறது. சமத்துவத்தைக் கோரும் போதும் ஒரு அதிகாரச் சமநிலையின்மையை படைப்பாளியின் மனம் மனம் உடனடியாக ஏற்றுக் கொள்கிறது.
மேற்சொன்ன சமூக வரலாற்றுக் காரணங்களும் கூட ஒரு பின்னணியை மட்டுமே அளிக்கின்றன. அவை முழுமையாக நம் கேள்விக்கு விடை தருவதில்லை. ஏனெனில் இவ்வளவு நிபந்தனைகளுக்கு அப்பாலும் சுதந்திரமாகச் செயல்படும் படைப்புப் போக்குகளும், தன்னிலையும் பிற மொழிகளில், சமூகங்களில் உண்டு.
நாம் ஏன் இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறோம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தெரியாது.
கருத்துகள்