முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சின்னச் சின்ன ஆசை" எனும் கற்பனை

 


நண்பர் பலரும் பேஸ்புக்கில் பாராட்டியிருந்ததைப் பார்த்துதான் இப்படத்தைப் பார்த்தேன். ஒரு விசயம் உண்மை - ரொம்ப நுட்பமான ஒரு உளவியல் அவதானிப்பை ஆண்-பெண் உறவு சார்ந்து வைத்திருக்கிறார்கள். அதேநேரம், கதைக்குள் பெரிய ஒரு ஓட்டை உள்ளது. இரண்டையும் பார்ப்போம்.

நாயகி 53 வயதான லீலா. எதற்காக வாழ்க்கையை வாழ்கிறோம் எனப் புரியாமல் வாழ்ந்ததன் அலுப்பும் சோகமும் ததும்ப நடக்கும் பெண். தன்னை விரும்பாத கணவன், தன்னை நேசிக்காத குடும்பம், தன் நடனத் திறனை ரசிக்காத குடும்பம் எனும் புகார்கள் கொண்ட பெண். கணவர் இறந்த பின்னும் இதையெல்லாம் தனக்குள் அடக்கி வாழும் அவருக்கு கிடைக்கும் ஒரு அண்டை வீட்டுப் பெண் வாரணாசியின் அழகை வர்ணிக்க அதைக் காணும் விருப்பத்தில் வருகிறார். இவருக்கு நேரெதிரான பாத்திரம் நாயகன் - மாதவன். இவருக்கு அவரைவிட வயது அதிகம். ஆனால் தன் மனைவியை இளம் வயதில் இழந்த துக்கத்தையும் மீறி மகிழ்ச்சியாக வாழ முயல்பவர். அவருக்குள்ளும் ஒரு பொருத்தமான காதலைப் பின்னால் காண இயலவில்லை எனும் வருத்தம் உண்டு. இருவரும் இணைவது இப்படி ஒரு தேய்வழக்கான கதையமைப்பால் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தக் கதையின் சிறந்த பகுதி லீலா தன் குழந்தைப் பருவத்தை தன் இதயத்துக்குள் பதுக்கி வைத்திருப்பதும், ஒரு குழந்தையாகவே சில தருணங்களில் வாழ்ந்துவிட அவர் தவிப்பதும்தான். அவருடைய உட்சுருங்கிய உடல்மொழியும் இயல்பும் இந்த மனநிலைக்குக் கனக்கச்சிதமாக இருக்கின்றன. மாதவன் இவருக்கு ஒரு அலட்சியமான, பிரியமான வழிகாட்டியாக இருக்கையில் அவர் சட்டென உள்ளுக்குள் பூரித்துப் போகிறார். கதை முடிகையில் அவர் மாதவனை ஏற்கும் நிலையில் இருக்கிறார், ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலற்று இருக்கிறார்.
நாம் நமக்குள் இந்த குழந்தை மனநிலையைத் தூக்கித் திரிகிறோமா எனும் கேள்வியே என்னைச் சற்று நேரம் துரத்தியது. ஆம், உண்மைதான். சமூகக் கட்டுக்களை அறுத்து சுதந்திரமாக இருக்கும் விருப்பம், சின்னச்சின்ன மறுப்புகளில், எதிர்ப்புகளில், உணர்வு வெளிப்பாடுகளில் நாம் அடையும் பரவசம் இதைக் காட்டும். அதேநேரம், நாம் இதை ஏற்கனவே வண்ணதாசனின் கதைகளில் கண்டிருக்கிறோம் - இந்த குழந்தை மனம், சின்னச் சின்ன அன்பில், நெகிழ்வில், சிலாகிப்பில், தத்தளிப்பில் தன்னைக் காணும் மனம் நிஜத்தில் இருக்கிறதா இல்லை இது ஒரு மிகுகற்பனையா, இது ஒரு கற்பனாவாதமா? லீலா நிஜம்தான். அத்தகையோர் உலகில் உண்டு. ஆனால் லீலா தனக்குள் பத்திரமாக வைத்திருக்கும் குழந்தை அவள் தன்னில் எதையோ காணாதிருக்க வைத்திருக்கும் ஒருவித மறைப்புதானோ?
உ.தா., குழந்தைமை என்பது நம் கடந்த காலத்தில் உள்ள ஒன்று. கடந்த காலம் நினைவுகளால் மட்டுமல்ல அச்சங்களாலும் நினைவேக்கத்தாலும் கட்டமைக்கப்படுவது. கடந்த காலம் என ஒன்று உள்ளதாலே நாம் அதிலிருந்து தப்பிக்கவோ அதை நோக்கிப் போகவோ விரும்புகிறோம். லீலாவின் கடந்த காலம் இப்படித்தான் ஒரு பக்கம் தப்பிச் செல்ல வேண்டும் இளமைக் காலம், திருமண வாழ்வனுபபம் என இருக்கிறது, இன்னொரு பக்கம் தேடி அடைய வேண்டிய குழந்தைக் காலம் என இருக்கிறது. இதில் அசலான லீலா காணாமல் போகிறார். அசலான லீலாதான் அவ்வப்போதைக்கு தனக்கு, தன் உடலுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பவர். அஞ்சாமலும் நெகிழாமலும் இயல்பாகத் தன்னைத் தேடி அந்தந்த கணத்தில் அடைபவர். இக்கதை முழுக்க லீலாவும் மாதவனும் அமரும்போது ஸ்பரிசிப்பதே இல்லையென்பதைக் காணலாம். அதிகமாகத் தொட்டு சிருங்கரித்து அதைப் படம் பிடிக்கும் ஜோடியைக் கண்டு லீலா எரிச்சலடைவதும் அங்கங்கே வருகிறது. ஏனென்றால் அவர்கள் நிகழ்காலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அவள் செய்யாத ஒன்றைக் காட்டி உணர்த்துகிறார்கள். அவர்கள் செய்யும் எதையும் கற்பனாவாதத்தால் ரசிக்க இயலாது. லீலா மறைத்துக் கொண்டு கட்டியெழுப்பும் குழந்தையை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள்.
"சின்னச் சின்ன ஆசையில்" ஏன் முதுமையின் செக்ஸ் நாட்டம் பேசப்படுவதில்லை? இக்கேள்விக்குள் கதை வராததனாலே அங்கு ஒரு குழந்தைமை கொண்டாடப்பட முடிகிறது. ஆக, இந்தப் பிரச்சினையே கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான்.
எனக்கு இவ்விசயம் "ரோஜாவில்" வரும் 'சின்னச்சின்ன ஆசை' பாடலில் ரோஜாவின் கோரிக்கைகளை நினைவுபடுத்துகிறது - சேற்று விளையாடி நாற்று நடுவது ஏன் அவளுக்கு ஓர் ஆசையாகிறது? அது எல்லாருமே விவசாயப் பின்னணியில் கிராமத்தில் செய்வதுதானே? ஏனென்றால் அப்பாடலில் வருவது ஒரு நகரத்துப் பெண்ணின் மனநிலை. கிராமத்தை exotic ஆக்குவது. ரோஜா அடுத்து நகரத்துக்குப் போகும்போது இது ஏக்கமாகிறது. நாம் இன்று என்ன பார்க்கிறோம்? பல கிராமத்துப் பெண்கள் கிராமத்து மாப்பிள்ளை வேண்டாம் என்கிறார்கள். ஆசையை சினிமாவும் சிலநேரங்களில் கற்பனவாத இலக்கியமும் எதார்த்தத்தை மறுத்து இல்லாததை இச்சிப்பதாக மாற்றுகிறது. இதில் ஒரு மென்மையை, நுட்பத்தைக் கொண்டு வருகிறது. இது இப்படித்தான் இயங்குகிறது எனும் ஓர்மை இப்படத்தில் உண்டா என்றால் இல்லையென்பேன்.
அடுத்து வடிவம். முதற் பாதியின் துவக்கத்திலேயே லீலா தன் நிறைவேறாத ஆசைகளாலான வாழ்வே தன் பிரச்சினை, அதைச் சரிசெய்வதே தன் இலக்கு என உணர்த்துகிறார். ஆனால் அதை நோக்கி இப்படத்தை தீவிரமாக எடுத்தால் இது ஒரு தன்னைக் கண்டடையும் (coming-of-age) படமாகி இருக்கக் கூடும். ஆனால் இயக்குநருக்கு உள்ள அழுத்தங்களாலோ அவரது குழப்பத்தினாலோ இதை ரொமான்ஸாக மாற்ற நினைத்து இரண்டுக்கும் நடுவே படம் மாட்டி விட்டது. ஏனென்றால் முழு ரொமான்ஸாக எடுப்பதிலும் இயக்குநருக்கு மனம் இல்லை. அதனாலே மாதவனை லீலா மீண்டும் சந்திக்கும் இடத்திலேயே படம் முடிகிறது, அதற்கு மேல் வரும் காட்சிகள் அலுப்புத் தட்டுகின்றன. இருவரையும் என்ன செய்வதெனத் தெரியாமல் ஆதிகாலத்து உத்தியான ஒருவரைச் சாகவிடுவது என முடிவெடுக்கிறார். நான் ரசிக்காதது கதைக்கு ஒரு தத்துவக் கோணம் கொடுக்கலாம் என 'லீலா' எனப் பெயரளித்து அவர் வாரணாசியில் மரணமடைவதையும், மாதவனின் கண்முன் இறுதியில் தோன்றுவதையும் வைத்திருப்பது. ஒரு தத்துவக் கதைக்கான கட்டுமானம் இதற்குள் இல்லை.
கடைசியாக, லீலாவின் மனதுக்குள் உறங்கும் குழந்தைமையுடன் உறவாடுகிற விதம் வரும் அந்த குள்ளனின் பாத்திரம் நல்ல தேர்வு. அக்காட்சிகளில் லீலா இன்னும் சுதந்திரமாக, இயல்பாக வருவதாகக் காட்டியிருப்பது அழகு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...