நேற்று ஒரு குடும்ப வழக்கில் சிக்கிக் கொண்டு நல்ல வக்கீல் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பர் என்னிடமும் விசாரித்தார். அவரிடம் நான் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் சொல்லி எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என வலியுறுத்தினேன். ஏன் எச்சரிக்கை என்றா நினைக்கிறீர்கள்? கதை இதுதான்.
நான் ஒரு 'குடும்ப நல' வழக்கில் முன்பு சிக்கியிருந்த சமயம். அப்போது ஒரு நண்பரின் உறவினரான ஒரு வக்கீலைப் போனில் அணுகினேன். அவர் எடுத்ததுமே தெலுங்குப் பட வில்லன் ரேஞ்சில் மிரட்ட ஆரம்பித்தார். முதலிலேயே தனக்கு ஒரு லட்சம் அனுப்பிட வேண்டும் என்றார். விசாரணையே ஆரம்பிக்கவில்லை, நான் இன்னும் ஆஜராகவே இல்லை, எதற்குக் கட்டணம் என யோசித்தேன். மேலும் உடனடியாகப் பணம் புரட்ட வேண்டும். அவரிடம் பிறகு தருகிறேன். முதலில் வழக்காடு மன்றத்தில் சந்திப்போம் என்றேன். நான் வழக்காடு மன்றத்திற்குப் போனால் எங்கே செல்வது, எதைச் செய்வது எனத் தலைகால் புரியவில்லை, இவருக்குப் போன் பண்ணினால் என் அலுவலகம் வந்து பணம் கொடுங்க, அப்பத்தான் வருவேன் என்கிறார் (அவர் பின்னர் போலிக் கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் மாட்டிக் கொண்டார்). நான் அன்று ஒரு வழியாக வக்கீல் இல்லாமலே சமாளித்தேன். முதல் நாள் என்பதால் மிகவும் பயமாக இருந்தது. ஆனால் சில வக்கீல்கள் இப்படித்தான் திராட்டில் விடுவார்கள் எனப் புரிந்துகொண்டேன். இது ஒரு வகை.
அடுத்து இன்னொரு வக்கீல் நான் என் வழக்கைப் பற்றி பேஸ்புக்கில் எழுதியதைப் படித்து என்னிடம் மெஸஞ்சரில் தொடர்பு கொண்டு எண்ணை வாங்கி நேரடியாகப் பேசினார். அவர் மிகவும் பிரபலமானவர் என்பதால் கேள்விப்பட்டிருந்தேன் என்பதால் நானும் மனம் உருகிப் பேசினேன். அப்போது அவர் என்னிடம் 'கிளையண்ட்' பிடிக்கிறார் என்பது என் மரமண்டைக்கு விளங்கவில்லை. அவரை என் வக்கீலாக்கிக் கொண்டேன்.
அவர் என்னிடம் 'பதில் மனு போடுவதற்கு நீங்கள் உங்கள் தரப்பை விரிவாக எழுதி அனுப்புங்கள்' என்றார். எனக்கு அப்போது அவர் என்னையே வேலை வாங்குகிறார் எனப் புரியவில்லை. நான் ஐம்பது பக்கங்களுக்கு மேல் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். அவர் என்னைத் தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதைப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டு அங்கங்கே "இந்தக் காட்சி இங்கே வந்தா நல்லா இருக்கும், அதை அங்கே மாத்துவோம்" என developmental fiction editing பண்ணினார். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு என்னிடம் ஒரு லட்சம் லபக்கென்று கேட்பார் என எனக்கு அப்போது தெரியாது. அவர் சும்மா கேட்கவில்லை. அடுத்தடுத்து வழக்கின் சில தேவைகளுக்கு தனி மனுக்கள் போடுவதைக் குறித்துப் பேசிவிட்டு "எல்லாவற்றையும் சரி பண்ணித் தருகிறேன்" என்று நைஸ் பண்ணிவிட்டு முதுகில் இருந்து பட்டாக்கத்தி உருவுவதைப் போலக் கேட்டுவிட்டார். நான் ஒருவேளை இதுதான் நடைமுறை போல, வக்கீல்கள் ரொம்பச் செலவு பிடித்தவர்கள் போல, மொத்த வழக்குக்கான செலவில் பாதியைக் கேட்கிறார்கள் போல என நினைத்து என் சேமிப்பில் இருந்து எடுத்துக் கொடுத்தேன்.
இப்படிப் பணத்தை வங்கிக் கொள்ளையருக்கு என்பதைப் போலக் கொடுப்பதன் பிரச்சினை நம்மிடம் அதன்பிறகு மாதச் செலவுக்கான பணம் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதே. இதனால் நாம் மருத்துவச் செலவுகளை ஒத்திப்போடுவோம். என்னுடைய காலில் அணிந்திருந்த காலிப்பர் ஒருநாள் பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயம்பட்டபோது ஒடிந்து போனது. அதைச் சரிசெய்து புதிதாக ஒன்றைப் பண்ண வேண்டும். ஆனால் பணமில்லை. ஒடிந்ததைச் சரி பண்ணி சிரமத்துடன் நடக்க வேண்டிய கட்டாயம். சென்னைக்கு வர அடிக்கடி விடுப்பெடுப்பதாலும் செலவுக்கும் விடுதிகளில் தங்குவதற்கும் பணம் கரைந்தது. ஒரு கட்டத்தில் நான் நீதிமன்ற நாட்களில் நேரடிப் பரிச்சயம் இல்லாதவர்களின் வீடுகளில் சில மணிநேரங்கள் ஓய்வெடுத்துவிட்டு நீதிமன்றம் போக முடிவெடுத்தேன். எப்படியெல்லாமோ பணத்தைச் சேமித்தேன். எப்படிச் சேர்த்தாலும் வக்கீல் பாட்டுக்கு ஐம்பதினாயிரம், ஒரு லட்சம் எனப் பிடுங்கி விடுவார். என்னப் பிரச்சினையென்றால் அதற்கான எந்த வேலையும் அவர் செய்ய மாட்டார். நான் எழுதியதை அவர் மேலோட்டமாகப் பார்த்து காட்சிகளை மாற்றிவிட்டதைத் தவிர அவர் நேரடியாக நீதிமன்றம் வந்து ஆஜராக மாட்டார். அவரது ஜூனியரான இளம் பெண் ஒருவர்தான் இறக்கையைப் பறக்கவிட்டபடி வருவார். அதுவும்கூட நீதிபதி பெயரைக் கூப்பிட்டதும் நான் போய் நின்றால் இவர் பக்கத்தில் வந்து நிற்பார். நீதிபதி எங்களை மேலோட்டமாகப் பார்த்து விட்டு "இருக்கிறீரா?" என்பார். "இருக்கிறேன் மேடம்". இதற்குத்தான் இவ்வளவு பணத்தை வாங்குவது.
மெல்ல மெல்ல குடும்ப நல வக்கீல்கள் மனசாட்சி அற்றவர்கள், உலகிலேயே ஒருவர் ஐந்து நாட்கள் உழைத்துச் சம்பாதிப்பதை ஐந்து நிமிடங்கள் நின்று சம்பாதிப்பவர்கள் என எனக்குப் புரிய ஆரம்பித்தது. விஜய் அஜித் கூட நின்றபடி நடிக்க வேண்டும். சண்டை போட வேண்டும். விக் அணிய வேண்டும். இவர்கள் ஒன்றுமே பண்ண வேண்டாம். நான் அங்கு நடக்கும் விசாரணைகளை அமர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். விசாரணை நடக்கும்போது கூட வக்கீல்களுக்கு அங்கு பெரிய இடம் இருப்பதில்லை. குடும்ப நல வழக்கானது ஒரு அரசு அலுவலகத்தில் உயரதிகாரியிடம் நேரடியாகப் பொதுமக்கள் முறையிடுகிற பாணியில்தான் நடக்கும். நீதிபதி பெண்களுக்குச் சார்பாகவே நடக்க வேண்டும் எனும்படியாக சட்டம் எழுதப்பட்டுள்ளது என்றாலும் அவர்கள் முடிந்தளவுக்கு கொஞ்சமாவது சமநிலையைப் பேண முயல்வார்கள். அதேநேரம் பெண்களுக்கு ஒரு நல்ல தொகையை செட்டில்மெண்டாக வாங்கிக் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் அவர்கள் மனத்தில் இருக்கும். உங்கள் வக்கீலோ அவர்கள் வக்கீலோ அவர்களும் அதை நோக்கியே வழக்கைச் செலுத்துவார்கள். இது புரிய சில மாதங்கள் நமக்கு எடுக்கும். நீங்கள் பேரத்துக்கு மசியாவிட்டால் மாதம் ஜீவனாம்சம், மாதாமாதம் இரண்டு முறைகள் ஆஜராவது, அது இதுவென வருடக்கணக்கில் அலைய விடுவார்கள். நீதிமன்றத்திலேயே கணவனை மனைவின் தரப்பினர் அசிங்கப்படுத்துவது, அடிப்பது வரை நடக்கும். நீதிபதி "பாத்து பாத்து" எனும் கணக்கில் அமைதிப்படுத்துவார். கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டார். பெண்கள் தம் மனத்தில் உள்ள வலியை வெளிப்படுத்த சமூகத்தில் வேறு இடமில்லையே என ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கும். ஆனால் வலியை வெளிப்படுத்துவது கூட பணத்தைக் கறக்கத்தான். நீங்கள் முதல் நாளே ஒரு பெரும் தொகையைத் தூக்கி அடித்தால் இந்த டிராமா எல்லாம் இருக்காது. (கவனிக்கவும்: இது என் அனுபவம் அல்ல, நான் நேரடியாகப் பார்த்ததைச் சொல்கிறேன்.)
என் சேமிப்பெல்லாம் கரைந்த பின்னர்தான் நான் உண்மையைப் புரிந்துகொண்டு உஷாரானேன். இப்போது வக்கீல் பத்து கைகளையும் நீட்டி “லட்சம் கொடு” “லட்சம் கொடு” எனக் கண்களை உருட்டி நாக்கைத் துருத்திக் கேட்டுக் கொண்டிருந்தார். கொடுக்காவிட்டால் அவர் வேறு எந்த மனுவையும் சமர்ப்பிக்க மாட்டார். கிடப்பில் போட்டுவிடுவார். இப்படியே சில நாட்கள் இழுத்தடித்தார்கள். அவரது ஜூனியர்கள் வருவது நின்று போனது. நான் போய் நீதிமன்றத்தில் நிற்பேன். நீதிபதி “உங்கள் வக்கீல் எங்கே?” என்பார். நான் தெரியவில்லை என்பேன். அவர் என்னை லேசாக மிரட்டிவிட்டு அனுப்பிவிடுவார். இப்படியே சில வாரங்கள் கடந்தபோது எனக்கு மொத்த பயமும் போய் விட்டிருந்தது. உலகிலேயே சிறந்த வேலை குடும்ப நல வக்கீல் ஆவதுதான் என்று கூடத் தோன்றியது. அதேநேரம் இப்படி நம்பித்தான் அந்தப் பிரதேசம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரள்திரளாகக் கறுப்புச் சிறகுகளைப் பறக்கவிட்டு நடக்கிறார்கள் எனவும் புரிந்தது. எல்லாருக்கும் சோறு போட நம் நாட்டில் விவாகரத்துகள் 75% மேல் உயர வேண்டும், நான் வக்கீல் ஆனால் விவாகரத்துகளைப் பெருக்குவதற்காக தனி நிறுவனம் ஆரம்பித்து மார்க்கெட்டிங் ஆட்களை நியமிப்பேன் என்றெல்லாம் நினைத்தாலும் உடனடியாக ஒரு வக்கீலைப் பிடிக்க வேண்டுமெனத் தேடத் தொடங்கினேன். இளம் வக்கீல்கள் சிலர் மாட்டினாலும் அவர்களும் எடுத்த எடுப்பிலேயே அதானி லெவலில் பேசினார்கள். எல்லாருமே ஒரே வழக்கில் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் எனப் புரிந்ததால் என் தொடர்புகளை வைத்து விசாரித்தேன். நண்பரும் எழுத்தாளருமான இரா. முருகவேள்தான் உதவினார். அவருடன் அப்போதெல்லாம் அநேகமாக தினமும் போனில் வழக்கைப் பற்றிப் பேசுவேன். எல்லா மார்க்ஸியவாதிகளையும் போல அவர் நடைமுறைச் சிக்கல்களில் கவனம் கொண்டவர். அவர் என்னிடம் “நீங்க வக்கீல் உங்களைப் பிரதிநுத்துவப்படுத்துவததற்கான படிவத்தில் ஒப்பமிட்டுக் கொடுத்தீர்களா?” எனக் கேட்டார். “இல்லையே. அதென்ன?” அவர் என்னை நன்றாக யோசித்துப் பார்க்கச் சொன்னார். கொடுத்திருந்தால் அதை வைத்து வக்கீல் என்னை நீதிபதியிடம் போட்டுக் கொடுத்துப் பிரச்சினை பண்ணுவார், என் வக்கீல் அப்படியானவர்தான் என்றார். நான் வீட்டுக்குப் போய் நிறைய யோசித்து இல்லையென முடிவுக்கு வந்தேன். “அடுத்த முறை உங்களைப் பார்த்தால் கொடுப்பார். சைன் போடாதீங்க.” அவர் சொன்னதைப் போலவே அன்று நான் வழக்காடுமன்றத்தில் தனியே அமர்ந்திருக்கும்போது வக்கீலின் ஜூனியர் என்னிடம் ஒரு படிவத்துடன் வந்தார். எனக்குப் புரிந்துவிட்டது - அவர் கடந்த சில வாரங்களாகவே ஜூனியரை அனுப்பாமல் இருந்தது என்னைப் பயமுறுத்தவே. கூடவே கண்காணிப்பு வளையத்திலும் என்னை வைத்திருந்திருக்கிறார். நான் புதிய வக்கீலுக்காக விசாரிப்பது அவர் காதுக்குப் போய் விட்டது. உடனே உஷாராகப் படிவத்தில் ஒப்பம் பெற ஜூனியரை அனுப்பி விட்டார். நான் நினைத்தேன், “இவ்வளவு வேஷம் போட்டியே, கொண்டைய மறைக்கத் தெரியலையே.” நான் ஜூனியரிடம் ஒப்பமிட முடியாது என்றேன். “நாங்க பெறகு உங்களுக்காக வரவே மாட்டோம்” என்றெல்லாம் என்னை உருட்டி மிரட்டப் பார்த்தார். நான் அசரவில்லை. அதன் பிறகு அவர்கள் என் பக்கமே வரவில்லை.
நான் அடுத்து எந்த ஒரு வக்கீலையும் மொத்தக் குத்தகைக்கு எடுக்கக் கூடாது என முடிவெடுத்தேன். ஒவ்வொரு செஷனுக்கும் தனித்தனியாகப் பணம் கொடுக்கிறாற் போன்ற வக்கீலைக் கண்டடைந்தேன். அவர் ஒரு மார்க்ஸியர். சதா எதாவது ஒரு தர்ணாவிலோ மறியலிலோ இருப்பார். ஆனால் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். ஆஜர் என்று சொல்லிவிட்டு சில ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு ஒவ்வொரு தடவையும் ஐயாயிரம் வாங்கிக் கொள்வார். விசாரணைப் பகுதி ஆரம்பித்ததும் அதிகம் கேட்பார் எனத் தோன்றியது.
இதனிடையே நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன் - குடும்ப நல வழக்கில் வக்கீல் எல்லாம் வழக்குக்கு உதவ மாட்டார்கள். அவர்களுக்கு அதிகாரமும் தாக்கமும் குறைவு. எப்படியும் விவாகரத்து கொடுக்கத்தான் போகிறார்கள். தர மாட்டேன் என நான் பிடிவாதம் பிடித்தாலும் என்னதான் வாதிட்டாலும் எந்த நீதிபதியும் எதிர்த்தரப்பின் ஒப்புதல் இன்றி விவாகரத்து தரப் போவதில்லை. நம்மை இழுத்தடித்துத் துன்புறுத்துவதைத் தாண்டி நீதிபதிக்கும் எந்த அதிகாரமும் இல்லை (ஒருவேளை நீங்கள் ஜீவனாம்சம் கொடுக்காமல் வருடக்கணக்கில் இழுத்தடித்தால் மட்டும் சில மாதங்கள் சிறைக்கு அனுப்பும் அதிகாரம் உண்டு. அது பெரும்பாலும் நடப்பதில்லை.) அதாவது நீதிபதியையும் வக்கீலையும் விட எதிர்த்தரப்புடன் சமாதானம் பண்ணுவதே சாமர்த்தியம். உண்மையான பிரச்சினை நீதிமன்றத்திற்கு வருவோரை முதலில் பயந்து விடுகிறார்கள், அதைப் பயன்படுத்தி அங்குள்ளோர் இவர்களை ஒடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான். பயம் போய்விட்டால் பிறகு அங்கு எதுவுமே சிக்கல் இல்லை. ஜீவனாம்சம் கூட நமது சம்பளத்தில் ஒரு பகுதிதான் (25-30%). அதையும் முடிந்தளவுக்குக் கொடுக்கலாம், சில மாதங்கள் கொடுக்காவிட்டாலும் ஒன்றும் ஆகாது. மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள். மொத்தமாகக் கொடுக்கலாம். கூடுதல் காலம் கேட்கலாம். அடுத்த திருமணம் செய்யாதவரைக்கும் இது சிக்கலாகாது. ஜீவனாம்சம் கொடுத்து வீட்டு வாடகையையும் சமாளிக்க இயலாவிடில் எதாவது பார்ட் டைம் செய்து சமாளிக்க வேண்டியதுதான். இம்மாதிரி தைரியம் வந்துவிட்டால் “அடப்போடா” எனக் கூலாக இருந்துவிடலாம். அதை விட செட்டில்மெண்ட் நல்லது. விவாகரத்தில் வழக்கு விசாரணைக் கட்டத்துக்குப் போவதுகூட சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆர் பாட்டுப் பாடுவதைப் போல, ஆதவ் திமுகவை சீண்டுவதைப் போல நேர வீணடிப்புதான். அதனால் இரு தரப்புகளுக்கும் பயனில்லை.
சரி செட்டில்மெண்டு என வந்துவிட்டால் வக்கீல்களைக் குறுக்கே விடக் கூடாது என்றும் நான் அங்கிருந்த நாட்களில் பலரிடமும் பேசித் தெரிந்துகொண்டேன். ஏனெனில் நம் தரப்பு வக்கீல் கூட செட்டில்மெண்ட் என வந்ததும் தனக்கு எவ்வளவு லாபம் என்றே யோசிப்பார். இழுத்தடிப்பார். ஆகையால் நான் நேராகவே எதிர்த்தரப்பு வக்கீலைப் போய்ப் பார்த்து செட்டில்மெண்ட் தொகையைக் குறைக்கக் கேட்டேன். அவர் ஒவ்வொரு நாளும் என் முன்னாள் மனைவியிடம் கேட்டு ஒரு தொகையைச் சொல்வார். நான் பேரம் பேசுவேன். பணம் தான் கைவசம் இல்லை. அவர்கள் என்னிடம் நிறைய இருப்பதாக நினைத்து விட்டார்கள் போல. நான் வங்கியில் கடன் வாங்கினேன். அதைக் கூட அவர்கள் நம்பவில்லை. வாடகை, செலவுகள் போக என்னிடம் எஞ்சும் பணத்தைச் சேர்த்து வைத்தால் கூட அவர்கள் எதிர்பார்த்த தொகையைக் கொடுக்க எனக்கு 20-25 வருடங்கள் ஆகும். நான் ஊரில் இருக்கும்போது என் அம்மா எனக்கு அளித்திருந்த தங்க ஆபரணங்களைக் கையோடு எடுத்து வந்திருந்தால் அவற்றை விற்றுக் கொடுத்திருக்கலாம். பாதி பணமாவது கிடைத்திருக்கும். ஆனால் பாருங்கள் அவை என் கையில் இல்லை. நான் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன்: அடுத்த சில ஆண்டுகள் இப்படியே அலைவதானால் அதற்கு விடுதி வாடகை, பேருந்து செலவு, ஆட்டோ செலவு, லாஸ் ஆப் பே செலவு, வக்கீல் செலவு எவ்வளவு ஆகும்? அதுவே செட்டில்மெண்டுக்கு முக்கால்வாசி வந்துவிடும். அப்படியும் கடைசியில் 13 ஆண்டுகள் பாண்டவர்கள் மறைந்தும் காட்டிலுமாக வாழ்ந்து கழித்தபின் வரும்போது துரியோதனன் நாட்டைத் திரும்பத் தர முடியாது எனச் சொல்லிட யுதிஷ்டிரரர் “அப்போ யுத்தம்தான்” என முடிவெடுக்க இதுக்கு அப்பவே சண்டைக்குப் போகலாமுன்னு நான் சொன்னேன் என்று பீமன் நினைப்பதைப் போலத்தான் ஆகும். எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இதே விவாகரத்து ஜீவனாம்சத்துடன் முடிவும். அதற்கு இப்போதே கொடுத்துப் பெற்றுவிடலாமே. வாழ்க்கையில் நான் முதன்முதலாகக் கடன் வாங்கலாம் என முடிவெடுத்தேன். பணம் என்னிடம் வந்ததும் எல்லாமே சுலபமாகி விட்டது. அதாவது கடனைப் பாதி அடைக்கவே நான் பட்டப் பாட்டையெல்லாம் தனி பாட்டாகவே எழுதலாம். அவ்வளவு துன்பங்கள்.
இதையெல்லாம் சொல்லிவிட்டு “வக்கீல்கள் ஓவர் ரேட்டட். முடிந்தளவுக்கு மனைவியுடனோ அவரது தரப்பு ஆட்களிடமோ நீங்களே பேச முயலுங்கள். வக்கீலுக்குக் கொடுக்கும் பணத்தை அவர்களுக்குக் கொடுங்கள்” என்றேன்.
கருத்துகள்