முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்



 வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 

அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் பேசத்தான் முயன்றேன். சொற்கள் தொண்டையைத் தாண்டி வரவில்லை. கைகள் நடுங்க போனை எடுத்து வேலைக்காரியின் எண்ணை மீண்டும் அழைக்க முயன்றேன். ஆனால் என் விரல்கள் வேறு செயலிகளைத் திறந்தன. போனை மூடிவிட்டு மூச்சை இழுத்துவிட்டேன். மனைவியின் மூக்கின் கீழ் உதடுகளுக்கு மேல் அந்தப் பிளவு அழகாக இருந்ததை, அவளது உதட்டின் வலப்பக்கம் மேலாக உள்ள ஒரு மச்சம் அவளது நிறத்தை எடுப்பாகக் காட்டியதை ரசித்தேன். மோவாயின் மஞ்சள் மென்மயிர்கள். சில வினாடிகள் அவளைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல என் உடல் துடித்தது. அவள் தன்னுணர்வு பெற்று தன் அழகை இழந்து என்னை முறைத்து என் அருவருப்புணர்வைத் தூண்டிவிட்டு கிழவியிடம் சென்று பேச்சுக் கொடுத்தாள். ஒரு மகத்தான தருணம் மலரும்போது அதை அப்படியே நிலைகொள்ள வைக்காமல் பறித்து வீச பெண்களால் மட்டுமே முடியும். அவர்கள் எப்போது நடைமுறை உலகிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் அவளது இயல்பான உடல்மொழி எனக்கு நடுக்கத்தை வரவழைத்தது. ஏனென்றால் ஒரு பக்கம் மனதுக்குள் இவ்வளவு கிளர்ச்சி ஏற்படும்போது உடல் இன்னொரு பக்கம் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. அவள் தனக்குத் தெரிந்த தெலுங்கில் கிழவியுடன் இயல்பாக உரையாடி அவரது மகள் எங்கே என்று விசாரிக்க அவரோ அவள் சித்தூரில் தன் கணவனுடன் இருக்கிறாள் என்கிறார். அவள் ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் நான் தான் வருகிறேனே என்கிறார். இல்லை, நீங்கள் தான் வரவில்லையே, அவள் தானே வந்து கொண்டிருந்தாள் என்றால் அவர் கேலியாகச் சிரித்துவிட்டு அவள் எங்கே வந்தாள் என்று திரும்பக் கேட்கிறார். என் மனைவி இவரிடம் இதற்கு மேல் பேசினால் வேலைக்கு ஆகாது என்று அண்டை வீட்டாரின் எண்களுக்கு அழைத்து விசாரிக்கிறாள். அவர்கள் தம் வீட்டுக்குக் கிழவியே வேலைக்கு வருவதாகச் சொல்கிறார்கள். போச்சு, எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

அவர் நெருப்பு வைத்துக் கொளுத்தி இறந்து போயிருந்த நிலையில் அவரது மகள் சித்தூரில் இருந்து வந்து அழுது தீர்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து வேலையைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உள்ளே வந்தது இன்று நேற்றல்ல ஐந்தாண்டுகளுக்கு முன் என அவரிடம் சொன்னபோது அவர் என்ன பேசுவது எனத் தெரியாமல் திகைத்துவிட்டு தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த சின்ன பட்டன் போனை எடுத்து என் மனைவி ஐந்தாண்டுகளுக்கு முன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றைக் காட்டினார். அதில் சனிக்கிழமை மாலையில், அதாவது அன்றைய தினம் மாலையில், வெளியே போவதால் அவர் காலையிலே வந்து வேலையை முடித்துவிட்டுப் போல வேண்டும் என ஆங்கில லிபியில் உடைந்த தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது. அது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி என்று என் மனைவி சொன்னதும் அவர் என்னைப் பார்த்து “இந்தப் பாத்திரங்களை எல்லாம் என்ன பண்ணுறது? தேச்சுதானே ஆகணும் சொல்லுங்க?” என்றார். என்னால் மறுக்க முடியவில்லை. தேதியில் என்ன இருக்கிறது? மேலும் அந்தச் சேதி அனுப்பப்பட்ட தேதியானது கிழவி இறந்ததற்கு சில மாதங்கள் முன்புதானே. அவர் வேலை செய்து முடிக்க இன்னும் சில காலம் மிச்சம் உள்ளதே. நான் இதை நினைத்து அவரிடம் சொல்லும் முன்பு என் மனைவி சிறிது பணத்தை எடுத்து வந்து கிழவியிடம் கொடுத்து “நீங்க காசு தேவைப்பட்டா வாங்க, நாங்க தேச்சுக்கிறேன், கிளம்புங்க” என்றாள். 

என்னுடைய பயம்தான் என்னை அப்படிச் சொல்ல வைத்திருக்க வேண்டும், என் மனைவி செய்ததுதான் சரி. ஆனாலும் இத்தனை வீடுகளில் அவர் போய் வேலை செய்வது எப்படி இவ்வளவு இயல்பாக நடக்க முடியும், எங்களைப் போல அவர்களும் கிழவியைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும், கிழவியின் மகள் திரும்ப வந்திருப்பாள், அப்படி நடக்கவில்லை, எதுவே பிசகி விட்டது என்று நினைத்தேன். இன்னொரு பக்கம், கிழவி தன் மகளை விட நன்றாக வேலை பார்ப்பார், ஒழுங்காக வருவார், அவரே வரட்டுமே என அண்டை வீட்டார் நினைக்கக் கூடும், அதிலொன்றும் தவறில்லையே என்றும் தோன்றியது. மேலும், யார் எப்போது இறந்தார்கள் என்பதைக் கணக்கு வைத்துக் கொள்ள யாருக்கு நேரமிருக்கிறது, வேலை நடந்தால் போதாதா?      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...