தவெகவின் கிறிஸ்தவ சார்பு அரசியல் போலியான மிகைப்படுத்த்தப்பட்ட ஒன்று. அது ஒரு காட்சி அரசியல் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் தவெக அரசு கூட நிற்காது. ஏனென்றால் அது அவர்களுடைய கொள்கையே அல்ல. விவிலியத்தைக் கையில் சுமக்காத, ஜோசப், ஜேம்ஸ் என்றல்லாம் பெயர் வைத்துக் கொள்ளாதவர்களே உண்மையில் அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள்.
இந்த சிறுபான்மை பிம்பம் தமிழ்நாட்டு அரசியலில் மதத்தை ஒரு முக்கிய அலகாக்குவதற்காக பாஜகவால் மறைமுகமாகக் கொண்டு வரப்படுவது எனக் கூறப்படுவது உண்மைதான் - ஏனெனில் பல நேர்முகங்களில் இந்துத்துவர்களே இதை ஆதரிக்கிறார்கள். மதச்சின்னங்களை சட்டப்பேரவையில் பயன்படுத்துவது அவரவர் உரிமை என்கிறார்கள். இது ஒரு வெறுப்பரசியலை ஏற்படுத்தினால் அதைப் பின்னர் தம்மால் அறுவடை பண்ண முடியும் என நினைக்கிறார்கள். ஏனெனில் இதே கூட்டத்தினர்தாம் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ லாபி அரசியல் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். அடுத்து விஜய்யே செய்யும்போது நாங்கள் ஏன் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது எனக் கேட்பார்கள். முதலில் இப்படித்தான் முருகன், வேல் என்று எதையோ தூக்கி வந்தார்கள். எடுபடவில்லை. இப்போது சிலுவையைத் தூக்கி வருகிறார்கள். இதன் பிறகு மொழியளவிலும் சாதியடிப்படையில் நடிகர்களை இறக்கிவிட்டு வாக்காளர்களைப் பிரிப்பார்கள். திராவிட இனம் எனும் அடையாளத்தின் கீழ் மக்கள் இணையக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு.
இதெல்லாம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்படும்போது இன்னொரு பக்கம் பாஜக தலைமை ஒன்றிய அரசில் பெரும் சரிவைச் சந்திக்கிறது. தமிழ்நாட்டிலும் விஜய் வென்றுவிட்டதால் பாஜக நினைப்பதெல்லாம் அடுத்தடுத்து நடக்கப் போகிறது எனப் பொருளில்லை. ஏனெனில் இங்கு வெற்றி கண்டுள்ள கருத்தியலுக்கு இரு நூற்றாண்டுகளின் வரலாறு உள்ளது. அதை சில முதலீட்டாளர்களும் ஊடலாவியாளர்களும் ரசிகர் மன்றங்களும் தேவாலய லாபியும் சேர்ந்து சில வருடங்களில் மாற்றிவிட முடியாது.
கருத்துகள்