முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னிப்பு கேள் மானிடா


 

பிரதமர் மோடியின் காணொளியொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அதில் அவர் தேர்வுத்தாள் கசிவைக் குறித்து கவலை தெரிவித்து என்னென்னமோ பேசியிருந்தார். ஒரு பக்கம் மனம் கசியப் பேசிவிட்டு இன்னொரு பக்கம் போலிசாரை விட்டு மாணவர்களை அவர் பெல்லட் குண்டு தாக்குதல், லத்தி சார்ஜ் பண்ணியதால் இந்த அணுக்கம் காட்டும் காணொளி அவரை இளைஞர்களிடம் இருந்து அகலத் துரத்தியது. அவர்கள் இவரை பயங்கரமாகக் கலாய்த்து டுரோல் பண்ண "பிராண்ட்ஸ்" எனும் அவரது அழைப்பு தேசிய கேலிச் சொல்லானது. இந்த களேபரத்துக்கு இடையில்தான் பேஸ்புக் இரவு 12: 30க்கும் காலை 5 மணிக்கும் இடையில் அவரது காணொளியைத் தூக்கியது. இது தற்செயலாக நடந்த ஒரு தொழில்நுட்பப் பிழை என்று மெட்டா நிர்வாகம் விளக்கம் அளித்தாலும் பாஜக அதை ஏற்காமல் இம்மாதம் 3ஆம் தேதி மெட்டா நிர்வாகிகளை அழைத்து இன்னும் மூன்று நாட்களுக்குள் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பேஸ்புக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்க்கிறார்கள். அந்த நள்ளிரவு வேளை அவரது காணொளி காணாமல் போனதால் என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்க முடியும்? அதை ஒரேயடியாகத் தூக்கியிருந்தால் அவரது பெயர் கெடாமல் காப்பாற்றியிருக்கலாமே. இதை ஏன் பெரிது பண்ணுகிறார்கள்?

இரண்டு காரணங்கள்:
மோடி ரொம்ப தொட்டாற்சிணுங்கி மனிதர். அவர் மட்டுமல்ல எல்லா சர்வாதிகாரிகளும் அப்படித்தான். இளைஞர்கள் தன்னை அவமதித்து நிராகரித்த கோபத்தை இங்கு கொட்டுகிறார். அதாவது முகம் சரியில்லை என கண்ணாடியை உடைப்பதைப் போல.
இன்ஸ்டாவில் எப்படி கரப்பான்களுக்கும் புதிய போராட்ட அமைப்புகளுக்கும் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பின்தொடர்வோரை அளிக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். அதாவது இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்து 25 மில்லியன் பின் தொடர்வோர் என்றால் இந்த இளைஞர்களுக்கு எப்படி 27 மில்லியன் வர முடியும் என்பது அவர்களை உறுத்துகிறது. எந்தப் புது டிரெண்ட், அமைப்பு வந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்விதம் இன்ஸ்டா அல்காரிதம் உள்ளது பாஜகவுக்குப் பிடிக்கவில்லை. இதையும் கண்டித்திருக்கிறார்கள்.
இளைஞர்கள் ஒரு கடுப்பில் இதிலெல்லாம் சேர்ந்து டிரெண்ட்டிங் செய்கிறார்கள், அவர்களுக்கு வழமையான அரசியல் அந்நியமாகத் தெரிகிறது என்பது நிஜமான பிரச்சினைதான். ஆனால் அதற்குத் தீர்வு சமூகவலைதளத்தை ஒரு கட்சி தன் பிரச்சார தளமாக மட்டும் இருக்க வேண்டும், தனக்குப் பிடிக்காதவர்களைத் தடை செய்ய வேண்டும், அல்காரிதமை அவர்களுக்கு எதிராகவும் தமக்குச் சாதகமாகவும் மாற்ற வேண்டும் எனக் கேட்பதல்ல. அப்படி நடந்தால் கோடி மீடியா போல மெட்டாவும் படுத்துவிடும். இளைஞர்கள் புதிய இணைய வெளிகளைத் தேடுவார்கள்.
அதாவது அமெரிக்கார்கள் தமக்கு எதிராக எதையோ செய்கிறார்கள் என பாஜக நம்புகிறது. எப்போதெல்லாம் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வருமோ அப்போதெல்லாம் இப்படி ஒன்று நடக்கும், இப்படியான குற்றச்சாட்டுகள் எழுமெனச் சொல்வார்கள். இம்முறை என்ன நடக்குமெனப் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...