முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொந்தரவில்லாத ரைட்டர்

 

யாருக்கும் தொந்தரவு கொடுக்காத விதம் ரைட்டர்கள் இருப்பது நல்லது என ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'தொந்தரவு' என்றால் என்னவென்று நான் கேட்டபோது அவர் கருத்து சொல்வது, மறுப்பது, எதிர்ப்பது, கேள்வி கேட்பது, மோதல் அணுகுமுறையைக் கொள்வது, கருத்தாதிக்கம் செய்வது என்றார். எனக்கு அவர் சொல்வதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது - எல்லாருக்கும் அடக்கமாக ஒருவர் இருக்கும்போது அவரால் வாசகர்களுக்கோ சூழலுக்கோ பயன் குறைவுதான். ஆனால் அவர் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகிறார். நமது கூட்டங்களில் இன்று அத்தகையோரின் தேவையே அதிகம். இதைத் தவறென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இன்று இலக்கிய கூட்டங்கள் ஒருவித சமூகமாக்கல் தளங்களாகி விட்டன. லயன்ஸ் கிளப், நண்பர்கள் சந்திப்பு, சட்டசபை எல்லாமே இப்படி ஆகிவிட்டது. இலக்கியக் கூட்டங்களும் மேற்தட்டு, மேல்மத்திய சமூகத்தினர் வரும் இடமாகையால் அங்கும் அவரவர் வந்து தத்தமது அனுபவங்களைச் சொல்கிறார்கள். அதைத் தாண்டி பிற படைப்புகளை விமர்சிப்பது, கருத்துக்களைச் சொல்வது, மதிப்பீடுகளை வெளிப்படுத்துவது, விவாதிப்பது அனுமதிக்கப்படுவது இல்லை. இதை நான் கற்பனையாகச் சொல்வதில்லை - நீங்கள் இன்று நிகழும் கருத்தரங்குகள், கூட்டங்களில் தரப்படும் தலைப்புகளைப் பார்த்தால் புரியும். நீங்கள் சட்டசபையை எடுத்துக் கொள்ளுங்கள்: அங்கு rhetoric, polemics போன்ற அரசியல் கருவிகளை இப்போது பிரபாகர் அனுமதிப்பதில்லை. உடனே மைகை அணைத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார் ('நடிகர்' என்பதால் விஜய்க்கு மட்டுமே விதிவிலக்கு). பாராளுமன்றத்தில் கூட ராகுல் காந்தி இந்துத்துவர்களை இடியட்ஸ் எனக் கலாய்க்கும் ஜோக்கைச் சொன்னார். தமிழ்நாட்டில் அது முடியாது.
கார்ப்பரேட் பாணியில் நடக்காத கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கு என்றாலும் பொதுவாக இன்று மலர்ந்து வரும் ஒரு சூழலைப் பற்றிச் சொன்னேன். இங்கு தொந்தரவில்லாத எழுத்தாளர்களே வரவேற்கப்படுகிறார்கள். தொந்தரவுக்கு இன்னொரு பொருள் தீவிரமான கருத்தியல், தத்துவம் பேசுவது, கலைச்சொற்களைப் பயன்படுத்துவது. வாழ்க்கையில் எதையுமே படிக்காமல் பப்புக்கு வருவதைப் போன்ற தோரணையில் சதா போனில் டூம் ஸ்குரோல் பண்ணிக் கொண்டு கூட்டத்துக்கு வருவோர் தாம் பொழுதுபோக்குவதற்கான ஒரு அர்த்தபூர்வமான பொழிப்புரைகளையும், ஸ்டான்ட் அப் காமிடிகளையுமே விரும்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒரு அயல்நாட்டுப் படைப்பாளியின் பெயரையோ ஒரு கோட்பாட்டாளரின் பெயரையோ குறிப்பிட்டால் பயந்து போவார்கள் என பேசுவோரும் ஒருங்கிணைப்பாளர்களும் நினைக்கிறார்கள். அதாவது குறிப்பிட்டாலும் அதையும் அவர்கள் தம் மூளையைக் கசக்காமல் ரத்தத்தைக் கொதிக்க வைக்காமல் லைட்டாக நைசாக அது இருக்க வேண்டும்.
இவர்களுக்கு ஏற்ப இன்று கூட்டங்களும் திட்டமிடல்களும் லாபியிங்கும் மாறிவிட்டன. எனக்கு இதைப் பார்க்கையில் மற்றொன்று நினைவுக்கு வந்தது - தாராளவாத முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளின் வீழ்ச்சியின் மற்றொரு பரிமாணம்தான் நாம் இன்று காணும் கணிசமான கூட்டங்கள். அங்கு status quoவை கேள்வி கேட்பது, விவாதிப்பது, யோசிப்பது அராஜகமாகக் கருதப்படும். நம் கண்முன்னாலே தமிழ் தீவிர இலக்கியச் சூழல் தொழில்முனைவோர் கூட்டம் போல மாறிவிட்டது.
இத்தொழில் முனைவோருக்கு என்று தரகர்களும் வந்துவிட்டார்கள். அவர்களும் தொந்தரவின்மையின் கொள்கை விளக்குகளாக இருப்பார்கள். அவர்கள் இருக்குமிடமே தெரியாது. எழுதவே மாட்டார்கள். ஆனால் இடங்களிலும் இருப்பார்கள். அவர்களிடம் போய் தொழில்முனைவோர் பேசி நல்ல பெயர் வாங்கினால் டக்கென வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போவார்கள்.
இதனால் எல்லாம் என்ன பயன் என்றால் பொதுவாக பார்ட்டிகளால் என்ன பயன்? இவை மேலோட்டமாக சமூகத்தின் மேல்தளத்தில் நடந்து கொண்டே இருக்கும். கேரளாவில் சில எழுத்தாளர்கள் ஜனவரி மாதம் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள காரில் ஏறி நட்சத்திர ஓட்டலில் தங்கினார் என்றால் டிசம்பரில்தான் வீட்டுக்குத் திரும்பி வருவார் எனச் சொல்வார்கள். இப்படியே வருடக்கணக்கில் சுற்றிக் கொண்டு ஒரே தலைப்பில் உரையாடிக் கொண்டு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எப்படியாவது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டு இருப்பார்கள். இதற்கும் இலக்கியத்துக்கும் சம்மந்தமில்லை. இதெல்லாம் ஒரு ஜாலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...