பாலன் எனும் சிறுவன் (Balan the Boy) படத்தின் முதற்பாதியை நேற்றுப் பார்த்து சற்று மனம் உடைந்து போனேன். உணர்வளவில் அப்படம் என்னை வெகுவாகத் தொந்தரவு பண்ணியது. அதைக் கசப்பென்றோ அவல உணர்வென்றோ சொல்ல முடியாது. நாம் கைவிடப்பட்டவர்களின் கதையைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். ஆனால் இது துரத்தப்படுகிற அச்சத்தால் எங்குமே - உறவுகள், தனிமனித அடையாளம், நிலம், நினைவுகள் - நிலைக்க முடியாதவர்களின் கதை. இதைத் துன்பம் என்று வரையறுக்க முடியாது என்பதுதான் இதை இன்னும் பயங்கரமாக்குகிறது என நினைக்கிறேன். துன்பத்தில் ஒரு மானுட அம்சம் உண்டு. இப்படத்தில் முழுக்க முழுக்க அச்சம் மட்டுமே உள்ளது. அதுவும் பார்வையாளர்கள் உணரும் திகிலுணர்ச்சியின் அச்சம் அல்ல. இது பாத்திரங்கள் தம் அகத்தே உணரும் அச்சத்தையும், அதை மட்டுமே உணர்ந்து வாழ்தலையும் பேசுகிறது.
இதில் வரும் குழந்தைக்கு ஆபத்தில் இருந்து தப்பக்க சின்னச்சின்ன தந்திரங்களை அம்மா சொல்லித் தருகிறாள். யாரிடமும் பேசாமல் இருப்பது. உண்மையை முழுமையாக மறைப்பது. தன்னை அடையாளமற்றவனாக ஆக்கிக் கொள்வது. தன் அம்மா தன்னை அழைத்துப் போக வரவில்லை என உணரும் அவன் தன்னைப் பற்றி மக்கள் விசாரிக்கிறார்கள் என உணர்ந்ததுமே தன் சட்டையையும் நிக்கரையும் கழற்றி பையில் வைத்து பின்னால் உள்ள புதரில் வீசிவிட்டு வெறும் ஜட்டியுடன் நிற்கிறான். யார் விசாரித்தாலும் எதையும் சொல்ல மறுக்கிறான். பின்னர் ஒரு போலீஸ்காரர் அந்தப் பையை அவனுக்குப் பின்னாலே கண்டுபிடிக்கிறார். இப்படி அவன் செய்யும் சின்னச்சின்ன தந்திரங்கள் பொய்க்கும்போது அவனது களங்கமின்மையும் பலவீனமும் நம்மை இன்னும் அச்சுறுத்துகிறது. பேயறைந்தாற் போன்ற பாவனையைச் சுமந்த அந்த அம்மாவின் விழிகளை மறக்கவே முடியவில்லை.
படத்தில் ஒரு மனநலமழிந்த பெண் வருகிறார். அவரை நாயகி ஒரு பேருந்து நிலையத்தில் கண்டு அவரது அடையாள அட்டையைத் திருடிக் கொள்கிறார். கிட்டத்தட்ட அவருக்கு வெகு அருகில் மனதளவில் இருக்கிற பெண்ணாகவே இவரும் இருக்கிறார். ஆனால் நாம் சினிமாவில் பார்க்கிற மனநலமற்றவர்களைப் போல் அல்லாமல் இவர் அபலையாகக் காட்டப்படவில்லை. கொடூரமாகச் சிந்திக்கவும் அதர்க்கமாகவும் நடந்துகொள்ளவும் கூடியவர். இரவில் உறக்கத்தில் திடுக்கிட்டு விழிக்க தலையணையில் காதருகே பெரிய சிலந்தியொன்று படர்ந்து நிற்பதைப் போன்ற உணர்வு அவரை நினைக்கையில் வருகிறது.
நான் பார்த்தவரைக்கும், இதனாலே இப்படம் நல்ல படமா என்று சொல்லத் தெரியவில்லை. சில கொடூரமான தனிமனிதக் குற்றங்களைப் பற்றிப் படிக்கையிலோ காட்சிகளைப் பார்க்கையிலோ ஏற்படும் உணர்வையே இப்படமும் தருகிறது. எதுவோ ஒன்று இதை முழுக்க உண்மையாக்காமல் தடுக்கிறது. ஒரு நாவலில் பேசுவதற்குத் தோதான விசயத்தை சிந்தனையோட்டமோ உணர்வுத் தடுமாற்றங்களோ இன்றி திரைக்கதை நுட்பங்களின் வழியாக மட்டுமே திரையில் காட்டுவதால் வருகிற சிக்கலா? சிந்தனையோ நினைவோ அற்ற விலங்காக இருவரையும் மாற்றுவதால் வருகிற பிரச்சினையா? மனிதன் விலங்கு அல்லன், அவன் மனநிலை சீர்குலையும்போது கூட விலங்கு அல்லன் என்று நமது ஆழ்மனது சொல்வதால் இப்படம் அதிகம் தொந்தரவு பண்ணுகிறதா?
பாதிக்கே இந்தக் கதி. மிச்சத்தை இன்று பார்க்கப் போகிறேன். அதன் பிறகு தோன்றுவதைப் பின்னர் எழுதுகிறேன்.
கருத்துகள்