முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓரு கனவு வேண்டும்




கனவுகள் என்னை
கடித்து பிராண்டியும் விளையாடியும் தொந்தரவு செய்கின்றன
துரத்துகின்றன.
வால் துடிக்க
சில பொழுது
கருமணி விழிகளால்
மெழுகாய் பேசுகின்றன

நான் பேச ஆரம்பிக்கையில் கனவுகள்
பிரக்ஞையின் குறிப்புகளை ஒரு நீள் கோடாய் இழுத்து சுற்றுகின்றன
பின்னர் அவை ஒரு தொடர் இசையாகின்றன
நான் பேச்சை நிறுத்துகையில்
கனவுகள் ஒரே வரியில் தொக்கின இசையின் மொழியில்
என்னை கேலி செய்கின்றன

இரக்கத்தால் அல்ல
அவை இறுதியில் விடைபெறுவது
எதேச்சையாய்
திருகி விட்ட பொம்மையை மறந்து போன குழந்தையை போல் அது நடக்கிறது

நான் யோசிக்கிறேன்
கனவுகள் ஒன்றா பலவையா என்று

எனக்கு வேண்டியது
கனவுகளற்ற ஒரு வெண் தூக்கமோ
ஆழ்மனதில் அலெயெழுப்பாமல் மிதந்து விழிப்பதோ
கண்டடைதலின் உற்சாகத்தில் கண் திறப்பதோ
மறதியை
வெகுநாள் பழகிய ஒரு இசைக்கருவியென
சுருதி சேர்ப்பதோ அல்ல.

துவங்கி முடிவதாக
மைய பகுதி அற்றதாக
ஒரு கனவு.
திரும்பிச் செல்ல வேண்டியிராததாக
அது இருக்கட்டும்.
நிஜத்தில், தொந்தரவு செய்பவை
மிகையான பிம்பங்களோ
விசித்திரமான எண்ண வெடிப்புகளோ
அல்ல -
நமதல்லாத
வீடோ உணவோ தேவையிராத
ஒரு மிருகம்
அவசர சந்தடிப் பாதையில்
நம்மை வழிமறிப்பது தான்.
என்னவென்ற சொல்ல முடியாவண்ணம்
அது சிதைவுற்று உள்ளது என்பதும்
இன்னும் வாழ்கிறது, சாவே இல்லை என்பதும் தான்

நமக்கு ஓர் கனவு வேண்டும்
அது இப்படியாக இருக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...