முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்குமே இல்லாத ஒரு முத்தம்




ஒரு கசப்பான முத்தம்
அவமானிப்புக்குரிய அறைதலை போல

நம் மீது
நம்மை சுற்றி
ஒரு மீட்டலின் அதிர்வலையை போல்
தொடர்கிறது
ஒரு ஈயைப் போல்
விடாமல் ரீங்கரிக்கிறது

அல்லது
அது
ஒரு அவமானிப்புக்குரிய அறைதலை விட
அதிக துன்பமானது
அதன் பக்கம்
நியாயங்களோ வெஞ்சினமோ இல்லை

அது ஒரு தண்டனை அல்ல
என்பதால்
கசப்பான முத்தம்
நம்மை
எளிதில் பலவீனப்படுத்துகிறது

நாம் கனத்த மூச்சுகளை விடுகிறோம்
உணவு கச்சிதமான சுவைகளற்று போகிறது
மிகையான மற்றொரு மொழியை பேசுகிறோம்
உண்மைகளை கத்தரித்து கையடக்கம் ஆக்குகிறோம்
வெறுப்பை உற்பத்தி செய்து மகிழ்ச்சி ஆகிறோம்
சிறுசிறு தேவைகளை பிரதானப்படுத்தி வாழ்கிறோம்
தனிமையை எளிதாக மறக்கிறோம்
ஒளியை பருகி இருட்டை மூச்சு விடுகிறோம்
முற்றுப் புள்ளிகள் அற்று எழுதப் பழகுகிறோம்

கசப்பான முத்தம் தருபவர்கள்
நம்மை அடிக்கவோ அரவணைக்கவோ
வலுவற்றவர்கள்
அவர்களிடம் பெருகும் அபரித அன்பே
கசப்பான முத்தமாக தரப்படுகிறது

அதை
வைத்துக் கொள்ளவோ மறுதலிக்கவோ
இருவராலும் முடிவதில்லை

கசப்பான முத்தத்திற்கு
ஒரு தருணம் உள்ளது
அதற்காக
இருவரும் காத்திருக்கிறோம்

கொடுத்து பெற்ற பின்
அது
நெடுடுநாள் காத்த தண்டனையை போல்
அந்நொடியில் எளிதாகி விடுகிறது

கசப்பான முத்தம்
ஒரு காயம் போல்
நம்முள்ளோ
சிலுவை போல்
நம் மீதோ
இருப்பதில்லை

அது வேறெதையோ போல்
வெளியில் இருந்து
நம் மீது
ரசவாதம் புரிகிறது

கசப்பான முத்தம்
எந்த உறவையும்
துவக்கவோ முடிக்கவோ ஏற்ற
சிறந்த பரிசு
தருபவர் குற்றவுணர்வோ
பெறுபவர் நீதியுணர்வோ
அடைவதில்லை

கசப்பான முத்தம் கிடைத்ததும்
பேசுவதோ கத்துவதோ அழுவதோ கூடாது
மிகச் சன்னமாய்
அல்லது சற்று மிகையாய்
புன்னகைக்க வேண்டும்
கைகளை நீட்டி
பட்டும்படாமல் அரவணைக்க வேண்டும்

அது கசப்பான முத்தத்தை -
எளிதாக்குகிறது
காத்திரமாக்குகிறது
ஸ்திரமாக்குகிறது
ஒரு நினைவை கூடுதலாக
சேர்க்கிறது.

அதுவரை கசப்பான முத்தம்
நடக்கப் போகும் ஒன்றைப் போல்
எங்குமே இல்லை

கருத்துகள்

போளூர் தயாநிதி இவ்வாறு கூறியுள்ளார்…
nice
aotspr இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கவிதை.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.