முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மண்ணைப் போல இருப்பது



“பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்”
- விக்கிரமாதித்யன்


மண்மாதிரி இருப்பது என விக்கிரமாதித்யன் சுரணைகெட்டத்தனத்தை குறிக்கிறார். எனக்கு இன்னொன்று தோன்றுகிறது.

மோகன்லாலின் வெற்றியை பற்றி குறிப்பிடும் போது இயக்குநர் பிரியதர்ஷன் அவருக்கு ஒரு அப்பாவித்தனமான முகம் வாய்த்தது அனுகூலம் என்கிறார். அந்த முகத்தை கொண்டு சீரியஸாக நடித்தாலும் நகைச்சுவை பண்ணினாலும் மக்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது. தமிழில் இது ரஜினிக்கும் பொருந்தும். அவர் பண்ணுகிற அதே ஸ்டைலை கமல் செய்தால் நமக்கு அது அலட்டலாக தோன்றி எரிச்சல் தருகிறது. எல்லாத்துக்கும் முகம் தான் காரணம்.

அன்றாட வாழ்விலும் இது போல் அப்பாவி முகம் கிடைத்தால் நல்லது. என்ன தான் கிரிமினல் வேலை பண்ணினாலும் ஜனம் சீக்கிரம் நம்பி விடும். எவ்வளவு தான் புத்திசாலியாய் இருந்தாலும் அது சட்டென்று வெளியே தோன்றினால் உடன் இருப்பவர்கள் நம்மை வெறுப்பார்கள். புத்திசாலித்தனத்தை மறைக்க கற்க வேண்டும். அதற்கென்று முகத்தை மாற்ற முடியாதல்லவா!

சராசரிகள் புத்திசாலிகளை பார்த்து அஞ்சுகிறார்கள். எதிரிகளை கூட விட்டு விடுவார்கள். ஆனால் உங்களை தேடி தேடி அழிப்பார்கள். அதனால் சராசரிகளால்  காரியம் ஆக வேண்டிய போது மண்ணைப் போல் இரு! அதற்குள் விதை, புதையல், கண்ணி வெடி என்னவேண்டுனாலும் இருக்கலாம். ஆனால் மேலாக மண்ணைப் போல் இரு.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
என்னவாக இருந்தாலும் மண்ணாகித்தான் தானே போகப்போகிறோம்...
Raja M இவ்வாறு கூறியுள்ளார்…
எட்டுத்திக்கும் சராசரிகள் சூழ்ந்திருக்க, தன் சுயத்தை நிறுத்திக் கொள்ள தத்தளிப்பவனின் கையறு நிலையைச் சுட்டும் பதிவு.

உங்கள் பதிவின் நனவோடையில் விக்கிரமாதித்தனின் கவிதையை நகர்த்திச் சென்ற பரிசோதனையின் அபத்த விளைவு வருமாறு.

முகம்

பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்


பூமியில்
பொய் பேசி
திருடி
வஞ்சனை செய்து
நன்றி கெட்டு
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்


பூமியில்
முட்டாள் உயரதிகாரியிடமும்
அகங்காரம் கொண்ட அரசியல்வாதியிடமும்
நாணயமற்ற வியாபாரியிடமும்
கருணையற்ற மருத்துவனிடமும்
அன்பில்லாத் துணையிடம்
கூட இருந்து
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்.

அன்புடன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...