முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்யபுத்திரனும் பேஸ்புக்கும்




ஒரு நண்பர் சொன்னார்: “மனுஷ்யபுத்திரனை ஒரு வாரம் பேஸ்புக் லாக் இன் பண்ணாமல் இருக்க சொல்லுங்க. அவதூறுகளில் நனையாமல் அப்ப தான் அவர் நிம்மதியாக இருப்பார்”. நான் நினைத்தேன்: “மனுஷ்யபுத்திரன் பேஸ்புக் வராமல் இருப்பதா? அது பேஸ்புக்கே ஷட்டரை இழுத்து மூடி விடுவது போல் அல்லவா? அதற்கு சூரியன் கிழக்கே உதிக்காமல் இருக்ணும், நிலா தோன்றாமல் இருக்கணும், ஜெயலலிதா கலைஞர் மாதிரி ஆகணும், கலைஞர் காமராஜர் மாதிரி ஆகணும்”. 


மேலும் தமிழ் முகநூலில் அவ்வளவு சுவாரஸ்யமான விவாதங்களை உருவாக்கிய நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அவர் ஏன் போகணும்? வசை தூற்றிக் கொண்டிருப்பவர்கள் அவரை விட்டு போனால் போதுமே?
ஆனால் முன்பு ஒரு காலம் இருந்தது. அப்போது மனுஷ்யபுத்திரன் முகநூலை எட்டி நின்று கவனித்துக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்பார்: “நீங்க பேஸ்புக்கில இருக்கீங்களா?”
“ஆமா இருக்கேன். பேருக்கு. அதில ஏதும் எழுத மாட்டேன்”
மனுஷ் சொல்வார்: “நானும் தான் பேஸ்புக்கில எல்லாத்திலயும் இருக்கிறேன் ஆனால் ஒண்ணும் எழுதறதில்ல. எல்லாத்திலயும் இருப்பேன். ஆனா இருக்க மாட்டேன்”.
அது வேறு ஒரு காலம்! அவர் அப்போது இன்னும் அதிக நிம்மதியாக இருந்தாரா? தெரியாது. ஆனால் சதா ஒரு பக்கம் ஜனங்களோடு இருப்பதை விரும்புகிறவர் என்பதால் பேஸ்புக் அவருக்கு நிறைய இணக்கமான பொழுதுகளை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே வித்தியாசம் கடந்த சில மாதங்களில் வேறு தலைவர்கள் மீதான வெறுப்பை வெளியே கொட்ட இவரை ஒரு மென் இலக்காக பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. எல்லாவற்றையும் எல்லோரையும் வரவேற்கும் மனிதர் என்பதால் கலைஞரை, இஸ்லாமியரை, சிறுபான்மையினரை, இன்ன பலரை நேரடியாக தாக்க முடியாதவர்கள் இவரை தங்களது அந்தரங்க வெறுப்புக் கிடங்காக பயன்படுத்துகிறார்கள். எல்லோருக்கும் அணுக்கமாக இருப்பதன் ஒரு சிக்கல் இது.
பேஸ்புக் நம் எல்லோருக்கும் போலவே மனுஷ்யபுத்திரனுக்கும் பலதரப்பட்ட புதிய மனிதர்களை சந்தித்து அறிகிற வாய்ப்பை தந்திருக்கும். ஒரே வித்தியாசம் நூற்றுக்கணக்கான முகமற்ற எதிரிகளை முகவரி மாற்றி அவர் வீட்டுப் பக்கம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. பொதுவாக எதிர்மறையான ஆட்கள் கசப்பானவர்களை பார்க்க பார்க்க உற்சாகமாவார்கள். மனுஷ்யபுத்திரனை போன்ற நேர்மறையானவர்கள் வெறுப்பை கக்குபவர்களை பார்த்து பார்த்து களைப்பாவார்கள். அவர் ரொம்ப களைத்துப் போயிருப்பார் என நினைக்கிறேன். முகமற்ற எதிரிகள் அவருக்கு கொஞ்ச ஓய்வு கொடுக்கலாமே!

கருத்துகள்

ஷாநவாஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
அவரைத் தாக்குவதற்கென்றே ஒரு முகப்பக்கம் உருவானதே ஒரு சாதனைதானே
அவரிடம் நெருக்கமான உரையாடலில்
இரு ந்தவர்கள் சிலரே என்னிடம் இவர் ஏன் இப்படி வம்பில் மாட்டிக்கொள்கிறார்
என்றார்கள் அவர்களால் அருதியிட்டு
சொல்வதெற்கென்று காரணங்கள் இல்லை
இப்படித்தான் சிலர் அன்பை காட்டுவார்கள்
என்று மனுஷ்யபுத்திரனே சொல்லக்கேட்டிருக்கிறேன்

ஜுனைத் ஹஸனி இவ்வாறு கூறியுள்ளார்…
பாவம்யா அவரு . இப்புடி உசுப்பி வுட்டே அவர ரணகளமாக்கிட்டீங்க.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாம் சரி, ஆனால் அவர் ஆரோக்கியமான எதிர் கருத்துகளை கூட எதிர்கொள்ள தயாராக இல்லை போல தெரிகிறது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இவர் என்ன சொன்னாலும் சரி என்று கூறுபவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை block செய்து விடுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, "இப்பேர்பட்ட மனிதர்களின் முகமூடியை கிழிக்கதான் போராடிக்கொண்டு இருக்கிறேன்" என ஒரு பதிவு போட்டிருந்தார். நானும் அப்படி என்ன போராடுகிறீர்கள், நான்கு தொலைக்காட்சியில் சென்று பேசினால் அதன் பெயர் போராட்டமா என்று கேட்டிருந்தேன், என்னை block செய்துவிட்டார்.

என்னுடைய கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அல்லது என்ன செய்கிறார் ,அல்லது தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு அவர்களைப் பற்றி தெரிய வைக்கிறேன் என கூறி இருக்கலாம், அதைவிடுத்து block செய்வது என்ன வகை பதில் என தெரியவில்லை.

அது அவருடைய சுவர், எந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும், யாரை block செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவருடைய விருப்பம், அதைப் பற்றி நான் கேள்வி கேட்க கூடாது என சொல்வீர்களேயானால் ,என் பதில் அவரை எதிர்த்து பதில் பதிவு செய்யும் நபர்களை ஓய்வெடுக்க சொல்லும் உரிமையும் உங்களுக்கில்லை என்பதுதான்,
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரை எப்படியாவது பயன்படுத்தி(அவரைப் படுத்தியோ, படுத்தாமலோ) ஒரு பதிவை போட்டால் அது கவனிக்கப்படும் வீதம் சற்று அதிகம் என்ற நம்பிக்கை முகநூலில் உலவிக் கொண்டிருக்கிறது. நான் கூட அதற்கு விலக்கல்ல... மிக அத்தியாவசிய தேவையில்லாமல் அவர் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை. ஆப்பிளைப் பார்த்து பேரிக்காய்களும் இலந்தைப் பழங்களும் அப்படித் தான் சொல்லிக் கொண்டிருக்கும். ஆப்பிள் ஆப்பிள் தான்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அவர், எதிர் கருத்தை ஏற்க தைரியம்மில்லாதவர்.எதி கேள்வி கேட்டாள் பிளாக் தான்.பொது வாழ்வில் இருப்பதாக காட்டிக்கொள்வதால் தான் கேள்விகளை கேட்கிறோம், அதற்க்கு கூட பதில் தராமல், பிளாக் செய்பவர்.
Gemini இவ்வாறு கூறியுள்ளார்…
அட.. அவ்வளவு ஏன் , அவர் ,தில்லு முல்லு, சினிமா பார்க்க போறேன் ன்னு ஸ்டேட ஸ் போட்டாரு, அதற்கு கமெண்ட்டா ' அப்ப இன்னைக்கு டீ.வீக்கெல்லாம் எப்படி சார், தியேட்டர்ல இருந்து பேட்டி கொடுப்பிங்க்களான்னு போட்டிருந்தேன். மறுநாளே என்னைய ப்ளா க் பண்ணிட்டாரு.


மனுஷ்யபுத்திரன் நகைச்சுவையை கூட ரசிக்கத்தெரியாதவரா இருக்காரேன்னு வருத்தப்பட்டேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...