முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பின் ஆறு பலன்கள் – ஆர்.அபிலாஷ்


1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக பேசுகிறார்கள்.


2. மொழியின் இயக்கம் ஒரு தர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. நன்றாக வாசிக்கிறவர்கள் எந்த துறை பற்றியும் புத்திசாலித்தனமாக எதையாவது பேசுவார்கள். இது வாசிப்பு தரும் தர்க்க அறிவினால் வருவது.

3. உரைநடை வாசிப்பை நான் ஒரு உரையாடலாக பார்க்கிறேன். உதாரணமாக நல்ல கட்டுரைகளை அதிலுள்ள கருத்துக்களுடன் மனதளவில் வாதிட்டபடியே தான் படிக்க முடியும். இது வாதத் திறனையும் அதிகப்படுத்தும். இன்னொரு பக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

4. புனைவு வாசிப்பு நம் உணர்ச்சிகளை கட்டமைக்கிறது. அரசியல் பிரக்ஞை தரலாம். அற உணர்ச்சியை தூண்டலாம். மனதை பண்படுத்தலாம். வேறுவிதமாகவும் தூண்டலாம். உதாரணமாய் ஒருநாள் யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பு “அமுத பருவம் வலம்புரியாகி அணைந்ததொரு சங்கு” படித்து விட்டு வண்டி ஓட்டும் போது சாலையில் எந்த அழகான பெண்ணை பார்த்தாலும் அவ்வரிகள் என் கட்டுப்பாட்டையும் மீறி மனதில் மேலெழுந்து வந்தன. முராகாமியின் Hear the Wind Sing படித்து விட்டு பீர் சாப்பிட வேண்டும் என எண்ணம் தீவிரமாகியது. வாசிப்பு ஏதோ ஒரு ரசாயனத்தை நம் மனதில் கலந்து விடுகிறது.

5. வாசிப்பை உயர்ந்த மனங்களுடான உரையாடலாக பார்க்கிறேன். நாம் நடைமுறையில் பல அற்பத்தனங்கள் மத்தியில் வாழ்கிறோம். அப்போது வாசிப்பு ரெட் புல் குடித்தது போல் நம்மை சில அடிகள் மேலே தூக்கி விடுகிறது.


6. போன வருடம் ஆறு மாதங்களாய் புரியாத ஒரு மன அழுத்ததில் இருந்தேன். அப்போது எரிக் புரோமின் Fear of Freedom படித்த போது சட்டென என் பிரச்சனையின் காரணம் புரிந்து சரியாகி விட்டது. வாசிப்பு ஒரு மருந்தாகவும் இருக்கலாம்.

கருத்துகள்

http://vjpremalatha.blogspot.in/ இவ்வாறு கூறியுள்ளார்…
வாசிப்பு குறித்த கட்டுரை அனுபவத்தின் வெளிப்பாடு. வாசிப்பு நம்மை, சக மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவி மருந்தாகிறது என்பது என் அனுபவம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...