முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீனா டிரைவர்

இன்றிரவு நியூஸ் செவனில் ஒரு நிகழ்ச்சியில் பேச சென்றிருந்தேன். எனக்கு முன் ஒரு தாடி வைத்து கோட்டு அணிந்த வழக்கறிஞர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். என் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒரே காரில் பயணப்பட்டோம். அவர் என்னிடம் என் நிகழ்ச்சி எதைப் பற்றி எனக் கேட்டார். அரசியல் என்றேன். “அப்படீண்ணா நீங்க அரசியல்வாதியா?” என்று கேட்டார். “இல்லீங்க. நான் ஒரு எழுத்தாளன்”
உடனே அவர் கேட்டார் “பார்ட் டைம் எழுத்தாளனா?”. ஏன் அப்படி ஒரு கேள்வி அவருக்குள் உதித்தது எனப் புரியவில்லை. நான் ஒரு தத்துவக் குழப்பத்தில் ஆழ்ந்தேன். நான் பகுதி நேர எழுத்தாளனா முழுநேர எழுத்தாளனா? முழுநேர எழுத்தாளன் என்றால் அதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என இவர் கேட்க நான் அதற்கு பதில் சொல்லி அவமானப்பட நேருமே என ஒரு பயம். “ஒரு சாதாரண எழுத்தாளனுங்க” என்று சொல்லி வைத்தேன். 


ஆனால் இது போன்ற அடையாளக் குழப்பங்கள் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். கடந்த வாரம் சன் டிவிக்கு ஒரு நிகழ்ச்சிக்காய் காரில் சென்று கொண்டிருந்தேன். தி நகரில் மற்றொரு விருந்தினரை ஏற்றிக் கொள்ள வேண்டும். ஓட்டுநர் அங்கு சாலைக்கு நடுவே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் முகவரி சொல்லி விசாரித்தார். அவர் பளிச்சென கேட்டார் “நீங்க சன் டிவி டிரைவரா?”. ஓட்டுநர் ஆமாம் என்றார். இவர் உடனே புன்னகையுடன் “நான் மீனா டிரைவருங்க” என்று சொல்லி விட்டு நடுரோட்டில் மற்றொரு மத்தாப்பு கொளுத்த சென்று விட்டார். எனக்கு ஒரே குழப்பம்! மீனா டிராவல்ஸ் என்று ஏதாவது நிறுவனத்தில் வேலை செய்கிறாரோ என என்னை அழைத்துப் போன ஓட்டுநரிடம் கேட்டேன். “இல்ல. அவர் நடிகை மீனா கிட்ட டிரைவரா இருக்கிறார்” என்றார்.

 அவருக்கு தான் தான் யார் எனக் கூற எவ்வளவு சுலபமாய் இருக்கிறது. எனக்கு என்னைப் பற்றி விளக்க குறைந்தது பத்து வாக்கியங்கள் தேவைப்படும். உதாரணமாய், என்ன வேலை என்று சொன்னால் அது எப்படியான வேலை, எங்கு உள்ளது, என்ன நிறுவனம் என விளக்க வேண்டும். அதன் பிறகும் கேட்பவருக்கு முழுக்க விளங்காது. மீனா டிரைவருக்கு ரெண்டே சொற்கள் போதும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...