முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசை எங்கிருந்து தோன்றுகிறது?

Image result for girl in yellow sareeImage result for traffic yellow light

முதலில் மொழி மீதான ஆசைக்கு வருவோம்.
சமீபமாய் புத்தகங்கள் வாங்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால் வாசிப்பு குறைந்து கொண்டே போகிறது. இது ஏன் என விசாரிக்கும் முன் வாசகர்கள் எப்படியானவர்கள் என கேட்போம். என்னைப் பொறுத்து வாசகர்கள் மூன்று வகை.

ஒன்று, வாசிப்பை ஒரு பணியாய் ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் வாசிப்பதன்றி வேறு ஈடுபாடுகள் வைத்திருக்க மாட்டார்கள். இன்னொரு பக்கம், சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கம் தொற்றிக் கொண்டவர்கள். இவர்களும் தொடர்ந்து அவ்வப்போது படித்துக் கொண்டே வருகிறார்கள். மூன்றாவதாய் வாசிப்பின் சுவை அறியாத, ஆனால் மொழித்துறைகளில் திறனும் அறிவும் படைத்தவர்கள். இவர்கள் சில நூல்களை படித்தும் இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து படிக்க மாட்டார்கள். வழக்கமான வேலை கெடுபிடிகள், பொருளாதார நிர்பந்தங்கள், உறவுச்சிக்கல்கள் இவர்களை கிடுக்கிப் பிடியில் வைத்திருக்கும். ஒரு புத்தகம் மேஜை மேல் இருந்தாலும் திறந்து படிக்க மாட்டார்கள். வாசிக்கும் திறன் இருக்கும் என்றாலும் இவர்களும் புத்தகக் காதல் குன்றிப் போயிருக்கும். இவர்களை நீங்கள் கல்வித்துறை, ஆய்வுத்துறை, சினிமாத் துறை என எங்கும் பார்க்கலாம். புத்தகங்கள் வாங்குவார்கள், நீங்கள் புத்தகங்களை அன்பளித்தாலும் மகிழ்ச்சியாய் வாங்கி வைப்பார்கள். ஆனால் ஒரு வரியை கூட வாசிக்க மாட்டார்கள்.
இந்த வகையினரை பார்க்கும் போது தான் எனக்கு வாசிப்புக்கு நேரம், வசதி, ஓய்வு, பொருளாதார ஸ்திரத்தன்மையை விட பழக்கம் அதிமுக்கியம் என படுகிறது. அதாவது வாசிப்பது ஒருவரது இயல்பே அல்ல! அது முழுக்க பழக்கத்தினால் உருவாவது.
பழக்கம் விட்டுப் போனால் என்ன தன் ஆசை இருந்தாலும் வசிக்க தோன்றாது. சிறுவயதில் நிறைய வாசிக்கிறவர்கள் வளர்ந்த பின் முழுக்க புத்தகங்களை மறந்திடலாம். இளமையில் வாசித்தவர்கள் மத்திய வயதில் புத்தகங்கள் மீது அலுப்பு கொள்ளலாம்.
 வாசிப்பு ஒரு உள்தேவை கருதி நிகழ்வது என நான் முன்பு நம்பினேன். அதாவது ஒரு அகச்சிக்கல் தோன்றும் போது அதை கடந்திடவும் தீர்வு காணவும் நாம் புத்தகங்களை நாடுகிறோம் என நினைத்தேன். ஆனால் இப்போது அது புத்தகங்களின் தேர்வை மட்டுமே நிர்ணயிக்கிறது என தோன்றுகிறது. ஆனால் அடிப்படையில் வாசிக்கும் உந்துதல் எந்த தர்க்க, காரண காரிய அடிப்படையும் அற்றது. சுவைக்காக வாசிக்கிறோம் எனும் வாதம் கூட சரியல்ல. ஏனென்றால் வாசிப்பை விட சுவையான சாத்தியங்கள் கையெட்டும் தொலைவில் இருக்கும் போது ஏன் உழைப்பையும் ஆற்றலையும் உணர்ச்சிகளின் தீவிரத்தையும் கோரும் வாசிப்பை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
உண்மையில் வாசிப்புக்குள் நம்மை நீண்ட காலம் சிறை வைப்பது வேறொரு உளவியல்.
சொற்களுக்கு நம் மனதை மெல்ல மெல்ல தனக்கு ஏற்றபடி தகவமைக்கும் ஆற்றல் உண்டு. பேசிப் பேசியே மக்கள் மனப்போக்கை திசைதிருப்ப முடியும் என உலக வரலாற்றில் பெரும் மக்கள் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ் தேசியம் என்பது மிகச்சிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இச்சமூகத்திடம் தொடர்ந்து உரையாடி நிகழ்த்திய ஒருவகை ஹிப்னாட்டிஸத்தின் விளைவு தானே. ”தமிழ் எங்கள் மூச்சு” எனும் செண்டிமெண்ட் நம் நாட்டுப்புற வழக்காற்றில் இல்லை. அது நம் மதத்திலோ சாதிய தொன்மங்களிலோ இல்லை. திருக்குறளிலோ கம்ப ராமாயணத்திலோ நீங்கள் பாரதிதாசனின் மொழிக்காதலை காண இயலாது. அது முழுக்க முழுக்க கடந்த நூற்றாண்டில் சில ஆளுமைகள் மொழி வன்மை மூலம் நிகழ்த்திய ஒரு அபாரமான மாயம். தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள் என தமிழகத்தில் வசித்த மாற்றுமொழியினர் கூட ”தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என தம்மை மொழிப்பற்றுக்கு ஒப்புக்கொடுக்க தலைப்பட்டனர். சமீபத்தில் அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்கள் இருவர் ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு இருக்கை உருவாக்க 40 கோடிக்கு மேல் நிதி திரட்டி வருவது பற்றி செய்தி படித்தேன். தமிழ் தேசியம் காற்றில் கரைந்து காணாமல் போய் விட்ட நிலையிலும் இரண்டு கடந்த தலைமுறையினர் தமிழ்ப் பற்றுக்காய் அந்நிய மண்ணில் நிதி திரட்டுகிறார்கள். தொழில் ரீதியாகவோ அன்றாட வாழ்விலோ தமிழ் அவர்களுக்கு மைய விசையாக இல்லை. ஆனால் பண்பாட்டு ரீதியாய் அவர்களுக்கு தம் அடையாளத்துடன் உள்ள ஒரே ஒட்டுதல் மொழிப்பற்று மட்டும் தான். அவர்களுக்கு நவீன தமிழ் வாசிப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து விடைபெற்று அந்நிய பூமிக்கு போகும் வேளையில் இங்குள்ள அரசியல் இயக்கங்கள் கொடையளித்த தமிழ் தேசியமும் மொழிப்பிரேமையும் இன்றும் அவர்களுக்குள் செயல்படுகிறது.
காட்சி ஊடகத்தில் தொடர்ந்து ஒரு காட்சியை ஒளிபரப்பி மக்கள் மனதை திசைதிருப்ப, வடிவமைக்க, கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஒரு மாற்றுக் காட்சியை ஒளிபரப்பி நேர் எதிராய் இதே மக்களை திருப்பவும் முடியும். சன் டிவியால் படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்பி நித்தியானந்தாவின் வளர்ச்சியை தடுக்க முடிந்ததே அன்றி அவரது பக்தர்களின் நம்பிக்கையை அழிக்க முடியவில்லையே. காட்சியின் ஆற்றல் இவ்விசயத்தில் தற்காலிகமானது. மொழியின் ஆற்றல் நிரந்தரமானது. சிவப்பு எனும் வண்ணத்திற்கு ஆபத்து எனும் பொருள் உண்டு. சாலையில் சிவப்பு விளக்கெரிந்தால் உடனே வாகனத்திற்கு பிரேக் போட்டு நிற்கிறோம். ஆனால் மாலையின் மஞ்சள் ஒளியில் சிவப்பு சேலை அணிந்த பெண் ஒருத்தி தனியாய் நிற்பது பார்த்தால் அப்போது நமக்கு முழுக்க வேறொரு புரிதலை அவ்வண்ணம் அளிக்கிறது. ஆசையோடு மனம் அவளை திரும்பி பார்க்கிறது. சிவப்பாய் பளபளப்பாய் இருக்கும் ஆப்பிளைப் பார்த்தால் உங்களுக்கு கடிக்க தோன்றாது? எப்படி சிவப்பு முற்றிலும் முரணான அர்த்தங்களை நமக்குத் தருகிறது? மொழியிலும் முரண் உணர்வுகள் உண்டு என்றாலும் இவ்வளவு அப்பட்டமாய் இல்லை. அம்மா என்ற சொல் கேட்டால் பாசம், பாதுகாப்பு, நிம்மதி அன்றி கோபம், பயம், வெறுப்பு தோன்றுமா? இல்லை.
இதற்கு ஒரு காரணம் காட்சி பிம்பம் நமக்கு வெளியே செயல்படுகிறது. அது பலவிதமான முரணான அர்த்தங்களை ஒரே சமயம் தர இயலும். தாடி வைத்த இஸ்லாமியரை பார்த்தாலே தீவிரவாதி என நினைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு நாளடைவில் ஒரு இஸ்லாமிய நண்பர் வாய்க்கிறார். அவர் அவனுக்கு பல உதவிகள் செய்கிறார். மெல்ல மெல்ல இஸ்லாமியர் குறித்த எதிர்மறை பிம்பம் அவனுக்குள் மாறுகிறது. அவர்களும் அன்பானவர்களே, அமைதியானவர்களே என உணர்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னொரு ஊருக்கு போகிறான். அங்கு தனியாய் அவன் இருக்கையில் நிறைய இஸ்லாமியர்களை காண்கிறான். அவனுக்குள் அப்போது அச்சமும் வெறுப்பும் தோன்றுமா அன்பும் மகிழ்ச்சியும் பொங்குமா? இரண்டுமே ஏற்படலாம். தனக்கு பரிச்சயமுள்ள இஸ்லாமியரை நேசிக்கிறவனாகவும் பரிச்சயமற்றவர்களை வெறுக்கிறவனாகவும் அவன் இப்போது இருப்பான். ஏனென்றால் islamophobia எனும் இனவெறுப்பு அவனுக்குள் மொழி ரீதியாய் வடிவம் பெற்றிருக்கிறது. ஆனால் மாறாக இளமையில் அவன் மொழி வழியாய் இஸ்லாமியருக்கு ஆதரவான ஒரு நம்பிக்கையை, தர்க்கத்தை பெற்றிருந்தால் அவன் அல்கொய்தாவினர் மத்தியில் வாழ நேர்ந்தாலும் இஸ்லாமிய வெறுப்பை முழுக்க கொள்ள மாட்டான்.
இதனால் தான் நம் கல்வி அமைப்பில் மொழியே பிரதான பயிற்சி மார்க்கமாய் இன்றும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் சில சொற்களை உருப்போடும் போது நம் மொத்த ஆளுமையும் வாழ்க்கைப் பார்வையும் தகவமைகிறது. இதனால் தான் தமிழகத்தில் நீண்ட காலம் வாழும் ஒரு வேற்று மொழி ஆள் கூட இங்குள்ள பண்பாட்டு விழுமியங்களை தனதாக்கிக் கொள்கிறார். இத்தாலியை சேர்ந்த கான்ஸ்டண்டைன் ஜோசப் எனும் வீரமாமுனிவர் தமிழகத்தில் வந்து தமிழை நேசித்து 23 நூல்களை தமிழில் எழுத நேர்ந்தது இதனால் தான். அவர் முதலில் தன் பெயரை தைரிய நாதன் என வைத்துக் கொள்கிறார். பிறகு அது வடமொழிப் பெயர் என உணர்ந்து வீரமாமுனிவர் என மாற்றிக் கொள்கிறார். அவர் பின்னணி ஐரோப்பா தானே, அவர் ரத்தம் இந்தியருடையது இல்லையே? பிறகு எப்படி மொழியில் மட்டும் அவர் தமிழ் தூய்மையை பின்பற்ற முடியும் என நம்பினார்? இங்கு தான் மொழியின் மாயம் செயல்படுகிறது. அது உங்கள் அடையாளத்தை முழுக்க மாற்றுகிறது. இங்கு செயல்பட்ட தமிழ் தூய்மைவாதத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள அது அவரைத் தூண்டுகிறது. மதத்தை பரப்ப வந்த அவர் பழைய ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க துவங்குகிறார். இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நிகழ்த்துகிறார். தமிழின் முதல் அகராதியை உருவாக்குகிறார். இந்து பக்தி இலக்கியமான தேவாரத்தை ஐரோப்பிய மொழியில் மாற்றுகிறார். சமண இலக்கியமான திருக்குறளையும் லத்தீனுக்கு மொழியாக்குகிறார். இதுவே ஒரு கிறித்துவ துறவிக்கு முரண் செயல் அல்லவா? கிறித்துவத்தை பரப்ப இங்கு வரும் ஒரு துறவி தன் மொழிக்காதலால் தன்னையறியாது மாற்று மதத்தை பரப்பும் பணியை செய்கிறார். தன் உணர்வுக்கு ஏற்ப தமிழர்களை மாற்றாமல் இங்குள்ள உணர்வுக்கு தன்னை வடிவமைக்கிறார்.
ஒருவேளை ஒரு தமிழர் இத்தாலிக்கு சென்று நீண்ட காலம் வாழ்ந்து லத்தீன் மொழி மீது பெரும் விருப்பம் கொண்டு அதனைக் கற்று, எழுதியிருந்தால் அவர் தன்னை அறியாமல் இத்தாலிய பண்பாட்டின் பகுதியாக மாறி இருப்பார். மொழிக்கு இப்படி மனிதனை ஒரு மலைப்பாம்பு போல் விழுங்கும் ஆற்றல் உண்டு.
மீண்டும் வாசிப்பு பழக்கத்துக்கு வருவோம். நிறைய புத்தகங்களும் ஓய்வும் உள்ள சூழலில் கூட வாசிப்பு நிகழ வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் படித்த, பணிபுரிந்த கல்லூரிகளில் நேரில் கண்டிருக்கிறேன். புத்தகங்கள் ஒரு புறம் குவிந்து கிடக்க மாணவர்கள் வெற்று அரட்டையில் பொழுதை கழிப்பார்கள். நூலகத்தில் படுத்து உறங்குவார்கள். மாற்றாக நான் முன்பு ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த ஒரு மீனவர் தான் மீன்பிடிக்கு செல்லும் போது படகில் ”ஒரு புளிய மரத்தின் கதை” போன்ற நவீன தமிழ் இலக்கிய நூல்களை படித்ததாய் என்னிடம் கூறினார்.
வாசிப்பு அடிப்படையில் ஒரு போதை. சிகரெட் போதைக்கு எப்படி ஒரு இளைஞன் பழகுகிறான்? அவன் தனக்கு விருப்பமான ஆளுமைகள் புகைப்பதை காண்கிறான். தன் நண்பர்கள் புகைக்கும் போது அவர்கள் நடுவே இருக்கிறான். அவர்களை அவனை புகைக்க அடிக்கடி தூண்டுகிறார்கள். அவன் முயன்று பார்க்கிறான். ஆரம்பத்தில் இருமுகிறான். பிறகு மெல்ல மெல்ல சிரமப்பட்டு பழக்கிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் தனிமையில் கூட அவனால் சிகரெட் இல்லாமல் நிதானமாய் இருக்க முடியாதபடி அப்பழக்கம் அவனை தொற்றிக் கொள்கிறது. நமது அடுத்த தலைமுறையை நாம் வாசிப்புக்கும் இப்படித் தான் பழக்க வேண்டும். அவர்களுடன் புத்தகங்கள் பற்றி தொடர்ந்து உரையாட வேண்டும். வாசிக்க தூண்ட வேண்டும். முக்கியமாய் அவர்களை சுற்றி வாசிக்கிறவர்கள் நிறைய இருக்க வேண்டும். மெல்ல மெல்ல சொற்கள் அவனை சூழ்ந்து கொள்ளும். அவை அவனிடம் பேசத் துவங்கும். ஒரு மந்திரவாதி போல் உச்சாடனைகளால் அவனை மயங்க வைக்கும். பிறகு அவன் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது.
என்னை முதலில் மொழியை நோக்கி ஈர்த்தது புத்தகங்கள் அல்ல. என் அப்பா என்னிடம் அண்ணா, கலைஞர் குறித்த சொன்ன கதைகள், அவர்களின் வாக்கியங்கள், நான் கேட்டு வளர்ந்த பழைய சினிமா பாடல்கள், அப்பா தான் நூலகத்தில் வாசித்த அனுபவங்களை என்னிடம் சிலாகித்து பகிர்ந்து கொண்ட நிமிடங்கள். எனக்கு பதினைந்து வயது இருக்கும் போது என் அப்பா திடீரென ஒரு தீவிர ரஜினி ரசிகர் ஆனார். எனக்கு அது அதிர்ச்சியாய் இருந்தது. நான் அப்போது அப்பாவிடம் இருந்து மெல்ல மெல்ல விலகத் துவங்கிய கட்டம். அதனால் நான் அவரால் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. ஆனால் அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பு ரஜினி பக்தி என் அப்பாவை ஆட்கொண்டிருந்தால் நான் நிச்சயம் மொழி மீது இப்படி இன்றுள்ளபடி பித்து கொண்டிருக்க மாட்டேன்.
 பதினைந்து வயதுக்கு பிறகும் தொடர்ந்து புத்தகங்கள் குறித்து ஒருவித காமத்துடன் உரையாடுவதற்கு எனக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். சாதிக் எனும் ஒரு நண்பர் இருந்தார் (எழுத்தாளர் முஜீப் ரஹ்மானின் சகோதரர்). அவர் என்னைப் பார்ப்பதற்காய் தக்கலையில் இருந்து வாராவாரம் பசுவய்யா, நகுலன் கவிதை நூல்களுடன் வருவார். அவர் என்னை நவீன இலக்கியம் நோக்கி திருப்பினார். அதற்கு பிறகு தக்கலையில் ஹமீம் முஸ்தபா ஒரு புத்தகக் கடை ஆரம்பித்தார். அதுவரை நாகர்கோயிலில் மட்டுமே கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்கள் நடந்தன. இப்போது தக்கலையிலும் நடக்க துவங்கின. அக்கடை எங்கள் ஊர் எழுத்தாளர்கள் ஒன்று கூடும் இடமாய் மாறியது. அங்கு தான் நான் ஜெயமோகனிடம் முதலில் ஒரு ”இலக்கிய சர்ச்சையில்” ஈடுபட்டேன். நான் அவரை முதலில் சந்தித்த போது அவர் புத்தகக் கடையை பார்க்க வந்திருந்தார். முஸ்தபா என்னிடம் வந்து “அவர் தான் ஜெயமோகன். அவரது ”ரப்பர்” முக்கியமான நாவல்” என்றார். நான் ஜெயமோகனை நெருங்கி கவனித்தேன். அவர் ஒரு நண்பருடன் வைணவ பக்தி இலக்கியத்தின் சிறப்புகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருந்த முற்போக்கு மனம் சிலிர்த்துக் கொண்டது. அவரிடம் சென்று பக்தி இலக்கியம் அபத்தமானது என உரையாடினேன். அவர் எனக்கு சுருக்கமாய் பதிலளித்து விட்டு கிளம்பினார். பிறகு நான் அவரது ”ரப்பர்” படித்து வியந்தேன். அவரை தேடி சென்று தொடர்ந்து உரையாடினேன். தக்கலையில் முஸ்தபாவின் கடையில் நான் நட.சிவகுமார், என்.டி ராஜ்குமார், பொன்னீலன் போன்ற பல முக்கிய எழுத்தாளர்களை சந்தித்தேன். சொக்கலிங்கம், அனந்து போன்ற அறிவுஜீவிகளை பரிச்சயம் செய்து கொண்டேன். இன்னொரு புறம் நாகர்கோயிலில் காலச்சுவடு அலுவலகம் சென்று சு.ராவிடம் பேசினேன். அங்கு மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன். இரண்டே வருடங்களில் எத்தனை இலக்கிய ஆளுமைகளை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது என நினைத்தால் இப்போது வியப்பு ஏற்படுகிறது. கல்லூரியில் நான் இலக்கியம் படித்ததால் அங்கும் முழுக்க இலக்கியம் பற்றின பேச்சு தான். நான் புத்தகங்கள் வாசித்ததை விட புத்தகங்களை சிலாகிக்கும் உரையாடல்களின் பகுதியாய் இருந்ததே அதிகம். புத்தகங்களின் அணுக்கம் அல்ல புத்தகங்கள் குறித்த நண்பர்களின் ”மொழி” தான் என்னை வாசகனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றியது.
இப்படி இலக்கிய ”காம” பேச்சுக்கள் அலையடிக்காத ஒரு சூழலில் இருந்து வரும் ஒருவர் வாசகராக முடியுமா? சாத்தியமே இல்லை எனப் படுகிறது. “புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது” பாடலில் வைரமுத்து ஒரு வரி எழுதியிருப்பார்: ”பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை”. அதே போல புத்தகங்கள் குறித்து சிலாகிக்கும் சொற்கள் இல்லாத ஊரில் புத்தகங்கள் எழுதப்படவோ படிக்கப்படவோ இயலாது. புத்தகங்களை நாம் முதலில் நண்பர்களுடனான உரையாடல்களில், நம் மனதுக்குள் அரும்பும் மொழிக்குள் வைத்து புணர்கிறோம். அந்த புணர்ச்சியில் இருந்துதான் எழுதும், வாசிக்கும் ஆசையே தோன்றுகிறது. அந்த ஆசையில் இருந்து புத்தகங்கள் பிறக்கின்றன.
ஆசை குறித்த ஆசையே ”ஆசையை” தோற்றுவிக்கிறது. பூவை விடுங்கள். ஒரு கற்பனை: ஆண்களே இல்லாத ஊரில் நிறைய பெண்களும் ஒரே ஒரு ஆணும் வசிக்கிறார்கள். மொழியிலோ பண்பாட்டிலோ ஆண்களின் தடம் பதியாத ஊர் அது. அங்கு பெண்ணின் மொழி மட்டுமே உள்ளது. அந்த ஆணும் பெண் மொழியைத் தான் பேசுகிறான். அச்சூழலில் அங்கு வசிக்கும் ஒரே ஒரு ஆணுக்கு அப்பெண்கள் மீது காதல் தோன்றுமா? நிச்சயம் இருக்காது. ஏனென்றால் பெண் மீதான விருப்பத்தை, அவளது அழகை தோற்றுவிப்பதே ஆண்களின் மொழி தான். ஆண் மொழி இல்லாத ஊரில் ஒரு புது ஆணால் எதையும் கற்பனை செய்ய இயலாது. அவனுக்கு ஒரு பெண்ணை பார்க்க பூக்கள் கொத்து கொத்தாய் தொங்கும் ஒரு மரத்தை பார்ப்பது போல் இருக்கும். அவனால் நின்று ரசிக்க முடியாது. அவனது காமம் கூட எந்திரத்தனமாகவே இருக்கும்.
மொழிக் காதல் முதலில் தோன்றுகிறது. பிறகு மொழிக் காதலில் இருந்து அக்காதலுக்கு பொருத்தமான மொழி முளைக்கிறது. வாசிப்பும் எழுத்தும் அம்மொழி முளைப்பதற்கான விளைநிலம். சரி அந்த முதல் காதல் எப்படி தோன்றுகிறது என நீங்கள் கேட்கலாம். அது மொழி மீதான ஒரு ஆதிக்காதலில் இருந்து தோன்றியிருக்கலாம்.

சரி ஆசை எங்கிருந்து தோன்றுகிறது? ஆசை மீதான ஆசையில் இருந்து. 
நன்றி: உயிர்மை, ஆகஸ்ட் 2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...