ஒரு பிரச்சனையில் எப்போதும் இரண்டு
தரப்புகள் இருக்கும். ஒரு எழுத்தாளன் இதில் எந்த தரப்பில் அதிக உண்மை உள்ளது என தேடலாம்.
அல்லது இரண்டு பேருமே தவறு செய்ததாய் கூறலாம். ஆனால் ஒரு தரப்பு முழுக்க தோல்வியுற்று
அழியும் நிலை வரும் போது அவன் ஒரு அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும். அவன் அழிக்கப்படுபவரின்
பக்கம் நின்று பேச வேண்டும்.
உண்மை எப்போதும் பாரபட்சமானது. பார்வையை பொறுத்து
மாறுவது. அது ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக கூட இருக்கலாம். ஆனாலும் நீதி மாறாதது. நீதி
என்றும் ஆயுதம் ஏந்தியவன் பக்கம் நிற்காது. எழுத்தாளன் நீதியின் பக்கமா உண்மையின் பக்கமா
நிற்க வேண்டும் என்று கேட்டால் அவன் நீதியின் பக்கமே நிற்க வேண்டும் என்பேன். இதை எனக்கு
கற்றுத் தந்தவர் மனுஷ்யபுத்திரன்.
ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நியாயங்களை முன்வைத்து
கட்டுரை எழுதி தந்தால் பிரசுரிப்பீர்களா என அவரிடம் முன்பு ஒருமுறை கேட்டேன். அவர்
சொன்னார் “மாட்டேன்”. நான் கேட்டேன் “உண்மைக்கு எப்போதும் ரெண்டு பக்கங்கள் உண்டல்லவா?
இந்துத்துவாவின் தரப்பு நியாயங்களையும் ஏன் வாசகர்கள் அறியக் கூடாது?”. மனுஷ்யபுத்திரன்
அப்போது என்னிடம் முன்பு ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி காலச்சுவடில் எழுதிய கட்டுரையை குறிப்பிட்டு
மேற்சொன்ன பார்வையை வலியுறுத்தினார். தான் எப்போதுமே உண்மையின் பக்கம் அல்ல நீதியின்
பக்கமே என்றார். ஏனென்றால் உண்மைக்கு ஒரு தீர்க்கமான, அனைவரும் ஏற்கும் முகம் இல்லை.
தரவுகள், உணர்ச்சிகள், பார்வைக் கோணம், மறைக்கப்படும் சதவீதம், வெளிப்படுத்தபடும் சதவீதம்
பொறுத்து உண்மை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் நீதிக்கு ஒரே முகமே.
ஜெயமோகனின் ஈழத்தில் இன அழித்தொழிப்பு
நடந்ததா இல்லையா என்கிற விவாதத்தில் நான் இதையே வலியுறுத்த விரும்புகிறேன்.
கருத்துகள்