முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொறாமையை எதிர்கொள்வது


நான் எழுத வந்த இந்த பத்து வருடங்களில் இலக்கிய உலகில் பல பூசல்களைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் காரணம் பொறாமை தான். பெருமாள் முருகன் “மாதொரு பாகன்” சர்ச்சையில் மாட்டிக் கொண்டு துச்சாதனர்களால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த அவலச்சூழலிலும் அவரைக் கண்டு கண்ணீர் உகுக்காமல் “என்ன இவருக்கு மட்டும் ஓவராய் கவனம் கிடைக்கிறது?” என மூக்கில் விரல் வைத்தவர்கள், அந்த பொறாமையினாலே அவரைக் கடுமையாய் வைதவர்களைத் தெரியும். நான் இதுவரையில் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் புகழ், கவனம் கண்டு வயிறெரிந்ததில்லை. நான் நல்லவன் என்பதால் அல்ல. நான் இதையெல்லாம் கவனித்ததே இல்லை. அடுத்தவர்களின் பணம், வசதி, அழகிய காதலிகள் கூட என்னை உறுத்தியதில்லை. மண்ணில் முகம் புதைத்த நெருப்புக் கோழி போன்றே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த ஆறுமாதங்களில் என் மனம் சட்டென மாறி விட்டது. எதற்கும் யாரைப் பார்த்தாலும் பொறாமை எனும் நிலைமை! சும்மா சாலையில் பஞ்சுமிட்டாய் விற்கிறவரைப் பார்த்தால் கூட என் கண்ணில் பொறாமை எட்டிப் பார்க்கிறது.

எனக்கு என்ன ஆகிறது? நான் ஏன் இப்படி மாறி இருக்கிறேன்?
உண்மையிலேயே தெரியவில்லை.
இதற்கு இரண்டு தீர்வுகள் தெரிகின்றன.
1)   பொறாமை என்பது அடுத்தவருடன் நம்மை ஒப்பிடுகையில், அடுத்தவரை மற்றமையாக கருதுவதில் தோன்றுகிறது என்கிறார் திருவள்ளுவர் (அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் / பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.). அடுத்தவர்கள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவு இருப்பதில்லை. ஆகையால் ஒரு கற்பனையைக் கொண்டு அவர்கள் மீது பொறாமையை வளர்க்கிறோம். ஆனால் அந்த கற்பனை விரைவில் கலைந்து விடும் என்பதால் நம் பொறாமையும் விரைவில் கலைந்து விடும் என்பதால் நாம் பதற்றமாகிறோம். இது ஆச்சரியம் தான் – நமது பொறாமை ஒரு கருத்தமைவின் மீது வீற்றிருக்கிறது. அந்த கருத்தமைவு தகர்ந்து விடலாம் என்பது நமக்கு நல்லதே. ஆனால் அந்த தகர்வை தடுக்க வேண்டுமே என்கிற ஆவலாதியே நமக்கு அப்போது அதிகம் ஏற்படுகிறது. பதற்றம் அதிகமாக ஆக, நாம் இதை விட்டு, இவரை விட்டு அடுத்தொன்றை அடுத்தொருவரை நோக்கித் தாவுகிறோம். இந்த புதிய நபரை மற்றமையாக்கி பொறாமை கொள்வதைத் தொடர்கிறோம். இன்று பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி பொறாமைப்பட்டால் நாளை சகபணியாளர். அதற்கு அடுத்த நாள் நண்பர், அதன் பிறகு சாலையில் போகிறவர்…
ஏன் பொறாமைக்குள்ளாகும் ஆள் மீதான கருத்தமைவு கலையக் கூடாதே என தவிக்கிறோம்?
ஏனெனில் நாம் பொறாமைப்படும் முன் காலுடைந்த நாற்காலி போல் ஆடிக் கொண்டே இருக்கிறோம். நாம் யார், என்ன பண்ணுகிறோம் என்பது குறித்த நிலையின்மைகளே நம்மை அடுத்தவரை நோக்கி கவனம் குவித்து அவரை மற்றமையாக்க நம்மைத் தூண்டுகிறது. நம்மைக் குறித்த ஆற்றாமையே அடுத்தவர்கள் குறித்த பொறாமையாகிறது.
சரி, தீர்வுக்கு வருகிறேன்:
இப்போதைக்கு நான் செய்ய வேண்டியது இவ்வாறு அடிக்கடி சொல்லி என்னை உற்சாகமூட்டுவது: “நீ நன்றாகத் தான் வாழ்கிறாய். உன்னளவில் சிறப்பாக அனைத்தையும் செய்து வருகிறாய். முன்னெப்போதும் நீ இவ்வளவு ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமாய் வாழ்க்கையை அனுபவித்ததில்லை. புன்னகை செய். கண்களில் ஒளி கொண்டு பார். உன்னை விட சிறப்பானவர்கள் வேறு யார் சொல்?”
எந்த தர்க்க வாதங்களையும் நம் மனம் உள்வாங்காது. மனம் முழுக்க முழுக்க உணர்வுத் தளத்தில் இயங்குவது. அது மொழியால் கட்டுண்டது. மொழியின் சக்தியால் எப்படி சோர்ந்த மனத்தையும் நிமிர்ந்து நிற்க, தன்னிறைவுடன் ஆழ்ந்து மூச்சு விட வைக்க முடியும். மனம் தன்னிறைவு கொண்டால் பிறருடன் ஒப்பிடவோ குழம்பவோ தேவையிருக்காது. தான் உறுதியானால் மற்றமை தேவையிருக்காது.
2)   அடுத்து நான் செய்ய வேண்டியது என்னை கூடுதலாய் கண்காணிக்காமல், மனம் அதன் பாட்டுக்கு இயல்பாய் தெளிய அனுமதிப்பது. மனம் தன்னையே குணப்படுத்தும் தன்மை கொண்டது.  இன்று நம்மை சிதைக்கும் இந்த வாழ்க்கையே நாளை நம்மை மீட்டுத் தரும் கருணை கொண்டது. ஆக, நம்மைக் கடந்த ஆற்றல்களை நம்பி ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
வள்ளுவர் பொறாமையை (அழுக்காறு) ஆன்மாவின் மீது ஒட்டிக் கொள்ளும் அழுக்காகவே காண்கிறார். ஆன்மா மலரும் போது பொறாமை இருக்காது. ஆன்மா வாடி வதங்கும் போது பொறாமை இருள் சூழும்.
 சீக்கிரமே விடியல் வரும்!


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை நண்பரே. பலநேரங்களில் நாம் பிறர் மீது பொறாமை கொள்வதைவிட பிறரைப் பற்றி நம் மனதில் ஊவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் மீதே பொறாமை கொள்கிறோம். நீங்கள் சொல்வது போல் மனதை அதன் போக்கில் தெளிய விட்டுவிடுவதே நல்லது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...