
மேல் வரும் மின்னஞ்சலில் இரா திரிவேதி சேத்தன் பகத்திடம் “கிஸ் யூ மிஸ் யூ” என சொல்கிறார். இதைப் பற்றி பின்னர் சேத்தன் குறிப்பிட அது சும்மா விளையாட்டுக்கு என்கிறார். ஆனால் சேத்தன் அவரிடம் நெருக்கம் காட்ட முயலும் போது அது காம அத்துமீறல் என்கிறார். இந்த மின்னஞ்சலை சேத்தன் இணையத்தில் வெளியிட்ட போது “என்னை அசிங்கப்படுத்துகிறார், களங்கப்படுத்துகிறார்” என பொருமினார் இரா. அப்படி என்றால் அவர் சேத்தன் மீது கூறும் பழிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லையே! அவை மட்டும் அசிங்கப்படுத்துவது ஆகாதா?
தான் வழிவதும் இச்சையை காட்டுவதும் விளையாட்டு என சௌகர்யமாய் கடந்து செல்வதும் ஆண்கள் கொஞ்சம் வழிந்தால் அதை கற்பழிப்பு என பொதுவெளியில் வைத்து விளாசுவதுமே இன்றைய டிரெண்டாக உள்ளது!
விக்டோரியா மகாராணியின் காலத்தில் இருந்த ஒழுக்கவாத
வெறித்தனத்துக்கு நாம் இன்று மீள்கிறோம். அதற்கான எல்லா அறிகுறிகளையும் நாம் இன்று இந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் காண்கிறோம். செக்ஸ் மீதுள்ள அவநம்பிக்கை, அச்சம், அசூயை, ஒவ்வாமை…
உதாரணத்துக்கு, வைரமுத்து மற்றும் சேதன் பகத் மீதுள்ள metoo குற்றச்சாட்டுகள், கேள்விகள், விமர்சனங்களைப் பார்ப்போம்.
வைரமுத்து 2004இல் தன்னை பாலியல் நெருக்கடிக்கு உள்ளாக்கியதாய் சின்மயி சொல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் தன் டிவிட்டர் கணக்கில் சில பெயர் வெளிப்படுத்தாத
பெண்களின் குற்றச்சாட்டுகளை பதிவிடுகிறார். வைரமுத்து ஒரு இளம்பெண்ணை அணைத்து முத்தமிட முயன்றதாய் ஒரு
பெண் குற்றம் சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டுகளை
மறுக்கும் வைரமுத்து சின்மயிக்கு எதிராய் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார். இந்த சூழலில் சமூக வலைதளங்களில் சிலர் வைரமுத்து குற்றவாளியாக
இருக்க வாய்ப்புண்டு, ஏனெனில் அவர்
நீண்ட காலமாகவே ஒரு பிளேபாய் தான் என்று எழுதினார்கள். அவர் தன் மனைவியிடம் இருந்து பிரிந்திருப்பதையும், தான் நடத்தும் பெண்கள் விடுதிக்கு அடிக்கடி செல்வதையும் அவர்கள்
குறிப்பிட்டார்கள். இங்கு அத்துமீறல்
குற்றச்சாட்டும் பாலியல் ஒழுக்கமின்மை பிம்பமும் கைகோர்ப்பதை கவனியுங்கள். ஒரு கவிஞரிடம் நான் இதைப் பற்றி உரையாடுகையில் அவர் சொன்னார், “பாப்லோ நெருடா மட்டும் இப்போது இந்தியாவில் வாழ்ந்தால் அவரை
தூக்கிலிட்டிருப்பார்கள்.”
Metoo போராட்டத்துக்கும் பாலியல் ஒழுக்க வேட்டைக்குமான மறைமுக தொடர்பை சேத்தன் பகத்
சர்ச்சை தெளிவாக்கும்.
இரா த்ரிவேதி எனும் ஆங்கில இந்திய எழுத்தாளர் outlookindia இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் சேத்தன்
பகத்தின் நடவடிக்கைகளை, அவை ஏன் தம்மை
காயப்படுத்தின என விவரிக்கிறார். பத்து வருடங்களுக்கு
முன் ஒரு இலக்கிய நிகழ்வில் (ஜெய்ப்பூர் இலக்கியத்
திருவிழா) அவர் சேத்தன் பகத்தை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் இருந்தே பகத் தன்னிடம் வழியத் தொடங்கியதாய்
அவர் கூறுகிறார். இதன் பிறகு இருவரும்
வெளியே சந்திக்கிறார்கள். அப்போது பகத்
இராவை தனது அறையில் வந்து சந்திக்க கேட்கிறார். இரா செல்கிறார். அங்கு பகத் அவரை முத்தமிட முயல்கிறார். இரா விலகிக் கொள்கிறார். இதற்கு பகத் விளையாட்டுத்தனமான நியாயம் சொல்கிறார். இரா இதன் பிறகு பகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். பகத் அதே பாலியல் விளையாட்டுத்தனத்துடன் தொடர்ந்து பேசுகிறார், ஆனால் இராவை அவர் எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. இரா இதை ஒரு ஆபத்தற்ற மீறலாய் கருதுகிறார். ஆனால் சமீபமாய் இரு விசயங்கள் நடக்கின்றன. ஒன்று, பகத்தின் Half Girlfriend நாவலில் ஒரு சம்பவத்தை இரா படிக்கிறார். அதில் நாயகன் ஒரு பெண்ணை இது போல முத்தமிட முயல்கிறான். இந்த சுபாவத்தை “பகத் என்னிடம் மட்டுமல்ல வேறு பல பெண்களிடமும் வெளிப்படுத்தி
இருக்கிறார் போல, அதன் பிறகு தான்
அந்த அனுபவத்தைக் கொண்டு அவர் நாவலில் அதை ஒரு அத்தியாயமாக்குகிறார்” என இரா நினைக்கிறார். அடுத்து, இராவின் தோழி
ஒருவர் அவரிடம் பகத் வெளிநாட்டில் இருக்கையில் தன்னிடம் தவறாய் நடந்து கொண்டதாய் சொல்கிறார். இப்போது இரா வெகுண்டெழுகிறார். இந்த ஆளை அம்பலப்படுத்த வேண்டும் என முடிவெடுத்து MeToo ஹேஷ்டேக்கில் தன் குற்றச்சாட்டை எழுதுகிறார்.
இங்கு நாம் ஒரு சரடை கவனிக்கலாம். பகத்தின் மீறலை இரா ஒரு கட்டம் வரை பொறுக்கிறார். அது ஒரு வளர்ந்த ஆணின் விடலைத்தனம், தன் மீதுள்ள அவரது இச்சையின் வெளிப்பாடு என இரா கருதியிருக்கலாம். மேலும் பகத்தைப் போன்ற ஒரு பிரபலம் தன்னை நாடுவது அவருக்கு
ஒரு பெருமையாக, கிளுகிளுப்பாக, தன் அழகின் அத்தாட்சியாக இருந்திருக்கலாம். ஆகையால் தான் அவர் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடும் போதும் “பகத்தைப் போன்று திருமணமாகி குழந்தைகளைக் கொண்ட ஒருவரா இப்படி
நடந்து கொள்வது?” என திரும்பத் திரும்ப கேட்கிறார். அப்படி எனில் ஒருவேளை பகத் திருமணமாகாதவராய் இருந்தால் அவர்
இராவிடம் நடந்து கொண்டது சரியாக இருக்குமா? திருமணமாகாமல், தன்னை மட்டுமே வழிபடும், இச்சிக்கும் ஒருவராய்
பகத் இருந்திருந்தால் இராவுக்கு இந்த மீறல் இவ்வளவு எரிச்சல்படுத்தி இருக்காதா? அடுத்து, அவர் தன்னைப்
போன்றே மற்றொரு பெண்ணையும் நடத்தி இருக்கிறார் என அறிய வரும் போது இராவுக்கு கட்டுக்கடங்காத
கோபம் வருகிறது. “நான் எல்லா பெண்களையும் போன்று உனக்கு ஒரு மலிவான
செக்ஸ் இலக்கா? நானும் எல்லா பெண்களும் ஒன்றா?” இப்படியான கேள்விகள் அவருக்குள் எழுந்திருக்கலாம். ஆகையால் தான் பகத்தின் எளிய ஆபத்தற்ற மீறலை பொறுத்துக் கொள்ளும்
இரா, அவரது பல-பெண் நாட்டத்தைக் கண்டு கொதிக்கிறார். இதன் மூலம் பகத் தன்னை ஸ்பெஷலாக அன்றி மிக இழிவாக நடத்தியதாய்
இரா நினைத்திருக்கலாம். இந்த இடத்திலும்
அவர் “பகத்தின் இந்த நடத்தை அவரது குடும்பத்தை காயப்படுத்தாதா?” எனக் கேட்கிறார். ஒரு விசயம் தெளிவாகிறது: இராவுக்கு பகத்தின் மீறல் தனக்கு தொந்தரவாக உள்ளதற்கு இணையாக
அது குடும்ப அமைப்பை சிதைப்பதாய் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. திருமண பந்தத்துக்குள் இருப்பவர் இப்படி செய்யலாமா எனும்
கேள்வி அவரது குற்றச்சாட்டினூடே தொடர்ந்து ஒலிக்கிறது.
இன்னொரு இடத்தில் அவர் பகத்தின் இந்த நடத்தைக்கான காரணங்கள்
என்னவாக இருக்கலாம் என வினவுகிறார்: அவரது குடும்ப
வாழ்க்கை தோல்வி அடைந்ததா? அவர் பெண்கள்
மீது அவநம்பிக்கை கொண்டவராக இருப்பதா? எது அவரை இப்படி குடும்ப அமைப்புக்கு வெளியே பெண்களை நாடுபவராய் ஆக்குகிறது? குடும்பம் வலுவாக இருந்தால் ஆண் வெளியே தன் இச்சையை காட்ட
மாட்டான், இச்சை என்பது குடும்பத்துக்குள் மட்டுமே வெளிப்படுத்தப்பட
வேண்டியது எனும் விக்டோரிய காலத்து ஒழுக்கவாதம் இராவிடம் உள்ளது.
ஒரு பெண் நட்புடன் நெருங்கினால் அவளிடம் தன் விருப்பத்தைக்
காட்டுவதும் அவளை முத்தமிட முயல்வதும் சரியா என இரா கேட்கிறார். இது நியாயமான கேள்வியே. ஆனால் நட்புடன் பழகும் பெண்ணுக்கு தன் பால் விருப்பம் உள்ளதா
என அறிய ஆண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாதே. தன் பார்வையிலோ உடல்மொழியிலோ அவன் தன் ஆசையை வெளிப்படுத்தியாக
வேண்டும். அதுவே இயல்பு. முத்தமிடுவது தப்பு தான். எந்த எல்லை வரை சென்றால் ஒரு பெண் அதை ஏற்பாள், எப்போது அவள் அதை தொந்தரவாக கருதுவாள் என்பதை ஒரு ஆண் அதை
செய்து பார்த்து தான் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு மூட்டமான குழப்பமான எல்லை. இந்த எல்லையை தான் எப்போது தொடுகிறான், எப்போது கடக்கிறான் என்பதை எந்த ஆணும் சுலபத்தில் உணர்வதில்லை.
சுஹல் சேத் எனும் மூத்த எழுத்தாளர் மீதும் இத்தகைய குற்றச்சாட்டை
இரா எழுப்புகிறார். சேத் தன் உடலழகை
பாராட்டிப் பேசினார், தன் மார்பின்
அளவை, உடலின் வாளிப்பை உரையாடலின் போது குறிப்பிட்டார்
என்பதே பிரதான குற்றச்சாட்டு. இராவின் கோபம்
நியாயமானதே. ஆனால் காலங்காலமாய் பெண்ணின் உடலழகை இச்சிப்பதும்
அதை மறைமுகமாய் குறிப்பிடுவதும் ஆண்-பெண் உறவாடலில் இயல்பான ஒன்று தானே. நேரடியாக இது உரையாடலில் வரும் போது ஒரு பெண்ணுக்கு அருவருப்பு
தோன்றுகிறது. அந்நடவடிக்கை அவளுக்கு இம்சையாகிறது. ஆணின் மார்பை, மார்பு விரிவை, மார்பு முடியைப்
பற்றி நேரடியாய் பேசும் பெண்கள் சிலரை அறிவேன். ஆண்கள் அளவுக்கு இல்லையெனிலும் நேரடியாய் ஆணுடல் மீதான விருப்பத்தை
பேசும் பெண்கள் இன்று அதிகமாகி வருகிறார்கள். நான் முன்பு பணி செய்த அலுவலகத்தில் ஒரு இளம் பெண் எனது நண்பர்
ஒருவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் அந்த நண்பரின் தாடி, அவரது கட்டுடல், ஆடை அணியும் ஸ்டைல் பற்றியெல்லாம் சிலாகித்தார். தான் விசாரித்ததாய் அவரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். நான் தெரிவித்த போது அந்த நண்பர் ஒரு புன்னகையுடன் அதை கடந்து
போனார்.
பெண்ணுடலைப் பற்றி ஆண் சிலாகிக்கும் போது மட்டும் அது பிரச்சனைக்குரியதாகிறது. ஏன்? 1) எல்லா ஆண்களும்
அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என பெண்ணியவாதிகளில் சிலர் நம்புகிறார்கள். ஆகையால் ஆணின் இச்சை என்பது பெண்ணை ஆக்கிரமிக்கும் ஒரு போர்த்
திட்டமாய் பார்க்கப்படுகிறது. 2) திருமணமான ஆண்
இன்னொரு பெண்ணுடலை, அதுவும் ஒன்றுக்கு
மேற்பட்ட வெளிப்பெண்களை இச்சிக்கவே கூடாது, இச்சித்தாலும் அதை வெளிப்படையாய் நிகழ்த்தக் கூடாது என இந்த
பெண்ணிய ஒழுக்கவாதிகள் நம்புகிறார்கள். (இரா ஒரு தொழில்சார் பெண்ணியவாதி அல்லவெனிலும் அவரிடம் ரேடிக்கல் பெண்ணியவாதியின்
மொழி இத்தகைய தருணங்களில் வெளிப்படுகிறது.)
இதன் காரணமாகவே பிளேபாயாக பிம்பம் கொண்ட ஆண்கள் எல்லாம் இந்த metoo எழுச்சியின் போது செருப்படி வாங்குகிறார்கள். ராமன் ஒகெ, ஆனால் கிருஷ்ணன் வில்லன் என்பதே இவர்களின் நிலைப்பாடு.
இன்று மேற்கிலும் இந்தியாவிலும் வலதுசாரி தேசியம்
எழுச்சி பெற்று வரும் தருணத்திலேயே MeToo இயக்கமும் உச்சம் பெறுவது வெறும் தற்செயல் என நான் நம்பவில்லை.
தேசியம் என்பது ஒழுக்கவாதத்தை முன்னெடுத்து பாலியல் உடலை
கண்காணித்து, மதிப்பிட்டு, கட்டுபடுத்தி அதன் வழி அதிகாரத்தை செலுத்திடும் ஒரு கதையாடல். ஆகையாலே, தேசியவாதிகள்
அதிகாரத்தில் வரும் போது ஆணும் பெண்ணும் தம் பாலியலை கட்டுக்குள் வைக்க வேண்டும் என
வலியுறுத்துகிறார்கள். இதையே இன்று MeToo இயக்கமும் முற்றிலும் வேறொரு கோட்பாட்டு மொழியில்
கோருகிறது. இது காட்டுவது என்ன?
அரச அதிகாரத்தில் தமக்கான பங்கை பெண்கள் – படித்த மேற்தட்டு பெண்கள் – இன்று கோரத் தொடங்கி உள்ளதையே இது காட்டுகிறது. அதிகாரத்தின் மொழி ஒழுக்கவியலின் மொழி. ஆகையால் அரச அதிகாரத்தை நெருங்கும் எவரும் அம்மொழியையே பேச
தலைப்படுவர். அதையே இன்று மேற்தட்டு பெண்ணியவாதிகளும் செய்கிறார்கள்.
இதன் பொருள் இன்று பெண்கள் ஆட்சிப் பீடத்தில் இருக்கிறார்கள்
என்றல்ல. ஆனால் அவர்கள் அதை நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டார்கள்
என்பதை MeToo பெண்ணியவாதிகளின் இந்த ஒழுக்க எதேச்சதிகாரம், பாலியல் தூய்மைவாதம், செக்ஸ் ஒவ்வாமை காட்டுகிறது.
பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டும் எனும் உங்கள்
இலக்கு சரியே, ஆனால் உங்கள் பாதை நியாயமானதா?
தீவிர பெண்ணிய போராளிகள் பதிலளிக்க வேண்டிய கேள்வி இது.
கருத்துகள்
இந்தியச் சூழலில் உள்ள #meTooவில் சில நாகரீகமான இச்சை வெளிபடுத்தலுக்கும் பாலியல் அத்துமீறலுக்குமான வேறுபாடு தெரியாமல் குற்றம் சாட்டுகின்றனர். அல்லது வேண்டுமென்றே victim playingக்கு பயன்படுத்துகின்றனர் என்பதே என் புரிதல்.
வெளி நாட்டில் குறிப்பாக #meToo தொடங்கிய அமேரிக்காவில் இவ்வாறான குழப்பம் இருக்காது அங்கு உள்ள பெண்கள் maturedஆனவர்கள் என்றே நம்புகிறேன். விரிவாக அதைபற்றி வாசிக்கவில்லை.
பொதுவெளியில் குறிப்பாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை ஒழிக்க வேண்டிய நிர்பந்தத்தை #meToo உருவாக்க முயல்கிறது வரலாற்றில் அதற்குரிய சூழல் இப்பொழுது கனிந்து இருக்கிறது. குறைந்த பட்சம் அதை விவாதப்பொருள் ஆக்குவதற்காகவாவது.
அவ்வகையில் அதிகார பங்கீட்டைப் பெற பெண்களின் பயணம் இது என்று கொள்ளலாம்.
ஆனால் உங்களுடன் நான் முரண்படுவது உலகளாவிய #meToo ஒரு வகையில் பெண்ணிய ஒழுக்கவாத இயக்கம் என்பதைத் தான். தேசியம், வலதுசாரி தேசியம் முதலியவற்றோடு இனைத்து நீங்கள் சொல்வது சுவாரஸ்யமாக இருக்கிறது அதை மேலும் அறிந்துகொள்ள ஆவலைத்தூண்டுகிறது
இரா அவர்களின் குற்றசாட்டின் மீதுள்ள உங்கள் அவதானம் எனக்கு ஒரு திறப்பு
//“நான் எல்லா பெண்களையும் போன்று உனக்கு ஒரு மலிவான செக்ஸ் இலக்கா? நானும் எல்லா பெண்களும் ஒன்றா?”//