முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தேவி”: யாருடைய மனப்பிரமை அது?


வணக்கம் அபிலாஷ் 
நான் சசி, சேலம்.
நாங்கள் நண்பர்கள் எழுவர் சொற்சுனை எனும் அமைப்பில் ஒன்றுகூடி இலக்கிய உரையாடலை நிகழ்த்துவோம். பெரும்பாலும் சிறுகதைகள் குறித்து உரையாடுவோம். ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகளை தேர்வு செய்து நாள் முழுக்க பேசி விவாதிப்போம்இம்முறை நான் தேர்வு செய்தது நீங்கள் எழுதி உயிர்மையில் வெளியான தேவி எனும் சிறுகதை. கதையின் களம், தன்மை, நகர்தல் , சொல்முறை என எல்லா கோணத்திலும் இக்கதை என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அடிப்படையில் நான் பஷீரின் வாசகன். அவரது எழுத்தின்வழி, அவர் குறித்த பிறரின் எழுத்தின்வழி நான் அறிந்த பஷீரை அவரது பலம், பலவீனம் உட்பட சகல பரிமாணங்களோடும் ஒரு சிறுகதைக்குள் மீளுருவாக்கியிருப்பது சாதாரண விஷயமல்ல. உண்மை மனிதர்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கதைகளில் தேவி தனித்துவமானது. பஷீரை அவரது ஆன்மாவை எழுத்தின்வழி நெருங்கி உணர்ந்தாலொழிய இக்கதை சாத்தியமே இல்லை

எங்கள் விவாதத்தில் ஏறக்குறைய எல்லோரும் இக்கதையின் குறிப்பிட்ட பகுதியை நெருங்குகையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனோம். ஆம்...தான் எழுத்தில் தான் அறிமுகப்படுத்திய பஷீரை, தன்னைப்போன்றே ஆதர்சமாக்கிக்கொண்ட தன் மாணவி தேவியோடு காணப்போகிறார் ஆசிரியர். தனக்குள் தானே நிகழ்த்திய உரையாடலுக்கு பின் குழப்பங்கள் தெளிந்துஇந்தச் சந்திப்பை முன்வைத்து தன் காதலை சொல்லிவிடலாம் என தயாராகிறார். பஷீரின் விசித்திர நடவடிக்கையில் (இதுவும் ஆசிரியருக்கு தெரிந்ததுதான்) தவிர்க்கமுடியாமல் தேவியை அவரிடத்தே அதுவும் இரவில் விட்டுவிட்டு போகவேண்டியதாகிறது. விடிந்ததும் பயமும் ஏமாற்றமும் நிறைந்த பதட்டத்துடன் பஷீரை சந்தித்து தேவி குறித்து விசாரிக்கையில் அப்படி யாரும் இங்கு வரவில்லை எனும் அவரது பதில் வாசகனிடத்தும் பல்வேறு கேள்விகளை எழ செய்கிறது. உண்மையில் தேவி என்னவானாள்??? அல்லது அப்படியொரு சந்திப்பே நிகழவில்லையா??? 
எங்களில் ஒரு நண்பர் அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை. தேவியை பஷீரிடத்து விட்டதும் தான் விலகியதும் எல்லாம் இல்யூஷன் என்றார். சரிதான்...பஷீருடனான அச்சந்திப்பை நேரடியாக அர்த்தம்கொள்ளாது அந்த ஆசிரியரின் கற்பனையாக மட்டும் எடுத்துக்கொண்டால் வேறொரு விரிந்த அர்த்தம் புலனாகிறது. பஷீர் பிரத்யேக ஒளியைப்போன்றே சகலவற்றிலும் ஊடுருவுபவர். அக்னியை போன்று எல்லாவற்றையும் தனக்குள் இழுத்து அவற்றின் பரு உருவை இல்லாமலாக்குபவர் எனும் புரிதலுக்கும் சாத்தியமுண்டு. ஆனால் கதை சொல்முறையிலும் நடையிலும் வெளிப்படும் யதார்த்த தன்மை இவ்வகை புரிதல் கோளாறெனும் வாதத்திற்கும் நகர்த்துகிறது
உண்மையில் கதையின் இறுதிப்பகுதி தெளிவானால் நிச்சயம் இதன் முழுமையை உணர்ந்த பேரனுபவம் கிட்டுமென்று நம்புகிறேன். ஓர் அடர்வனத்தினூடே பிரயாணிக்கையில் திடீரென்று கவிந்த இருளில் தடுமாறுவது போன்றிருக்கிறது.
 மீள் வாசிப்புகளில் வழி தென்படலாம். ஆனாலும் எழுதியவன் துணைவரவேண்டிய தருணமிது. கதையின் சூட்சுமத்தை நோக்கி அழைத்துச்சென்றால் முழுமைகொள்வேன்.

அன்புள்ள சசி
தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். உங்களுடைய எதிர்வினை / பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மீண்டும் சிறுகதை எழுதத் தூண்டுதல் ஏற்பட்டது. நீங்கள் சொல்வது உண்மை தான் - அக்கதையில் மொழியின் பாய்ச்சல், உணர்ச்சிபூர்வமான ஒன்றுதல் நன்றாக அமைந்து வந்துள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் ரசிகனாக எனது ஒரு tribute ஆகவும் அக்கதையை அமைத்துக் கொண்டேன். இதற்கு முன்பு எனக்கு நகுலனைப் பற்றி இப்படி ஒரு கதை எழுத தூண்டுதல் ஏற்பட்டது. ஆனால் செய்யவில்லை. அதற்கான சரியான ஒரு வடிவம் வசப்படவில்லை என நினைக்கிறேன். இக்கதைக்கு அதன் வடிவம் அதிர்ஷ்டவசமாக எனக்கு சரியாகவே அமைந்தது
பஷீரின் மேதைமை ஒரு பக்கம் இருக்க, என்னைக் கவர்ந்தது அவரது பித்து. அந்த பித்துடன் மிக இயல்பாக அசாதாரணமாக அவர் வாழ்ந்தது. அதைக் குறித்த குறிப்புகள் அவரதுமதிலுகள்நாவலிலே வருகிறது. தனக்கு மனப்பிரச்சனை இருந்ததைப் பற்றி வேறு இடங்களில் எந்த மிகையும் இன்றி வெளிப்படையாகப் பேச அவர் தயங்கியிருந்ததில்லை. இதைப் பற்றி அலுவலகத்தில் யோசித்திருந்த ஒருநாள் பஷீர் தன் வீட்டு முற்றத்தில் மரத்தடியில் சாய்வு நாற்காலியில் சட்டையின்றி அமர்ந்திருக்கும் கறுப்பு வெள்ளைப் படத்தை என்னுடைய லேப்டாப்பில் வால்பேப்பராக வைத்திருந்தேன். அதைக் கண்ட என் பக்கத்து இருக்கை நண்பர்உங்களுக்கு நான் பஷீரைப் பற்றி ஒரு வித்தியாசமான கதையை சொல்லட்டுமா?” என ஆரம்பித்தார். அவரது நண்பரான கேரளாவை சேர்ந்த ஒரு கல்லூரி ஆசிரியர் பஷீரின் பரம ரசிகர். அவர் பஷீரை ஒருநாள் தன் தோழியுடன் பார்க்க சென்ற போது நடந்ததாக சொன்ன ஒரு கதைதான் இந்த சிறுகதையின் கரு.
 நான் அக்கதை நிகழும் காலத்தை, அப்போது பஷீர் இருந்த நிலைமை கற்பனை செய்து அமைத்துக்கொண்டேன். கூடுதலாக பஷீர் குறித்து ஆய்வு செய்தேன். கதையை அந்த பேராசிரியரின் பார்வையில் இருந்து சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன். கதை எதைப் பற்றியது எனும் கேள்வி வந்தது: புதிதாக சந்திக்க நேர்கிற ஒரு பெண்ணிடம் பஷீர் அதிர்ச்சிகரமாக என்ன சொல்கிறார் என்பது கதையாக இருக்கக் கூடாது என நினைத்தேன். இது பித்து பற்றின கதையாக இருக்க வேண்டும். ஆனால் பஷீரின் பித்து அல்ல. அவரைப் பார்க்க செல்லும் அந்த நண்பரின் பித்து. அவரது பித்தின் வழி பஷீரின் பித்தை நோக்க வேண்டும். கூடவே சுதந்திரத்துக்குப் பின்பான, காந்திக்குப் பின்பான இந்தியாவில் பொதுமக்களின் பித்தையும் லேசாய் குறிப்புணர்த்த வேண்டும் என நினைத்தேன். அதையும் விவரணைகளில் கொண்டு வந்தேன். அது தான்தேவி”.

உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன் என நினைக்கிறேன்: ஆம், அப்பெண் அவர்கள் இருவரின் மனப்பிரமையின் ஒரு வடிவம். பஷீரின் வழி அந்த மனிதர் காணும் பிரமை தான் அவள்.

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.