தினேஷை நான் முதலில் சந்தித்தது அவர் அப்போது நெறியாளராக வேலை செய்த ஒரு சேனலுக்கு கிரிக்கெட் குறித்த விவாதத்துக்கு சென்ற போதுதான். அது நான் பங்கேற்ற கிரிக்கெட் விவாதங்களில் மிகச்சிறந்ததாக அமைந்தது. தினேஷ் என்னுடைய “கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்” நூலைப் படித்திருந்திருந்தார். என் பார்வை என்ன என அறிந்து அதற்கு ஏற்ப அவர் கேள்விகளை எழுப்பியதால் என்னால் உணர்ச்சிகரமாய் உரையாட முடிந்தது. இவ்வளவு தயாரிப்புடன் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மற்றொரு நெறியாளரை நான் அதுவரைக் கண்டதில்லை. அதன் பிறகு பேஸ்புக்கில் அவர் சமகால கிரிக்கெட் வீரர்களைப் பற்றி எழுதும் பதிவுகளை மிகவும் ரசித்தேன்; குறிப்பாக வாக்னர் பற்றி அவர் எழுதியது இன்னும் கண்முன் நிற்கிறது, அவ்வளவு அற்புதமான கட்டுரை அது. நிறைய தரவுகள், அலசல்கள் என அவரது இயல்பான ஆய்வு மனப்பான்மை, உழைப்பு, தெளிவான கூர்மையான பார்வை எல்லாம் இப்பதிவுகளில் வெளிப்பட்டன. சொல்லப்போனால் இதுவரையில் தமிழில் எழுதப்பட்ட கிரிக்கெட் கட்டுரைகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் எழுத்தாக அவை அமைந்திருந்தன.
தினேஷுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
Comments